உள்ளூர் செய்திகள்

உயிரே உனக்காக... (16)

இதுவரை: மனதில் பலவித குழப்பங்கள் இருந்தாலும், நாட்டிய நிகழ்ச்சியில் சிறப்பாக நடனம் ஆடி முடித்தாள் மதுரிமா. அவளை, நேரில் பாராட்ட, அவளது அறைக்கே வந்தார் வைத்தீஸ்வரன். அவரின் பேச்சு, மதுரிமாவை மேலும் குழப்பியது. நாட்டிய நிகழ்ச்சி பற்றியும், வைத்தீஸ்வரனின் பேச்சு பற்றியும் மதுரிமாவிடம் விசாரித்தான் நரேன் —நரேன் கண் விழித்துப் பார்த்த போது, கடிகாரம் காலை மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. மதுரிமா, கவிதா, வைத்தீஸ்வரன் என்று மூவரும் நேற்றைய இரவு அவனது சிந்தனையை வெகு நேரத்திற்கு ஒருவர் மாறி ஒருவராக ஆக்ரமித்ததால், அவனால் வெகுநேரத்திற்கு பிறகே உறங்க முடிந்தது.'நாளை பொழுது விடிந்ததும் கவிதாவை சந்திக்க வேண்டும்...' என்று, இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றிரவே தீர்மானித்தாயிற்று. அந்தத் தீர்மானத்தில் இந்த நிமிடம் வரையில் எந்த மாற்றமும் இல்லை. குளியலறையை நோக்கி நடந்தான் நரேன்.அரைமணி நேரத்திற்குப் பின், குளித்து முடித்து, ஆடை மாற்றி, நிலைக் கண்ணாடி முன் நின்று, அவனது பிம்பத்தை கண்ணாடியில் பார்த்தான்.அவனது பார்வையில், அவனது உருவம் கம்பீரமாகவும், அழகாகவும், இந்திய சாயலில் தோற்றமளிக்கும் அமெரிக்க இளைஞனைப் போல் காட்சியளிப்பதாக, உள்ளுக்குள் சற்று கர்வத்துடன் நினைத்துக் கொண்டான்.'மதுரிமா ரசிக்கும் நிலையில்தான் என் தோற்றம் அமைந்துள்ளது; நிச்சயமாக அவள் வெறுத்து ஒதுக்கும் நிலையில், என் தோற்றம் இல்லை...' என்று நினைத்த போது, 'கணவன் - மனைவிக்குள் இந்த ரசிப்பும், வெறுப்பும் அவர்களது இந்த வெறும் உடல் சார்ந்த ஒன்றுதானா?' என்ற கேள்வி அவனுக்குள் சட்டென்று எழுந்தது.'ஆம்... அவர்களது மனம் என்பது இரண்டாம் பட்சம்தான். ஒருவரை மற்றவர் பக்கம் இழுத்து, அணைத்துக் கொள்ளும் ஈர்ப்பு சக்தியாக இருப்பது, இந்த உடலின் அழகும், அதன் தோற்றப் பொலிவும்தான்...' என்று சிந்தித்தான்.இப்படி ஏகப்பட்ட சிந்தனைகளின் விளைவாக, வழக்கத்திற்கு சற்று கூடுதலாக ஒப்பனை செய்து கொண்டான்.வீட்டைப் பூட்டி, வெளியே வந்தான். போர்டிகோவில் நின்றிருந்த காரில் ஏறி, கேட் அருகே நிறுத்தி,''ஜெசிகா வந்தால் கொடுத்து விடு... மதியம் உணவுக்கு வர மாட்டேன். இரவுக்கு மட்டும் சமைத்தால் போதும் என்று சொல்...'' என்று கூறி, வீட்டு சாவியை செக்யூரிட்டியிடம் கொடுத்தான்.காரில் கவிதாவின் வீட்டைநோக்கி வேகமாகப் போய் கொண்டிருந்தான்.போர்டிகோவில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டு, ஜன்னலின் திரையை விலக்கி, வெளியே பார்த்தாள் கவிதா.காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் நரேன். கவிதாவிற்குள் பரபரப்பு அதிகமானது. திடீரென அவன் வருவான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவசரம் அவசரமாக வாசற் கதவைத் திறந்து, வெளியில் வந்தாள். சந்தோஷத்தில் அவளது அழகிய கண்கள் மின்னின. குட்டையான நைட்டியில் அவளது அழகு திரட்சிகளின் அபரிமிதமான ஒளியில், சற்றே இன்ப அதிர்ச்சிக்குள்ளானான் நரேன்.''வெல்கம் நரேன்... வாட் எ சர்ப்ரைஸ்!''''குட் மார்னிங்... திடீர்ன்னு மீட் பண்ணணும் போல ஒரு பீலிங். அதான்... சொல்லாமலேயே புறப்பட்டு வந்துட்டேன். ஐ திங்க் ஐ ஆம் நாட் டிஸ்டர்பிங் யூ...''''நாட் அட் ஆல்... யூ ஆர் வெல்கம்... உள்ள வாங்க...''ஆங்கிலத்தின் அழகான உச்சரிப்போடும், சிரிப்போடும் நரேனை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.நரேன் சோபாவில் அமர்ந்தபடி, சுற்றும் முற்றும் பார்வையில் தேடினான். அவன் கையில், கவிதாவின் மூன்று வயது குழந்தைக்காக வாங்கி வந்த ஒரு சிறிய கிப்ட் பார்சல் இருப்பதை கவனித்த கவிதா, அவன் தன் குழந்தையைத் தேடுகிறான் என்பதைப் புரிந்து கொண்டாள்.''குழந்தை இன்னும் எழுந்திருக்கல; தூங்குறான்.''''இட்ஸ் ஓ.கே., ஒரு விதத்துல குழந்தை காலையில் தூங்குறது அம்மாக்களுக்கு நல்லதுதான்... வீட்டு வேலைகளை ப்ரீயா பார்க்கலாம்.''அவனுக்கு, சூடாக டீ கொடுத்தாள்.''என்ன விஷயமா நான் உன்னை பார்க்க வந்திருக்கேன்னு உன்னால யூகிக்க முடியுதா?'' என்று, டீயை சுவைத்தப்படி, புன்னகையோடு கேட்டான்.ஒரு நிமிடம் யோசித்தாள் கவிதா. அவள் உண்மையிலேயே யோசிக்கிறாளா அல்லது யோசிப்பதாகப் பாவனை காட்டுகிறாளா என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவனாக, அவளது முகத்தைப் பார்த்தப்படியே மவுனமாக அமர்ந்திருந்தான்.''எந்த விஷயமாக இருந்தால் என்ன... நீங்க என்னைப் பார்க்க வந்ததே என்னைப் பொறுத்தவரை பெரிய விஷயம்தான்.'' சொல்லிவிட்டு சங்கீத வீணையாக சிரித்தாள். என்னவிதமான ஒரு சிரிப்பு; எத்தனை சாதுரியமான ஒரு பதில்.''நோ... என் கேள்விக்கான பதில் இது இல்லை. சுற்றி வளைக்காத, நேரடியான ஒரு பதில் தேவை. தைரியமாச் சொல்லு...''''என்னைப் போலவே உங்களோட தனிமை; ஐ மீன் மதுரிமா இல்லாத தனிமை, உங்களை கஷ்டப்படுத்தி இருக்கலாம்.''கவிதாவின் பதில், இத்தனை நேரடியாகத் தன்னைத் தாக்கும் என்பதை, கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை நரேன். தன்னுடைய பதில் அவளுக்குள் என்ன விதமான உணர்வுகளைத் தோற்றுவிக்கிறது என்று ஆராய்பவனைப் போல அவளது முகத்தை உற்று நோக்கியபடி, பதில் சொன்னான்...''ஒரு விதத்தில் நீ சொல்வது <உண்மைதான்.''''ஒரு விதத்தில் உண்மை என்றால், எந்த விதத்தில் பொய்?''கேட்டுவிட்டு வாய்விட்டு சப்தமாக சிரித்தாள்.எதற்காக அல்லது எதை நினைத்து இவள் இப்படிச் சிரிக்கிறாள் என, அவனுக்குப் புரியவில்லை. கவிதாவே தொடர்ந்தாள்...''எந்த ஒன்றைப் பற்றியும் பிறர் சொல்லும் போது, அதன் உண்மையான அழுத்தமும், பொருளும் நமக்கு முழுவதுமாய் புரிவதில்லை.''''யெஸ்... அதை நாமே உணரும் போது தான், சரியாகவும், முழுவதுமாகவும் புரிந்து கொள்ள முடிகிறது.''''நான் அப்படி நினைக்கவில்லை நரேன்.''''வேறு எப்படி நினைக்கற?''''உங்கள் தனிமைக்கும், என் தனிமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.''''எந்த விதத்தில்?''''நீங்கள் மதுரிமாவைப் பிரிந்திருப்பது, ஒரு வார காலத்திற்குத்தான். மதுரிமாவின் நாட்டிய நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் திரும்பி வந்து விடுவாள். ஆனால், நான் ஆண்டர்சனைப் பிரிந்திருக்கப் போவது என் ஆயுள் முழுக்க.''கவிதா சொல்வதில் உள்ள யதார்த்தம் நரேனுக்குப் புரிந்தது. 'தற்காலிகமான ஒரு பிரிவும், நிரந்தரமான ஒரு பிரிவும், பிரிவு என்பதன் பெயரால் எப்படி ஒன்றாகிவிட முடியும்? சொல்லப் போனால், என்னுடையது தனிமையே அல்ல; தனிமையைப் போல் தோன்றும் ஒரு பிரமை. இதை, தனிமை என நினைத்து, மதுரிமாவின் மேல் உள்ள ஏதோ ஒரு கோபத்தில், நான் இந்த கவிதாவைத் தேடி வந்ததே தவறோ...' என்ற சந்தேகம், நரேனுக்குள் எழுந்தது.''என்ன யோசிக்கிறீங்க?''''நீ சொல்வதில் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது. உன்னோட இந்த நிலைமைக்காக நான் வருத்தப்படுகிறேன்.''''ஒருவருக்காக மற்றவர் வருத்தப்படுவது மட்டுமே அந்த ஒருவரது பிரச்னைக்கான தீர்வு ஆகிவிட முடியுமா?''கவிதாவின் கேள்வி நரேனை மீண்டும் யோசிக்க வைத்தது. 'கவிதா தீர்வு என்று எதைச் சொல்கிறாள்? இவளுக்காக நான் வருந்துவதையும் மீறி, இவள், என்னிடம் எதை எதிர்ப்பார்க்கிறாள்?'''அதுவும் சரிதான்... ஒருவரது பிரச்னையை மற்றவர் தீர்ப்பது என்பது அந்தப் பிரச்னையைப் பொறுத்த விஷயம். உன் பிரச்னை வேறுவிதமானது.''''அது வேறு எந்த ஆணின் மூலமாகவும் தீர்த்துக் கொள்கிற பிரச்னை அல்ல என்பதும் எனக்குத் தெரியும்.''கவிதாவின் பேச்சு, நரேனுக்கு குழப்பமாக இருந்தது. கவிதாவே தொடர்ந்தாள்...''மனைவியைப் பிரிந்துவிட்ட கணவன் அவளது இடத்தில் வேறொரு பெண்ணை கொண்டு வருவது பல நேரங்களில், அவனது பிரச்னையை வெகு சுலபமாக தீர்த்து விடுகிறது. ஆனால், பெண்கள் விஷயத்தில் அப்படி அல்ல.''''உண்மைதான்... கணவனைப் பிரிந்துவிட்ட மனைவியால், ஆண்களைப் போல் அத்தனை எளிதில் வேறு எந்த ஆணையும் கணவனது இடத்தில் கொண்டு வந்துவிட முடியாது.''''ஆமாம்... அது, அவளது பழைய பிரச்னையைத் தீர்ப்பதற்கு பதிலாக, வேறு புதுப் பிரச்னையை உண்டாக்கும். அமெரிக்கா போன்ற அந்நிய கலாசாரப் பெண்ணிற்கு இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தோன்றலாம். ஆனால், நம் இந்திய மண்ணிற்கும் குறிப்பாக தமிழ்ப் பெண்ணிற்கும் இது ஏற்புடைய ஒரு தீர்வு அல்ல.''''ஒய் நாட்... இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் நம் மண்ணையும், பெண்ணையும் பற்றிய பழம் பெருமைகளில் இதற்கு தீர்வு இன்றி, நம் பெண்களைத் தவிக்கவிடப் போகிறோம்?''''வேறு வழியில்லை. இந்த தவிப்போடே என் போன்ற பெண்கள் வாழ்ந்து முடிந்து போக வேண்டும் என்பதே எங்கள் மீதான சாபம்.''''நோ... இது மாற வேண்டும். இதை உணர்ந்துதான் சாபம் இட்டவர்களே, சாபத்திற்கான சாப விமோசனத்தையும் சொல்லி இருக்கின்றனர்...''''ராமாயண அகல்யாவை சொல்கிறீர்களா?''கேட்டுவிட்டு மறுபடியும் வாய்விட்டு சப்தமாகச் சிரித்தாள் கவிதா.''இதில், சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?''''நிறையவே இருக்கிறது. அகல்யாவிற்கு சாப விமோசனத்தை பூமியில் உள்ள மனிதர்கள் யாரும் வழங்கவில்லை. கடவுளே ராமனாக அவதாரம் எடுத்து வரவேண்டி இருந்தது. கடவுள் ஏன் மறுபடியும் அவதரிக்கவில்லை?''கடவுள் வரவில்லை என்பதற்காக கவிதா கோபப்படுகிறாளா அல்லது வருத்தப்படுகிறாளா என்று புரிந்து கொள்ள முடியாமல், அவள் கேள்வி அமைந்திருந்தது. அவள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவனாய் யோசனையில் அமர்ந்திருந்தான்.''ஐ ஆம் சாரி... நீங்கள் வந்த விஷயத்தை விட்டுவிட்டு, பேச்சு வேறு எங்கெங்கோ போய்விட்டது.''''வீட்டில் தனியே இருப்பதற்கு என்னவோ போல் இருந்தது. உன் நினைவு வந்தது... புறப்பட்டு வந்து விட்டேன்.''கவிதாவின் புருவம் சுருங்கியது. 'இவன் தனியே வீட்டில் இருக்கும் போது, என்னைப் பற்றிய நினைவு இவனுக்கு ஏன் வந்தது? மனைவியைப் பற்றி அல்லவா நினைத்திருக்க வேண்டும். இவன் மட்டும்தான் இப்படியா, இல்லை. எல்லா ஆண்களுமே இப்படித்தானா?' என்று கவிதா யோசித்துப் பார்ப்பதைப் போல் இருந்தது.''நீங்கள் சொல்வதைக் கேட்க ஒருவிதத்தில் சந்தோஷமாக இருக்கிறது...''''எந்த விதத்தில் கவிதா?''''மதுரிமாவைப் பற்றி நினைக்காமல், என்னைப் பற்றி நினைத்திருக்கிறீர்களே...''கவிதா சொன்னதும், அதிர்ந்து போனான் நரேன். அவன் வெகு இயல்பாக சொன்ன ஒன்றுக்கு இப்படி ஒரு அர்த்தமா?''என்ன நரேன்... நான் எதைச் சொன்னாலும், உடனே யோசிக்க ஆரம்பித்து விடுகிறீர்கள்... ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா?''''நோ, நோ... அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ சொல்ற எல்லாமே யோசிக்கும் விதமாகவே உள்ளது; அதுதான் பிரச்னையே!''சொல்லிவிட்டு சிரித்தான். அவனது சிரிப்பு போலியாக இருப்பதை அவனாலேயே உணர முடிந்தது. ஆனால், கவிதாவின் மனநிலை உறுதியாகவும், வேறுவிதமாகவும் இருந்தது. ஜன்னல் வழியே வெளியே தெரியும் ஆகாயத்தை வெறித்து பார்த்தபடி சொன்னாள்...''அதற்காக எல்லாவற்றுக்கும் எப்போதும் யோசித்துக் கொண்டே இருந்துவிடக் கூடாது. யோசனைகள் முடிவுக்கு வரும்போது தான், செயல்கள் பிறக்கும். செயல்கள் மூலமே எண்ணியதை அடைய முடியும்...'''தவறு என் மீதா, அவள் மீதா அல்லது இருவர் மீதுமா? இது, அவள் தவறு செய்வதாக நானும், நான் தவறு செய்வதாக அவளும், எங்களுக்குள் செய்து கொள்ளும் கற்பனையா, வெறும் பிரமையா? ஆம்... இது வெறும் கற்பனைதான்; பிரமைதான்; நிஜம் அல்ல. இந்தக் கற்பனை நிஜமாக, நானோ, அவளோ காரணமாக அமைந்து விடக் கூடாது. கணவனை நிரந்தரமாகப் பிரிந்திருக்கும் அவளும், மனைவியைத் தற்காலிகமாகப் பிரிந்திருக்கும் நானும், அந்த இடத்தை யாரோ ஒருவர் மூலம் பூர்த்தி செய்து கொள்ள, இது ஒன்றும் கோடிட்ட இடத்தை ஏதோ ஒரு வார்த்தை மூலம் பூர்த்தி செய்யும் பள்ளிக் கூட வினாத்தாள் அல்ல; இது வாழ்க்கை. அகராதியில் உள்ள அனைத்து அற்புத வார்த்தைகளாலும், அழகிய வாக்கியங் களாக்கி தொகுக்கப்பட வேண்டிய ஒரு முழுமையான புத்தகம். ஏதோ ஒரு சமாதானத்தை சொல்லி, இங்கிருந்து புறப்பட வேண்டியதுதான்...' என்று நினைத்துக் கொண்டான் நரேன்.ஆனால், கவிதாவின் எண்ணம் வேறுமாதிரியாக இருந்து.''எது எப்படியோ... இன்றைய பொழுதாவது நாம் இருவருமே நம் தனிமையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வோம். எனக்கும் உங்களிடம் மனம்விட்டு பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. மதிய உணவிற்கு என்ன சமைக்கட்டும்?''கவிதா, அவனை அனுப்புவதாகத் தோன்றவில்லை. நரேனுக்கு மீண்டும் அவன் படித்த ஷேக்ஸ்பியர் நினைவில் வந்தார்...'நீ விரும்புகிறாயோ இல்லையோ... அது உ<ன் மீது திணிக்கப்படுகிறது...'அவனது யோசனையைக் கலைக்கும் விதமாக போர்டிகோவில் அவன் நிறுத்தியிருக்கும் காருக்குப் பின், வேறு ஏதோ கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. எழுந்து, வாசல் அருகே வந்து நின்றான் நரேன்.கார் கதவைத் திறந்து, கையில் சிகரெட்டுடன், நரேனைப் பார்த்து புன்னகைத்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான், கவிதாவின் மாஜி கணவன் டேவிட் ஆண்டர்சன். — தொடரும்.தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !