உள்ளூர் செய்திகள்

உயிரே உனக்காக.... (31)

இதுவரை: நரேனை பிரிந்து, இந்தியா திரும்ப முடிவெடுத்தனர் மதுரிமாவும், அவள் அம்மாவும். மதுரிமாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க போவதாகவும் தெரிவித்தாள் மதுரிமாவின் அம்மா. இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகும் ஐடியா தனக்கு இல்லையென்றும், நரேனை மீண்டும் தன் பக்கம் திருப்பி, அவனுடன் சேர்ந்து, வாழ்ந்து காட்ட போவதாகவும் கூறினாள் மதுரிமா —லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் —மதுரிமாவும், அவள் அம்மாவும் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். இந்தியா புறப்படும் விமானத்தின் பயணிகளுக்கான ஒலிபரப்பு அழைப்பிற்காக அவர்கள் இருவரும் காத்திருந்தனர். அவர்களது உடமைகள் கஸ்டம்ஸ் பரிசோதனைக்காக ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டன. மதுரிமாவின் அருகே அமர்ந்திருந்தார் கும்பகோணம் வைத்தீஸ்வரன். உண்மையிலேயே வாழ்க்கை என்பது, மிகவும் வித்தியாசமானதுதான். மாற்றம் வராதா என்று நாம் ஏங்கித் தவிக்கும் போது, எவ்வித மாற்றமும் இல்லாமல், நாம் சலித்துக் கொள்ளும் அளவிற்கு, வாழ்க்கை வருடக் கணக்கில் அப்படியே தேங்கி நிற்கிறது. அதே நேரத்தில், சில நிமிடங்களிலேயே நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவிற்கு, வாழ்க்கை அடியோடு தலைகீழாகவும் மாறிப் போகிறது!எத்தனை கனவுகளோடும், ஆசைகளோடும் திருமணம் செய்து கொண்டாள் மதுரிமா; ஆனால், இப்போது... அத்தனை ஆசைகளும் வெறும் கனவுகளாய் மாறிப் போய் விட்டன.அந்த நினைவே மதுரிமாவுக்கு கசந்து, அவள் இதயத்தை கனக்க வைத்து, கண்களில் நீர் கோர்த்தது. நரேனைப் பிரிந்து செல்வது, அவளை எப்படி பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காகவே வந்திருந்த வைத்தீஸ்வரன், அவள் தனக்குள் அழுவதை கவனித்து விட்டார்...''மது... என்ன ஆயிடுச்சு; எதுக்கு இப்ப அழற?''''ஒண்ணுமில்ல...''''ஒன்றுமில்லாததற்கு அழ, நீ ஒண்ணும் குழந்தை இல்லை.''''உண்மைதான்... குழந்தையாகவே இல்லாம போயிட்டோமேன்னு அழறேன்.''''இப்ப நீ குழந்தை மாதிரியே பேசற... நாம எதிர்பார்க்கிற மாதிரியே நம்ம வாழ்க்கை எல்லா நேரங்களிலும் அமையறதில்ல; அப்படி அமையவும் கூடாது. நாம எதிர்பார்க்காத விஷயங்களும், நம்ம வாழ்க்கையில் நடக்கும்; நடக்கணும்.''''உண்மைதான்... ஆனால், நீங்கள் சொல்ற எந்த எதிர்பார்க்காத விஷயமும், வாழ்க்கையில் அதுவாகவே நடந்து விடுவதில்லை. அந்த விஷயம் நடப்பதற்கு ஏதோ ஒரு விதத்தில் நாமும் காரணமாய் இருந்திருப்போம்.'''இங்கே காரணம் என்று மதுரிமா யாரைச் சொல்கிறாள்? அவளையா, நரேனையா?' என்று யோசித்துப் பார்த்தார் வைத்தீஸ்வரன்.வேண்டுமென்றே, அவளை வம்புக்கிழுப்பது போல் பேசினார்...''ஆனால், இந்த விஷயம் நடந்திருப்பதற்கு எந்த விதத்திலும் நரேன் நிச்சயமாக காரணம் இல்லை.''''அப்போ... நான்தான் காரணம்ன்னு சொல்றீங்களா?''''நீதான் காரணம்ன்னு நான் சொல்லலையே. நரேன் காரணம் இல்லேன்னு மட்டும் தானே சொன்னேன்.''''காரணம் அவரும் இல்ல; நானும் இல்ல. அப்ப வேற யார் காரணம்; கவிதாவா?''மதுரிமா கேட்பதை நினைத்து, வைத்தீஸ்வரன் சிரித்துவிட்டு சொன்னார்...''இல்ல... கவிதாவும் காரணம் இல்ல. எல்லா கணவன் - மனைவிக்கும் இடையே இப்படி ஒரு பிரச்னையும், சூழ்நிலையும் ஏற்படறதுக்கு பொதுவான வேற ஒரு காரணம் இருக்கு.''''அது என்ன பொதுவான காரணம்?''அவர் எதைப் பற்றி சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ளாதவளாய், மதுரிமா கேட்ட கேள்விக்கு நிதானமாக பதில் சொன்னார் வைத்தீஸ்வரன்...''செக்ஸ்... ஆண் - பெண் இருவருக்கும் இடையிலான உடல் ரீதியான உறவு.''அவர் சொன்னதைக் கேட்டு, ஒரு விநாடி திடுக்கிட்டுப் போனாள் மதுரிமா...'என்ன இது... இந்த மனிதர் திடீரென்று வேறு எதைப் பற்றியோ பேச ஆரம்பிக்கிறார்!'அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாதவளாய் மவுனமாயிருந்தாள் மதுரிமா.''ஆமாம் மது... ஆண் - பெண், அதிலும் குறிப்பாக, கணவன் - மனைவி என்ற முக்கிய உறவுக்கு இடையே ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்த செக்ஸ் தான் அடிப்படைக் காரணமாயிருக்கும்.''''அதெப்படி... எல்லா பிரச்னைகளுக்கும் செக்ஸ் காரணமாகி விடும்? செக்ஸ் சம்பந்தப்படாத எத்தனையோ வெவ்வேறு பிரச்னைகள் இல்லையா?''''நீ சொல்வது தவறு... அவர்களது பிரச்னைகளில் ஏதோ ஒரு விதத்தில் செக்ஸ் சம்பந்தப்பட்டிருக்கும்; அதை, அவர்கள் உணர்வதில்லை. மது... நீ ப்ராய்டு படித்திருக்கிறாயா?''''கேள்விப்பட்டிருக்கிறேன்; படித்ததில்லை.''''பிராய்டு, இந்த விஷயத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட ஆசாமி. இதைப் பற்றி என்னென்ன விதமாய் அவன் யோசித்திருக்கிறான். நமக்குள் எழும் ஆசை, கோபம், பயம் போன்ற நவரச உணர்வுகளுக்கும், அதன் வெளிபாடுகளுக்கும் இதன் தாக்கம் காரணமாய் அமைந்திருக்கும் என்பது அவனுடைய அசைக்க முடியாத கருத்தும், ஆய்வும்!''மதுரிமாவுக்கு, ஏனோ கவிதாவின் கணவன் ஆண்டர்சனைப் பற்றிய நினைவு தோன்றியது.''இதைப் பற்றியெல்லாம் கூட மனிதர்கள் ஆராய்ந்து கொண்டிருப்பரா?''''இது, விமான நிலையத்தில் அமர்ந்து விவாதிக்கிற விஷயம் அல்ல. பல தலைமுறைகளாக இன்றைக்கும் தொடர்ந்து ஆராயப்படும் விஷயம். ஊருக்குப் போன பிறகு நேரமிருந்தால், பிராய்டை படித்துப் பார். நிறைய விஷயங்கள் உனக்கே புரியும்.''அப்போது, ஒலிபெருக்கியில் பயணிகளுக்கான அழைப்பு விடப்பட, மதுரிமாவும், அவள் அம்மாவும் இருக்கையிலிருந்து எழுந்தனர்.'இனி, நரேனை எப்போது சந்திக்கப் போகிறேன். ஒரு வேளை, நரேனை அவனது மனைவி என்ற பெருமைக்குரிய ஸ்தானத்தில் இருந்து, என நினைத்தால் சந்திக்கவே முடியாமல் போய் விடுமா?'''மது... உன் இனிமையான பயணத்திற்கு என் வாழ்த்துக்கள். எல்லாம் நன்மைக்கே என்பதற்கேற்ப, இந்த பயணமும் ஏதோ ஒரு நன்மைக்காக இருக்கட்டும்.''''தேங்க் யூ சார்...'' என்ற மது, தன் தாயோடு விமானத்தை நோக்கி நடந்து செல்வதை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் வைத்தீஸ்வரன்.சென்னை விமான நிலையம் —மதுரிமாவையும், அவள் அம்மாவையும் வரவேற்று அழைத்துச் செல்ல, மதுவின் அப்பா வரவில்லை. மாறாக, அம்மா சொன்ன அவளது அண்ணன் மகன் பாஸ்கரன் வந்திருந்தான். பாஸ்கரனை சில விநாடிகளுக்கு உற்றுப் பார்த்தாள் மதுரிமா.நரேனைக் காட்டிலும், சற்று உயரமாகவும், கொஞ்சம் தடித்த உடலோடும் காணப்பட்டான் பாஸ்கரன்; ஆனால், நரேன் முகத்தில் காணப்படும் அந்த ஒளி, பார்ப்பவரை சுலபத்தில் ஈர்க்கும் அந்த வசீகரம் இந்த பாஸ்கரன் முகத்தில் இல்லை.'என்ன இது... நான் எதற்காக இந்த பாஸ்கரனை, நரேனோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்? ஒரு வேளை, அம்மா எனக்குள் செலுத்திய பாஸ்கரனைப் பற்றிய எண்ணம், எனக்கும் தெரியாமலேயே, என்னுள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதோ!'பாஸ்கரனைப் பற்றி யோசிப்பதை விலக்கித் தள்ளினாள் மதுரிமா.''ஹாய் மது.. வெல்கம் டூ சென்னை.''''தேங்க் யூ... அப்பா வரவில்லையா?''''இல்ல மது... இன்னைக்கு மாமாவுக்கு எதுவோ முக்கியமான வேலை இருக்காம். அதான் என்னை அனுப்பி வைச்சார். நீ மட்டும் வந்திருக்கே; நரேன் வரலையா?''''பாஸ்கரா... இவளோட ஆத்துக்காரரும், உன்னோட மாமாவும், அதான் என் ஆத்துக்காரரும் ஒரே ஜாதி...''''ஒரே ஜாதியா... நீங்க என்ன சொல்றீங்க அத்தை, புரியலையே...''''இவ கூட இவளோட ஆத்துக்காரர் வரல. என்னை அழைச்சிட்டுப் போக, உன் மாமாவும் வரல. இவா ரெண்டு பேருக்கும் பொண்டாட்டிங்கறவ ரெண்டாம் பட்சம். அதான் ஒரே ஜாதின்னு சொன்னேன்.''அழைத்துச் செல்ல கணவர் வரவில்லை என்ற ஆதங்கத்தைக் காட்டிலும், வேறு எதற்கோ அம்மா, அப்பாவின் மேல் குற்றம் சுமத்துகிற மாதிரி மதுவிற்குப் பட்டது.அவர்கள் மூவரும் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தனர். மதுரிமாவும், அவள் அம்மாவும், வெளியே காத்திருந்த காரின் பின் சீட்டில் அமர, காரை ஓட்டினான் பாஸ்கரன்.அன்று மாலை, 5:00 மணி அளவில்...வீட்டில் சோபாவில் அமர்ந்து, பத்திரிகையை புரட்டிக் கொண்டிருந்தாள் மதுரிமா. அமெரிக்காவில் சுடிதாரிலும், சல்வார் கமிசிலும் காட்சி அளித்த மது, வெகு நாட்களுக்குப் பிறகு, சேலை, ரவிக்கை அணிந்து, பார்க்க ரம்மியமாக இருந்தாள். திடீரென்று மதுரிமாவின் நினைவில் ஏதோ உறைத்தது.நரேனை தன்னிடம், 'இம்ப்ரஸ்' ஆக வைத்த ஆடை அல்லவா இது. நாரத கான சபாவில் அவள் நாட்டிய நிகழ்ச்சியின் போது, இந்த சேலை, ரவிக்கையில் தான், நரேன், அவளை முதல் முதலாக சந்தித்தான்.அவள் அணிந்திருந்த சேலையை மெல்ல வருடிக் கொடுத்தாள்.மதுவிற்கு, நாரத கான சபாவுக்கு போக வேண்டும் என்ற உணர்வு தோன்றியது.பத்திரிகையில், 'இன்றைய நிகழ்ச்சிகள்' பகுதியை பரபரப்புடன் பிரித்துப் பார்த்தாள். ''அம்மா... நாரத கான சபா வரையிலும் போயிட்டு வரட்டுமா?''இன்னைக்குத்தானே வந்திருக்கே... இன்னொரு நாள் போகலாம்.''''இல்லம்மா... மனசுக்கு என்னவோ போல இருக்கு. வீட்ல சும்மாதானே இருக்கப் போறேன். இன்னிக்கு ஆடுறவங்க ரொம்ப நல்ல டான்சர்.''''உன்னை விடவா?''''ஆமா... ஒரு விதத்துல என்னோட இன்ஸ்பிரேஷனே இவங்கதான்... ப்ளீஸ்!''''சரி, போய்ட்டு வா... ஆனா, தனியே போகாதே; பாஸ்கரனை கூட்டிட்டுப் போ...''''பாஸ்கரையா... எதுக்கும்மா?''''எதுக்கா... எல்லாத்துக்கும்தான்... டான்ஸ் முடிஞ்சப்புறம் தனியா வரணுமில்ல? பாஸ்கர் இருந்தா உனக்கும் ஒரு கம்பெனியா இருக்குமில்ல.''அம்மா பேசுகிற அனைத்திலுமே, ஏதோ ஒரு அர்த்தம் இருப்பது போல் மதுரிமாவிற்கு தோன்றியது. அம்மாவின் இந்த எண்ணத்தை இப்படியே வளர விடக் கூடாது. அதற்காக இப்போதைக்கு பாஸ்கரை வேண்டாம் என்று மறுத்தால், அவள் எங்கே தன்னையே போக வேண்டாம் என்று தடுத்து விடுவாளோ என்ற பயமும் தோன்றியது.''சரிம்மா... பாஸ்கரோடே போகிறேன்.''சம்மதித்தாள் மதுரிமா.அம்மா, பாஸ்கரிடம் விஷயத்தை சொல்ல, இதற்காகவே காத்திருப்பவன் போல், சந்தோஷமாக மதுவுடன் புறப்பட்டான் அவன்.நாரத கான சபா கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி, இருவரும் டிக்கட் கவுன்டரை நோக்கி நடந்தனர். பாஸ்கர் டிக்கட் வாங்கிவிட்டு மதுவிடம் சொன்னான்...''மது... நாட்டியம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கு. கேன்டீனில் ஏதாச்சும் லைட்டா டிபன் சாப்பிடுறீயா?''''டிபன் வேணாம்... சூடா காபி சாப்பிடுறேன்; நீ வேணும்ன்னா சாப்பிடு பாஸ்கர்.''பாஸ்கர், அவளது மாமாவின் மகன் என்பதாலும், அவளுடன் ஏற்கனவே பழகி இருந்ததாலும், அவனை ஒருமையிலும், பெயர் சொல்லியும் அழைத்தாள் மது.இருவரும் கேன்டீனில் வந்து அமர்ந்தனர்.அவர்களுக்கு அருகே இருந்த டேபிளில், நான்கைந்து பெண்கள் அமர்ந்து, சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஜீன்ஸ் பேன்ட்டும், 'குட்டை டாப்ஸ்' எனப்படும், கையில்லாத குட்டை ரவிக்கைகளும் அணிந்திருந்தனர்.மதுவிற்குள் மீண்டும் ஒரு பழைய ஞாபகம்...அமெரிக்காவில் இருந்த போது, ஒரு அழகான மாலையில், இதே போல் ஒரு நிகழ்ச்சிக்காக அவளும், நரேனும் புறப்படுவதற்கு சற்று முன்பாக, மது ஆடை மாற்றிக் கொண்டிருந்த அறைக்குள், நரேன் திடீரென்று நுழைய...'மது... நீ இன்னுமா டிரஸ் பண்ணி முடிக்கல?''தெரிஞ்சுக்கிட்டே உள்ள வந்துட்டு, இதென்ன கேள்வி?'ஆடை முழுவதுமாய் அணியாத நிலையில், பொய்யான கோபத்துடனும், வெட்கத்துடனும் மது கேட்ட போது, நரேன் அவளையே உற்றுப் பார்த்தபடி...'மது... இன்னைக்கு ஜீன்ஸ் ட்ரை பண்ணிப் பாரேன்...' சொல்லிவிட்டு, கண்களை சிமிட்டியபடி சிரித்தான் நரேன்.'என்னது ஜீன்சா... அதெல்லாம் நம்மால முடியாது; சாரி...''ஓ.கே., நான் உன்னை கட்டாயப்படுத்தல; உன் விருப்பப்படியே வரலாம்...'நிகழ்ச்சிக்கு புடவையில் சென்ற மதுரிமாவுக்கு, நரேனின் ஆசையை, நிராகரித்து விட்டோமே என்று தோன்றியது.அன்றிரவு —நிகழ்ச்சி முடிந்து, வீட்டிற்குத் திரும்பி, அறையில் ஆடை மாற்றும் போது...'நரேன்... கொஞ்ச நேரம் வெளில இருக்கீங்களா?''ஏன்... இப்ப என்ன ஆயிடுச்சு?''சொன்னா கேக்கணும்... ப்ளீஸ். அஞ்சு நிமிஷத்துல நானே கூப்பிடுறேன்...'நரேன் அந்த அறையிலிருந்து வெளியே வந்தான். சில நிமிடங்களில் மது அழைத்தாள்.'நரேன்... உள்ளே வரலாம்...'உள்ளே சென்று பார்த்த போது, பிரமித்துப் போனான் நரேன். அவன் கழற்றி மாட்டியிருந்த ஜீன்ஸ் பேன்ட்டையும், அரைக்கை சட்டையையும் அணிந்தபடி, சிரித்துக் கொண்டே கேட்டாள் மதுரிமா...'எப்படி இருக்கேன்... நல்லா இருக்கேனா?''சூப்பரா இருக்கே மது... நாளைக்கு முதல் வேலையே உனக்கு ஜீன்ஸ் வாங்கறதுதான்...'எத்தனை இனிமையான நேரம் அது...'அந்த நரேனையா நான் பிரிந்து வந்திருக்கிறேன்? அந்த நரேனுக்காக, அம்மா சொன்னாள் என்பதற்காக விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப சம்மதித்தேன்? அந்த நரேனா, எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறான்?'நம்ப முடியாதவளாய், உணர்வுகளில் தத்தளிக்க, அவளில் இருந்த விம்மல் வெளிப்பட்டது.''மது... என்ன ஆச்சு... ஏன் அழற?''பதறிப் போய் கேட்டான் பாஸ்கரன்.''ஒண்ணுமில்ல... சாரி பாஸ்கர். வா... போகலாம்.''மதுவும், பாஸ்கரும் கேன்டீனிலிருந்து வெளியே வந்தனர். மவுனமாகவே அரங்கத்திற்குள் வந்து, இருக்கையில் அமர்ந்தனர். நாட்டியம் ஆரம்பிக்கும் நேரம் நெருங்கி விட்டதால், ஒவ்வொருவராக உள்ளே வந்து கொண்டிருப்பதை மது பார்த்துக் கொண்டிருந்த போது —உடலில் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட, கண்களை கசக்கி, வாசலையே உற்றுப் பார்த்தாள் மது.மதுவின் அப்பா வந்து கொண்டிருந்தார். அவரை ஒட்டியபடியே, அப்பாவோடு வரும் அந்த பெண் யார்?இத்தனை வயது வரை, அப்பாவுடன் பார்த்தறியாத யாரோ ஒருத்தியுடன், அப்பா இத்தனை நெருக்கமாக எதையோ பேசியபடி...தன்னைப் போலவே, அவர்களை பாஸ்கரும் பார்க்கிறானா என்று, ஓரக்கண்ணால் கவனித்தாள் மது.அவர்களைப் பார்க்க விரும்பாதவனைப் போல், முகத்தை வேறு பக்கமாகத் திருப்பி அமர்ந்திருந்தான் பாஸ்கரன்.'ஒருவேளை அப்பாவைப் பற்றிய இந்த விஷயம், இவனுக்கு முன்பே தெரிந்திருக்குமோ? அம்மாவும் இதை அறிந்திருப்பாளோ?'அப்பாவும், அந்தப் பெண்ணும், மது அமர்ந்திருந்த வரிசைக்கு முன் வரிசையில் அமர்ந்தனர்.அந்தப் பெண்ணையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மது.அந்தப் பெண்ணிற்கு, அம்மாவை விட ஒன்றிரண்டு வயது குறைவாக இருக்கும். அம்மா கொஞ்சம் தளர்ந்து போயிருந்தாள்; இந்தப் பெண், அம்மாவைப் காட்டிலும், கொஞ்சம் மதர்ப்பாகவும், அளவான மேக்-அப்பிலும் பார்வைக்கு ரசனையாகவே தெரிந்தாள்.அப்பா, இப்படி ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டிருக்கிறார் என்பது மதுவிற்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. 'அப்பா எதனால் இப்படி?'நரேன், தன்னை ஜீன்ஸ் அணிந்து பார்க்க ஆசைப்பட்டதும், அதை, அவள் நிறைவேற்றிய போது, அவன் அடைந்த மகிழ்ச்சியும், மதுவின் நினைவில் மீண்டும் தோன்றியது.'நரேனின் ஆசை ரொம்பவும் சின்ன ஆசை. ஒரு வேளை அப்பா, அம்மாவிடம் இன்னும் பெரிது, பெரிதாக ஆசைப்பட்டு, அம்மா அதையெல்லாம் நிராகரித்திருப்பாளோ! கணவன் - மனைவிக்கு இடையே தோன்றும் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் செக்ஸ்தான் அடிப்படை காரணமாயிருக்கும்.என, அமெரிக்க விமான நிலையத்தில், வைத்தீஸ்வரன் சொன்னது உண்மைதானோ! இத்தனை வருட தாம்பத்யத்திற்குப் பிறகும், அப்பாவால், யாரோ ஒரு பெண்ணுடன் நாட்டியம் பார்க்க முடிகிறது என்றால்... திருமணமாகி, ஒன்றிரண்டு மாதங்களிலேயே, என்னால் எப்படி நரேனை சந்தேகிக்கவும், கவிதாவை தவறாக நினைக்கவும் முடிந்தது? நான், அம்மா சொன்னதைக் கேட்டு அவசரப்பட்டு விட்டேனா! இல்லை... நான் வேறு; என் அம்மா வேறு. அப்பாவும், இந்தப் பெண்ணும் வேறு; நரேனும், கவிதாவும் வேறு. என்னைப் பற்றி, நான் நரேனுக்கு புரிய வைப்பது எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே, நான் நரேனை சரியாகப் புரிந்து கொள்வதும், ரொம்பவும் முக்கியம்!'இந்த நினைவுகளில் மது அமர்ந்திருந்த போது, அரங்கில் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஒரு திருப்பம் அரங்கேற துடித்தது.— தொடரும்.-தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !