உள்ளூர் செய்திகள்

உயிரே உனக்காக... (29)

இதுவரை: நரேனை விவாகரத்து செய்யும் மனநிலைக்கு தள்ளப்பட்டாள் மதுரிமா. இந்த விஷயம் அறிந்த நரேனின் சி.இ.ஓ., வைத்தீஸ்வரன், நரேனிடம் இதுபற்றி விவாதித்தான். மதுரிமா விவாகரத்து நோட்டீஸ் அனுப்புமுன், அவளுக்கு, விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப நரேனுக்கு ஆலோசனை கூறியதோடு, அதற்கான ஏற்பாட்டையும் செய்வதாக கூறினார் வைத்தீஸ்வரன்.மதுரிமாவுக்கும், நரேனுக்கும் இடையிலான பனிப்போர், இரண்டாம் நாளைக் கடந்து, மூன்றாம் நாள் காலையிலும் நீடித்தது. இருவரும், ஒருவருக்குகொருவர் பேசிக் கொள்வதைத் தவிர்த்தனர். தனித் தனியே உணவருந்தினர்; தனித் தனி அறையில் படுத்து உறங்கினர். மதுரிமாவோடு சேர்ந்து, அவள் தாயும், நரேனுடன் பேசுவதைத் தவிர்த்தாள்.மதுரிமாவும், நரேனும் இப்படி இருப்பது, அவர்கள் இருவருக்கும் இடையே பாலமாக செயல்படும் வேலைக்காரி ஜெசிகாவிற்கே கஷ்டமாக இருந்தது.மூன்றாம் நாள் காலை, நரேன் அலுவலகத்திற்கு புறப்படுவதற்கு சற்று முன், உணவு பரிமாறியபடி கேட்டாள் ஜெசிகா...''சார்... தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், ஒன்று சொல்லலாமா?''சாப்பிடுவதை நிறுத்தி, ஜெசிகாவை உற்றுப் பார்த்தான் நரேன்.''சார்... நீங்களும், மேடமும் இப்படி இருப்பது கொஞ்சம் கூட நன்றாக இல்லை.''''இதில், என் தவறு எதுவுமே இல்லை ஜெசிகா.''''உங்கள் இருவரில், யார் மேல் தவறு என்பது என் கேள்வி அல்ல சார். கணவன் - மனைவிக்குள் இதுபோன்ற விஷயங்கள் ரொம்பவும் சகஜமானவை. மேடத்திற்காக நீங்கள் கொஞ்சம் இறங்கி வரலாமே! இரண்டு நாளாக மேடத்தைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது.''''அப்போ... என்னைப் பார்த்தால் உனக்குப் பாவமாகத் தோன்றவில்லையா?''''சார்... நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. நீங்கள் ஆண்; உங்களால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், பெண்களின் நிலைமை வேறு.''அவள் சொன்னதைக் கேட்டு, சில வினாடிகள் யோசித்தான் நரேன். அவன் நினைவில் வைத்தீஸ்வரனும், அவரது வக்கீல் நண்பர் மூலமாக அனுப்பப் போவதாகச் சொன்ன விவாகரத்து நோட்டீசும் தோன்றி மறைய...''ஜெசிகா... நீ ஒண்ணு பண்ணேன். மதுரிமா ரொம்பவும் கஷ்டப்படுவதாக இருந்தால், அவளிடம் சொல்... நான் ஒன்றும் அவள் நினைக்கிற மாதிரி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. அவளை கொஞ்சம் இறங்கி வரச் சொல்லேன்.''''ஜெசிகா... கொஞ்சம் இப்படி வா.''நரேனும், ஜெசிகாவும் குரல் வந்த திசையை நோக்கி, ஒரே சமயத்தில் திரும்பிப் பார்த்தனர். வாசலின் கதவைத் திறந்து, ஒரு கையால் பிடித்தபடி வாசல் சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தாள் மதுரிமா.மதுரிமாவின் அருகே வந்து நின்றாள் ஜெசிகா.''