உயிரே உனக்காக.... (20)
இதுவரை: ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் நடக்க இருந்த மற்ற இரண்டு நாட்டிய நிகழ்ச்சிகளை ரத்து செய்ய புறப்பட்டாள் மதுரிமா. நரேனுக்கு போன் செய்து, நாட்டிய நிகழ்ச்சியை ரத்து செய்யும் அளவுக்கு, என்ன பிரச்னை என்று அறிந்து கொள்ள முயன்றாள் மதுரிமாவின் அம்மா. குழந்தை காணவில்லை என்று போலீசில் புகார் செய்த கவிதா, உடனே நரேனுக்கும் போன் செய்து தகவல் தெரிவித்தாள் —அடுத்த சில நிமிடங்களில், கலிபோர்னியாவின் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தான் நரேன். காரிலிருந்து இறங்கி, அவசரம், அவசரமாக உள்ளே நுழைந்தவனின் பார்வையில், கலங்கிய கண்களுடன் சோகமான கவிதையைப் போல, கவிதா அமர்ந்திப்பது தெரிந்தது. அவள் அருகே வந்து நின்றான்.குழந்தையைப் பற்றிய நினைவில் குழம்பியும், கலங்கியுமிருந்த கவிதாவின் கண்களில், மளமளவென்று கண்ணீர் பெருக்கெடுத்தது.''நரேன்... என் குழந்தையைக் காணோம். என்ன ஆச்சோன்னு பயமா இருக்கு!''''ஒண்ணும் ஆகியிருக்காது... கொஞ்சம் அமைதியாய் இரு; குழந்தையைக் கண்டு பிடிச்சுடலாம்.''அவர்கள் அருகே போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து நின்றார்.நரேனை மேலும், கீழுமாக ஒரு மாதிரியாக பார்த்து, ''மேடம்... ஹூ ஈஸ் ஹீ?'' என்று, கவிதாவிடம் கேட்டார்.''தெரிந்தவர்... என்னோட வெல் விஷர்; எங்க ஊர்க்காரர். சார்... இப்போதைய விஷயம், இவர் யார் என்பதல்ல; என் குழந்தையைக் கண்டுபிடிங்க... ப்ளீஸ்!''''மேடம்... இவர்கிட்ட விசாரிக்கிறதே உங்க குழந்தையைக் கண்டுபிடிக்கத்தான். சார்... இவங்க குழந்தையை நீங்க பார்த்திருக்கீங்களா?''''ஒரே ஒரு தடவை பார்த்திருக்கேன்; அழகான குழந்தை!''''ம்... ஒரு தடவையா... என்னைக்கு பார்த்தீங்க?''''நேற்று அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன்; அங்க தான் பார்த்தேன்.''''நேற்றுதான் குழந்தையைப் பார்த்திருக்கீங்க... பியூட்டி புல் சைல்டுன்னு சொல்றீங்க... அந்த குழந்தை உங்களை ரொம்பவே, 'இம்ப்ரஸ்' பண்ணியிருக்கு.''''ஆமா... அதுக்கென்ன இப்போ?''''வெயிட்... உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா... குழந்தை இருக்கா?''''எனக்குப் புரியல... இவங்க குழந்தை காணாமப் போனதுக்கும், எனக்குக் கல்யாணம் ஆகறதுக்கும், குழந்தை இருக்கறதுக்கும் என்ன சார் சம்பந்தம்?''''நேற்று நீங்க அந்த குழந்தையைப் பார்த்ததுக்கு அப்புறம் தான் குழந்தை காணாமப் போயிருக்கு.''''வாட் டூ யூ மீன்... அந்த குழந்தையை நான் கடத்தியதா சொல்றீங்களா... ரிடிகுலஸ்!''''மிஸ்டர் நரேன்... உங்களுக்கு பைத்தியக்காரத்தனமா படற பல விஷயங்கள், போலீசோட கோணத்துல பல அற்புதமான ரிசல்ட்டைக் கொண்டு வரலாம்.''''சாரி சார்... நரேன் என்னோட நண்பர் மட்டுமல்ல; அவர் ஒரு ஜென்டில்மேன். குழந்தையைக் கடத்தற மாதிரியான கீழ்த்தர வேலைகளை செய்யறவர் இல்ல.''உதவிக்கு கூப்பிட்ட நரேனை, அந்த அதிகாரி, போலீஸ் புத்தியுடன் அநாவசியமான கேள்விகளைக் கேட்டு, அவமானப்படுத்துவதை உணர்ந்து, மறுத்துப் பேசினாள் கவிதா.அந்த போலீஸ் அதிகாரி, நரேனையும், கவிதாவையும் மாறி, மாறிப் பார்த்து, அவர் பாணியிலேயே கிண்டலாகக் கேட்டார்...''ஈஸ் இட்... அப்ப வேற என்ன கீழ்த்தரமான வேலைகளை இவர் செய்வார்?''அவர்கள் இருவருமே அதிகாரியின் அந்தக் கேள்வியில் குன்றிப் போயினர். அவரது முதல் கேள்வியில், குழந்தையைக் கடத்தியதாக குற்றம் சாட்டுகிறார் என்று தோன்றியது நரேனுக்கு. இப்போதைய கேள்வியில் அவர்கள் இருவர் மீதும் சந்தேகப்படும் தொனி ஒலிப்பதை அவனால் உணர முடிந்தது.உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்த நரேன், அதை வெளிக்காட்டி மேலும் ரசாபாசமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பாமல், மவுனமாக நின்று கொண்டிந்தான்.''மிஸ்டர் நரேன்... உங்கள் மனைவியை நான் விசாரிக்க முடியுமா?''அதிகாரியின் இந்தக் கேள்வி, நரேனை நிலை குலையச் செய்தது. கவிதாவின் குழந்தை காணவில்லை என்று நானும், கவிதாவும் போலீஸ் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது, மதுரிமாவிடம் விசாரணையா?''என் மனைவியிடம் விசாரிக்க வேண்டுமா... பார் வாட்?''''வேறு எதற்கு? குழந்தையைக் கண்டு பிடிக்கத்தான்.''''கவிதாவின் குழந்தையை நானாவது ஒருமுறை பார்த்திருக்கிறேன்; என் மனைவி, பார்த்தது கூட கிடையாது!''''சரி ... அதனாலென்ன... அந்தக் குழந்தையை உங்கள் மனைவி பார்த்ததாக நானும் சொல்லவில்லையே!''''பிறகு எதற்காக என் மனைவியிடம் விசாரிக்க வேண்டும்?''''நரேன்... இது போலீஸ் ஸ்டேஷன். இங்கே நாங்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்; மாறாக, நீங்கள் என்னை விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மனைவி விஷயத்திற்கு பிறகு வருகிறேன். மேடம்... உங்கள் குழந்தை காணாமல் போனதில், உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?''அதிகாரியின் கேள்விக்கு பதில் சொல்லாமல், யோசனையில் மவுனமாக நின்றிருந்தாள் கவிதா.''நோ பிராப்ளம்... டேக் யுவர் ஓன் டைம்; நல்லா யோசிச்சுச் சொல்லுங்க.''''சார்... நான் யோசிக்கறதுக்கு இதுல ஒண்ணுமில்ல... எனக்கு, இந்த விஷயத்துல யார் மேலேயும் சந்தேகம் இல்ல.''''சார்... கவிதாவிற்கு சந்தேகம் இல்லாமல் போகலாம்... ஆனா, எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் இருக்கு,'' என்றான் நரேன்.அதிகாரி, மறுபடியும் அவர்கள் இருவரையும் மாறி, மாறிப் பார்த்தார்.''பரவாயில்லையே... சரி, சொல்லுங்க... உங்களுக்கு யார் மேல சந்தேகம்?''''ஒன் மிஸ்டர் ஆண்டர்சன்... டேவிட் ஆண்டர்சன்.''''ஆண்டர்சன்... ஹூ ஈஸ் தட்?''''கவிதாவின் கணவர்; ஐ மீன் முன்னாள் கணவர்.''அதிகாரியின் புருவம் மெல்ல சுருங்க, சில வினாடிகள் கண்களை மூடியபடி யோசனையில் இருந்தார்.''மேடம்... உங்களிடம் ஒரு கேள்வி. இவர் சொல்கிற உங்கள் முன்னாள் கணவர் மிஸ்டர் ஆண்டர்சன் எதற்காக உங்களது, 'முன்னாள் கணவராக' மாறிப் போனார்?''''சார்... அதெல்லாம் நடந்து முடிந்த கதை; இப்போது எதுக்கு அதெல்லாம்?''''மேடம்... கதை கேட்பது எங்கள் வேலையல்ல. உங்கள் பதில் மூலம்தான், காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.''கவிதாவின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. 'இன்னும் எத்தனை பேரிடம், நான் என் விவாகரத்து கதையை சொல்ல வேண்டுமோ? இப்போ, குழந்தையை கண்டுபிடிப்பதுதான் முக்கியம். அதற்காக, இந்த அதிகாரி கேட்கும் கேள்விக்கு பதிலளித்துதான் ஆக வேண்டும்...' என்று உணர்ந்தவளாய், தன் விவாகரத்து கதையை சுருக்கமாக கூறி முடித்தாள்.''மேடம்... உங்கள் மாஜி கணவரை நான் விசாரிக்க வேண்டும்... அவரை எப்படி தொடர்பு கொள்வது?''வேறு வழியில்லாமல், ஆண்டர்சனின் போன் நம்பரைக் கொடுத்தாள் கவிதா.ஆண்டர்சனைப் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார் அந்த அதிகாரி. பல முறை முயன்றும், அவரால் ஆண்டர்சனை, போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆண்டர்சனின் போன், 'ஸ்விட்ச் - ஆப்' செய்யப்பட்டிருப் பதாக அறிவிப்பு வந்தது.''மேடம்... அவர் லைன் கிடைக்கவில்லை. ஆண்டர்சனின் விலாசம் தர முடியுமா?''''அவர் இப்போது எந்த விலாசத்தில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஹார்வர்டு யூனிவர்சிட்டியில் மனோவியல் விரிவுரையாளராக வேலை பார்க்கிறார்.''கவிதா சொன்னதை அந்த அதிகாரி அவரது குறிப்பு புத்தகத்தில் குறித்துக் கொண்டார்.''ஓ.கே., உங்கள் புகாரை, நாங்கள் பதிவு செய்து கொள்கிறோம். கவலைப்படாதீர்கள்... சீக்கிரமே உங்கள் குழந்தை, உங்களிடம் வந்து சேரும், நீங்க போகலாம்,'' என்றார்.கவிதாவும், நரேனும் காவல் நிலையத்திலிருந்து புறப்பட்ட போது,''நரேன்... ஒன் மினிட், இந்த விஷயமா உங்க மனைவி கிட்டேயும் ஒரு சின்ன என்கொயரி பண்ண வேண்டி இருக்கு... உங்க வீட்டு விலாசம்.''''சார்... இப்ப என்னோட மனைவி வீட்ல இல்லை. அவங்க ஒரு டான்சர். ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா போயிருக்காங்க.''''இட்ஸ் ஓ.கே., உங்கள் மனைவி சிட்னியில எங்கே தங்கி இருக்காங்க... அவங்களோட போன் நம்பர்?''''எதுக்கு சார்?''''நிச்சயமா ஆஸ்திரேலியாவுக்குப் போய் அவங்களோட டான்ஸ் பாக்கறதுக்காக இல்ல... ப்ளீஸ், அவங்க போன் நம்பர் எங்களுக்கு வேணும்.''''சார்... இந்த என்கொயரி எங்க வாழ்க்கையில...''''நிச்சயமா எந்த பிரச்னையும் வந்துடாது; தைரியமா சொல்லுங்க.''கவிதாவைப் போலவே வேறு வழியின்றி, தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையில், மதுரிமா ஆஸ்திரேலியாவில் தங்கி இருக்கும் விலாசத்தையும், மொபைல் நம்பரையும் கொடுத்தான் நரேன்.கவிதாவும், நரேனும் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். மவுனமாக அவனுடன் நடந்து வந்த கவிதா, காரில் ஏறி அமர்ந்தாள்.திடீரென அழ ஆரம்பித்தாள்.நரேனுக்கு, அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது.''கவிதா... அழாதே ப்ளீஸ்!''''நரேன்... என் குழந்தை கிடைச்சுடுமா? இப்ப எனக்குன்னு இருக்கற ஒரே நம்பிக்கை என்னோட குழந்தைதான்.''''அழாதே... குழந்தை கண்டிப்பா கிடைச்சுடும்.''நரேன் காரை ஸ்டார்ட் செய்ய, இருவரும் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் செல்வதையே பார்த்தபடி, அந்த அதிகாரி நின்று கொண்டிருப்பது காரின் சைடு கண்ணாடியில் தெரிந்தது.''கவிதா... அடுத்து என்ன பண்ணப் போறோம்... எங்கே போகப் போறோம்?''''ஒண்ணும் புரியல நரேன்... ஒரே குழப்பமா இருக்கு.''''ஒண்ணு பண்ணுவோம்... முதல்ல சூடா ஒரு காபி குடிப்போம்.''அவன் சொல்வதை ஆமோதிப்பவளாக மவுனமாக இருந்தாள்.''கவிதா... இந்த ஆபிசர் அடுத்து செய்யப் போறத நினைச்சா கொஞ்சம் பயமா இருக்கு.''''ஆமா நரேன்... அவர், ஆண்டர்சனை விசாரிக்கறத பத்தி, நான் கவலைப்படல. அவர் மதுரிமாவை விசாரிக்கப் போறத நினைச்சா தான்... இந்த விஷயத்தை முன் கூட்டியே நாமே மதுரிமாகிட்ட சொல்லிடலாமா?''''வேணாம்... ஏற்கெனவே, அவள் நம்ம விஷயத்துல சாமி ஆடிக்கிட்டிருக்கா. இத நாமே சொன்னா, அந்த அதிகாரியை விட, பெரிய ஒரு விசாரணையை நம்மகிட்ட ஆரம்பிச்சுடுவா. வெயிட் பண்ணுவோம்.''அந்த அழகிய ஓட்டலுக்குள் இவர்களது கார் நுழைந்தது.அதே நேரத்தில், மதுரிமாவின் கார், அவள் தங்கியிருந்த ஓட்டலுக்குள் வந்து நின்றது.சபா செக்ரட்டரியைப் பார்த்து ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தைச் சொல்லி, டான்ஸ் புரோகிராமை ஒத்தி வைக்க சொல்லிவிட்டு, திரும்பி இருந்தாள் மதுரிமா.அவளது அம்மாவுடன் அன்றிரவே அமெரிக்கா திரும்புவதாக ஏற்பாடு. நாளைக்கு நரேனைப் பார்த்துவிடும் சந்தோஷம் ஒரு புறமும், கவிதாவைப் பற்றிய சிந்தனை மறுபுறமுமாக ஓட்டல் அறைக்குள் நுழைந்தாள்.அவர்களது துணிமணிகளை எல்லாம் சூட்கேசில் அடுக்கி, முடித்து, ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள் மதுரிமாவின் தாய்.''வா மது... போன காரியம் முடிஞ்சுடுத்தா?''''ம்... முடிஞ்சுடுத்து... நாளைக்கு அமெரிக்காவுல இருப்போம்.''''என்ன இருந்தாலும், இப்படி புரோகிராமை பாதியிலேயே ஒத்திவைத்துவிட்டு போறது உறுத்தலா இருக்கு.''''என்ன பண்றதும்மா... அதைவிட பெரிய உறுத்தல் என் மனசுக்குள்ள வந்துடுச்சே.''''மது... உங்கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா?''''என்ன கேட்கப் போற?''''இல்ல... நீயும், மாப்பிள்ளையும் இந்த ஒரு மாசமா சந்தோஷமாத்தானே இருக்கீங்க... அதுல எந்த பிரச்னையும் இல்லையே?''அம்மா எதைப்பற்றி அத்தனை தயங்கித் தயங்கி கேட்கிறாள் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.''அதுல உனக்கென்னம்மா சந்தேகம்... சந்தோஷமாத்தான் இருக்கோம்.''''அதுக்கில்ல மது... உன் கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் ஓடிப் போச்சு... அமெரிக்கா போனதும் உன்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போகணும்.''''டாக்டர்கிட்டேயா... எதுக்கும்மா... நான் நல்லாத்தானே இருக்கேன்.''''மக்கு மாதிரி கேட்கறியே... நீங்க சந்தோஷமா இருந்ததுக்கு சாட்சியா நல்ல விஷயங்கள் ஆரம்பமாயிருச்சான்னு தெரிஞ்சுக்க வேணாமா?''''அம்மா!''''ஆமா மது... நீ என்னை அம்மான்னு கூப்பிடுற மாதிரி, உன்னை அம்மான்னு கூப்பிட அழகா ஒரு குழந்தை வேணாமா?''அவளது முகம், நாணத்தில் மேலும் சிவந்து, அழகாய் மிளிர்ந்தது.''கவலைப்படாதேம்மா... நிச்சயம் நான் உன்னை ஏமாத்திட மாட்டேன்.''''எனக்கு தெரியும் மது. இதுக்காக ஆண்டவன் கிட்ட நிறைய நேந்துகிட்டிருக்கேன்... உன் குழந்தை உன்னை விட அழகா இருக்கும்.''''எத வெச்சும்மா சொல்ற?''''ம்... நம்ம வீட்டு மாப்பிள்ளையை வெச்சுத்தான்... அவரும் அழகாகத்தானே இருக்காரு...''அம்மா சொன்னதைக் கேட்டு, கவலை மறந்து கலகலவென சிரித்தாள் மதுரிமா.அப்போது —வாசலில் அழைப்பு மணி ஒலிப்பது கேட்டது.''அம்மா... யாருன்னு போய் பாரு.''மதுரிமாவின் தாய் யோசனையுடன் வந்து கதவைத் திறக்க, வெளியே இரண்டு ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரிகள் நிற்பதை பார்த்தாள் மதுரிமா. — தொடரும்.தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் - ஏ. நடராஜன்