ஜெசிகா... என்னைப் பற்றி ஏதாவது உன்னிடம் சொன்னேனா?''மதுரிமாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல், மவுனமாக நின்றாள் ஜெசிகா.''எனக்கு ரொம்பவும் சிரமமாக இருக்கிறது. எனக்காக அவரிடம் சமாதானம் பேசு என்று, உன்னிடம் நான் சொன்னேனா... எதற்காக என்னைப் பற்றி அவரிடம் பேசினாய்?''''மேடம்... உங்களைப் பற்றி சாரிடம் நான் எதுவும் தவறாகப் பேசவில்லை. நீங்கள் இப்படி பிரிந்து, பேசாமல் இருப்பது எனக்கே கஷ்டமாக இருந்தது.''''இதில் உனக்கு என்ன கஷ்டம் ஜெசிகா. என்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறதா; எந்த விதத்தில் பாவமாக இருக்கிறது? நானும், அவரும் வீட்டுக்குள் டூயட் பாடவில்லை என்றா?''மதுரிமாவின் வார்த்தைகள் கோபத்தில் வெடித்தன. அவள் அப்படிப் பேசுவாள் என்று, கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை ஜெசிகா. மதுரிமாவே தொடர்ந்து பேசினாள்...''என் மேல் பரிதாபப்படவோ, பாவம் பார்க்கவோ அல்லது என் புருஷனிடமே எனக்காக சிபாரிசு பண்ணவோ உனக்கு சம்பளம் கொடுக்கப் படவில்லை. உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்; புரிகிறதா?''அதுவரையில் மதுரிமாவை ஒரு எஜமானியைப் போல் பார்க்காமல், அவளது சகோதரியைப் போலத்தான் பாவித்து, பழகி வந்திருக்கிறாள். திடீரென்று, இதென்ன இப்படி ஒரு மாற்றம்? உள்ளூர வருந்தினாள் ஜெசிகா.'என்ன இருந்தாலும், நான் ஒரு வேலைக்காரி என்ற நினைவே மறந்து, நான் எல்லையை மீறி விட்டேனோ...' என்ற எண்ணம், அவள் கண்களில் நீர் கோர்க்க வைத்தது...''சாரி மேடம்!''''உன் சாரி யாருக்கு வேணும்? இன்னும் ஏன் நின்னுக்கிட்டிருக்க... போய் சூடா ஒரு காபி கொண்டு வா,'' என்றாள் மதுரிமாவின் அம்மா.மதுரிமாவின் தாயின் உக்கிரமும் சேர்ந்து தாக்க, சமையல்கட்டிற்கு செல்ல முற்பட்டாள் ஜெசிகா.அப்போது, ''சாரி ஜெசிகா... இப்ப உன்னைப் பார்க்கத்தான் எனக்கு ரொம்பவும் பாவமா இருக்கு; நான் வரேன்!'' என்றான் நரேன்.''பார்த்தியா மது... இப்பவும் அவருக்கு, உன்னைப் பார்த்தா பாவமாகத் தோணல; வேலைக்காரியைப் பார்த்தா தான் பாவமா இருக்கு. இதுல அவகிட்ட சாரி வேற.''மதுரிமாவின் தாய், சோபாவில் வந்து அமர்ந்தாள்; அம்மாவின் அருகே வந்து அமர்ந்து கொண்டாள் மதுரிமாவும்.இரண்டு கோப்பைகளில் காபி கொண்டு வந்து, இருவரிடமும் நீட்டினாள் ஜெசிகா. மதுரிமாவும், அவள் அம்மாவும் ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக் கொள்ள, அங்கிருந்து நகர முற்பட்டாள் ஜெசிகா.''ஜெசிகா... ஒரு நிமிஷம். என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதே... என்னுடைய கோபம் உன் மீதானது அல்ல.''''பரவாயில்லை மேடம்,'' என்று கூறி, அங்கிருந்து அகன்றாள்.மதுரிமாவின் செயல், அவளது அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.'சில நிமிடங்களுக்கு முன் ஜெசிகாவை அப்படிப் பேசிவிட்டு, உடனே எதற்காக இப்படி அதற்காக வருத்தம் தெரிவிக்கிறாள்!'மதுரிமாவின் மனநிலையும், மனிதர்களை அணுகும் முறையும், அவளது அம்மாவின் மனநிலையிலிருந்து முற்றிலும் மாறானது என்பதை, அவள் புரிந்து கொள்ளவில்லை. தான் அன்போடும், ஆசையோடும் நேசிக்கும் கணவன், தன்னிலிருந்து பிரிக்கப்பட்டு விடுவானோ என்ற பயத்திலும், சந்தேகத்திலும் அம்மாவின் யோசனைப்படி, நரேனை விட்டு சற்று விலகி இருக்கும் முடிவுக்கு வந்திருந்தாள் மதுரிமா.ஆனால், அந்த விலகல் நிரந்தரமானது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளாமல், ஜெசிகா, நரேனிடம் அவளுக்காக சிபாரிசு செய்ததை, அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படி ஒரு நிலைமைக்குக் காரணமான நரேனை எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலையில், அவளது கோபத்தை ஜெசிகா மீது காட்டிவிட்டாள். மற்றபடி, அவளுக்காக நல்லதை நினைத்த ஜெசிகாவை அவமானப்படுத்தும் எண்ணம், மதுரிமாவுக்கு நிச்சயம் இல்லை.''மது... கொஞ்சம் வெளில போற வேலை இருக்கு; சீக்கிரமா ரெடி ஆயிடுறியா?''''எங்கேம்மா?''''நாம இருக்கற நிலைமைக்கு ஊரை சுத்திப் பாக்கவா போக முடியும்; வக்கீல் ரங்கராஜனை பாத்துட்டு வரலாம்.''நரேன் வேண்டாம் என்ற முடிவுக்கு அம்மா வந்துவிட்டாள்; அதில் உறுதியாகவும் இருக்கிறாள்.'ஏதோ ஒரு வேகத்தில், அம்மாவின் பேச்சைக் கேட்டு, நரேன் விஷயத்தில் நான் தவறு செய்து கொண்டிருக்கிறேனோ? அம்மாவுடன் சென்று அந்த வக்கீல் ரங்கராஜனை பார்த்து, விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விடலாமா?'மதுரிமா, தனக்குள் யோசித்துக் கொண்டிருக்கும் போது, அழைப்பு மணி ஒலித்தது. மதுரிமாவின் அம்மா கதவைத் திறக்க, வெளியே கையில் நிறைய போஸ்ட் கவர்களுடன் குரியர் ஆள் நின்று கொண்டிருந்தான்.''மதுரிமா இருக்காங்களா?''மதுரிமா எழுந்து வந்தாள். குரியர் ஆள் காட்டிய இடத்தில் கையெழுத்தைப் போட்டு, அவன் கொடுத்த கவரை வாங்கி, மீண்டும் சோபாவில் அமர்ந்தாள்.''என்ன கவர், எங்கிருந்து வந்திருக்கு?''பதில் சொல்லாமல், கவரைக் கிழித்து, உள்ளிருக்கும் கடிதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள் மதுரிமா. படிக்க, படிக்க அவள் முகம் வியர்க்க ஆரம்பித்து, உடல் முழுக்க நனைந்து, சில வினாடிகளில் மயங்கி சரிந்தாள்.''மது... என்னம்மா ஆச்சு? கண்ணை திறந்து பாரும்மா...''மதுவின் தாய் கதறிய சப்தம் கேட்டு ஓடிவந்தாள் ஜெசிகா. இருவருமாக, மதுரிமாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து, அவள் உடலைப் பிடித்து உலுக்கியதில், மெல்ல கண்விழித்தாள் மதுரிமா.''மது... என்ன ஆச்சு... அது என்ன லெட்டர்? அதுல நீ மயக்கம் போடுற அளவுக்கு என்ன இருக்கு?''''இது லெட்டர் இல்லம்மா; வக்கீல் நோட்டீஸ்!''''வக்கீல் நோட்டீசா... உனக்கு யாரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கா?''''வேற யாருமில்லை; நரேன்தான் அனுப்பியிருக்கார்.''''நரேனா... என்னன்னு அனுப்பி இருக்கார்?''''அவர் நம்பள முந்திக்கிட்டாரு. விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்காரும்மா.''சொல்லிவிட்டு குலுங்கி அழுதாள் மதுரிமா. அவள் அப்படி அழுவதைப் பார்த்து, அவள் அம்மாவின் பெற்ற வயிறு பற்றி எரிய ஆரம்பித்தது.தலைவலியும், திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்.''இப்ப என்னம்மா பண்றது?''''இதுல புதுசா பண்றதுக்கு என்ன இருக்கு மது? ஏற்கெனவே நாம முடிவு செய்த விஷயம்தானே... பேசாம கையெழுத்தைப் போட்டு அனுப்பி வை.''''என்னம்மா... நீ ரொம்பவும் சுலபமா சொல்ற. அவர் கேட்டுருக்கறது என்னன்னு புரிஞ்சுகிட்டு பேசறீயா? விவாகரத்தும்மா. அப்புறம் நானும், அவரும் சேரவே முடியாதும்மா.''''என்ன மது... நாமும், அந்த முடிவிலதானே வக்கீலைப் பார்த்திருக்கோம்.''''அந்த முடிவுக்கு வந்தது நானில்லம்மா; நீ தான். எனக்கு பயமா இருக்கும்மா.''''பயப்படாதே மது... அம்மா நானிருக்கேன் இல்ல...''''எவ்வளவு நாளைக்கு? நீ என்னோட இருக்கறதும், அவர் என்னோட இருக்கறதும் ஒண்ணாம்மா?''மெல்லிய விசும்பலுடன் மதுரிமா கேட்ட ஒரு சாதாரண கேள்விக்குள், எத்தனை பொருள் பொதித்து கிடக்கிறது என்பதை, தானும் ஒரு பெண் என்பதால் மதுரிமாவின் அம்மாவால் புரிந்து கொள்ள முடிந்தது.''என்னம்மா... நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே...''''இதுல பதில் சொல்ல என்ன இருக்கு? வேணாம்ன்னு நோட்டீஸ் விட்டவன்கிட்ட வேணும், வேணும்ன்னு மேலே விழுந்து கெஞ்சவா முடியும்? உன்னோட கல்யாணம் ஒரு கெட்ட கனவுன்னு நெனச்சு மறந்துட வேண்டியதுதான்.''''மறந்துடுறதா? அத்தனை சுலபமா மறந்துடுற விஷயமா கல்யாணம்?''''ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருக்கும்; காலப் போக்கில் சரியாப் போயிடும். அவர் கூட வருஷக் கணக்கில் வாழ்ந்து புள்ளைங்களையா பெத்துக்கிட்ட?''''வருஷக் கணக்கு, வாரக் கணக்கு பார்க்கிற விஷயமாம்மா இது? நிமிஷக் கணக்கில வாழ்ந்தாலும், காலத்துக்கும் அதுதானேம்மா உறவு?''''மது... பத்தாம் பசலியாட்டம் பேசாதே! இந்தக் காலத்து பொண்ணுங்க வாழ்க்கையே எடுத்துக்குற விதமே வேறு. புரிஞ்சுக்க... இந்த அமெரிக்காவும் வேணாம், ஒண்ணும் வேணாம். பேசாம நம்ம சொந்த ஊருக்கே போயிடுவோம்.''''உறவே சொந்தம் இல்லேன்னு ஆனதுகப்புறம், ஊரு எப்படிம்மா சொந்தமாக இருக்க முடியும்?''''காலத்துக்கும் இப்படி சினிமா வசனம் பேசிக்கிட்டிருந்தா, ஒரு பிரயோசனமும் இல்ல. நம்ம ஊருக்குப் போயிடுவோம். காவிரி ஆத்துல ஒரு முழுக்குப் போட்டுட்டு, அடுத்த காரியத்தை பார்ப்போம்.''''அடுத்த காரியமா... என்னம்மா சொல்ற நீ?''''ஆமா... நீ இருக்கும் போதே அவருக்கு வேற ஒருத்தி கேக்குது இல்ல? அவர் இல்லேன்னு ஆனப்புறம் காலத்துக்கும் அவரையே நெனச்சு அழுதுகிட்டிருக்கவா முடியும்?''''புரியலம்மா...''''உன் அழகுக்கும், உங்கிட்ட இருக்கிற நாட்டியத்துக்கும் உன்னைக் கட்டிக்க, நூறு பேர் வரிசைல வந்து நிப்பாங்க. இவனைவிட நல்லவனா ஒருத்தனை நானே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.''''அம்மா...''இரு கைகளாலும், காதுகளை பொத்தியபடி கத்தினாள் மதுரிமா.''எதுக்கு இப்படி கத்தற மது?''''கத்தாம வேற என்ன பண்றது... நீ என்னை எத்தனை சாதாரணமாக எடை போட்டுட்ட? நீ என்னைக் கேவலப்படுத்தினதும் இல்லாம என் நாட்டியத்தை... ஏம்மா... நாட்டியம்கறது என்னன்னு நெனச்ச நீ? நாட்டியம்கறது ஆள் பிடிக்கற விஷயம் இல்லம்மா. அற்புதமான கலை.''போதும்மா... என் நாட்டியத்தைப் பார்த்துவிட்டு நரேன் ஒருத்தர் வந்து நின்றதே போதும். நீ யாரையும் வரிசையில் கொண்டு வந்து நிறுத்தி, இன்னொரு சுயம்வரத்திற்கு கல்யாண மாலையை கையில் எடுக்க நான் தயாரில்லை. இனிமேல், நான் நாட்டியமே ஆடப் போவதில்லை.''மதுரிமாவின் குரல் உறுதியுடன் ஒலித்தது.''இனி நாட்டியம் ஆடப் போவதில்லையா... உனக்கென்ன பைத்தியமா?''''நீ எப்படி வேணாலும் நெனச்சுக்க. நான் இனி நடனம் ஆடப் போவதில்லை.''சொல்லிவிட்டு, வேகமாக அவளது அறைக்குள் சென்றாள் மதுரிமா. அவளது கட்டிலில் குப்புற விழுந்து தலையணையில் முகம் புதைத்தபடி, அழ ஆரம்பித்தாள்.மதுரிமா படுக்கையில் படுத்தபடி அழுது கொண்டிருந்த அதே நேரத்தில், வைத்தீஸ்வரனின் கேபினில், அவருக்கு எதிரே அமர்ந்தபடி, தேநீர் குடித்துக் கொண்டிருந்தான் நரேன்.''நரேன்... அநேகமாக இந்த நேரத்திற்கு நம்முடைய திட்டம், 'ஒர்க் அவுட்' ஆக ஆரம்பித்திருக்கும்.''''சார்... எனக்கென்னமோ பயமா இருக்கு. நான் தப்பு பண்ணிட்ட மாதிரி தோணுது சார்.''''நீ தப்பு பண்ணிட்டதா நெனச்சது உன்னோட மனைவி மதுரிமாவோட தப்பு நரேன்.''சொல்லிவிட்டு சிரித்தார் வைத்தீஸ்வரன். அவர் சொல்வதில் உள்ள உண்மை நரேனுக்குப் புரிந்தது. வைத்தீஸ்வரன் தொடர்ந்தார்...''நரேன்... எண்ணித் துணிக கருமம்... திருக்குறள் படிச்சிருக்கே இல்ல?''அவர் தன்னை கிண்டல் செய்வதைப் போல் உணர்ந்தான் நரேன்.''உண்மைதான் சார்... எண்ணாம துணிஞ்சிட்டேனோன்னு இப்ப தோணுது.''''பயப்படாதே... இந்த ஐடியா கொடுத்தது நான்தான். எண்ணாமல் துணியறது என் பழக்கமே இல்ல; எல்லாம் நல்லாவே முடியும்.''அந்த நேரத்துக்கு, அவர் அவனுக்குள் சமாதானம் சொல்வதைப் போல் உணர்ந்தான் நரேன்.''எனக்கென்னமோ மதுரிமாகிட்ட சமாதானமா போயிடலாமான்னு தோணுது.''''உனக்கென்ன பைத்தியமா? நீ என்ன மதுரிமாகிட்ட சண்டையா போட்டே?''''அதுக்கில்ல சார். ஒருவேளை உங்க திட்டம் பலிக்காம போயிட்டா?''''ஆயிட்டு போகட்டும்; அதனாலென்ன?''''அதனாலென்னவா... மதுரிமா என்னோட உயிர் சார். மதுரிமா இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நெனச்சுக்கூட பார்க்க முடியல.''''நரேன்... நீயும், மதுரிமாவும் காதலர்கள் இல்ல. நீங்க ரெண்டு பேரும் இப்ப கணவன் - மனைவி; ஆனா, நீ இன்னமும் காதலனாவே இருக்கே.''''நீங்க சொல்றது எனக்குப் புரியல. கல்யாணத்துக்கப்புறம் காதலனா இருக்கறது தப்பா?''''நான் சொன்னதை நீ சரியா புரிஞ்சுக்கல. கல்யாணத்துக்கப்புறம் காதல் இருக்கணும்; ஆனால், கணவனும் - மனைவியும் காதலன் - காதலி மாதிரியே இருந்துடக் கூடாது. நிறைய விஷயங்கள்ல மெச்சூரிட்டி வரணும். உங்க ரெண்டு பேரோட பிரச்னையே அதுதான்.''''நீங்க மெச்சூரிட்டின்னு எத சொல்றீங்க சார்?''''உண்மையிலேயே ஒரு தப்பு நடந்திருந்து, அதன் மூலமா ஒரு பிரச்னை வந்திருந்தா, அதுல ஒரு அர்த்தமும், நியாயமும் இருக்கும். ஆனா, ஒரு தப்புமே நடக்காம, தப்பு நடந்துகிட்டிருக்கிறதா உங்களுக்குள்ள பிரச்னை. நான் எதை மெச்சூரிட்டின்னு சொல்றேன்னு இப்ப புரியுதா?''''சார்... செக்ஸ் விஷயத்தில் எனக்கும், மதுவுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை சார்... பிலீவ் மீ!''வைத்தீஸ்வரனை போலவே, நரேனும் வெட்கப்படாமல் வெளிப்படையாகப் பேசினான்.''அதில் எந்தப் பிரச்னையும் இல்லைங்கறதும் சமயத்தில் பிரச்னையாகிவிடும். செக்ஸ் என்பது கணவன் - மனைவிக்குள் ஒரு சுகமான தேடல். அதில், எந்தப் பிரச்னையும் இல்லையென்றால் அது ஒரு சுவாரசியமற்ற விஷயமாகி நாளடைவில் ஒருவர் மீது மற்றவருக்கு ஒரு விதமான சலிப்பை ஏற்படுத்தி விடும்.''''எங்கள் திருமணமே இப்போதுதான் நடந்திருக்கிறது. இதற்குள் சலிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை. நீங்கள் சொல்கிற காரணம் சரியாகப்படவில்லை.''''சலிப்பு ஏற்படுவது ஒருவகை. சில நேரங்களில் அது சந்தேகம், பொறாமை, காம்ப்ளக்ஸ், ஈகோ என்று வேறு வேறு பெயர்களில் வந்து நம்மை மிரட்டும். இதைத் தவிர்க்க கணவன் - மனைவிக்கிடையே புரிதல் என்பது மிக அவசியமான ஒன்றாகிறது.''''புரிகிறது. இதை நாங்கள் புரிந்து கொள்ளத்தான் விவாகரத்து என்ற இந்த இடைவெளி நாடகம். எப்படியோ முடிவு நன்றாக இருந்தால் சரி.''''நிச்சயம் நன்றாக இருக்கும்; போய் நிம்மதியாக வேலையைப் பார்.''அவரிடம் விடைபெற்று, அவனது கேபினுக்குள் வந்தமார்ந்தான் நரேன். வைத்தீஸ்வரன் பேசியதில், அவனுக்கு மன இறுக்கம் சற்று தளர்ந்த மாதிரி இருந்தது.அதே நேரத்தில், மனம் இறுகிவிட்ட நிலையில், நரேன் மேலும் வருந்தப் போகும் ஒரு காரியத்தில் ஈடுபட்டிருந்தாள் மதுரிமா.— தொடரும்.- தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !