சின்னப்புத்தி!
காலை, 9:00 மணி.மூன்று மணி நேரப் பயணத்துக்கு பின், பேருந்தை விட்டு இறங்கினேன். பசி உணர்ச்சி, தலை தூக்கி இருந்தது. பேருந்து நிலையத்தை விட்டு, வெளியே வந்தேன். லட்சுமிபவன், 'வா... வா' என்று அழைத்தது. புறப்படும் போது, மரகதம் கொடுத்த ஒரு டம்ளர் காபி, வயிற்றுக்குள் இன்னுமா உட்கார்ந்திருக்கும்... ஓட்டலுக்குள் நுழைந்து, சிற்றுண்டியும், காபியும் சாப்பிட்டு முடித்தேன். சப்ளையர் பில்லை, பவ்யமாக டேபிள் மேல் வைத்தான். நான் சாப்பிட்ட அயிட்டங்களின் விலையை, சுவரில் மாட்டியிருந்த விலைப் பட்டியலில் உள்ள விலையோடு, சரி பார்த்தேன். பில் தொகையில், ஐந்து ரூபாய் குறைவாக இருந்தது. அதை, கல்லாவில் இருந்தவரிடம் சொன்னேன். உடனே அவர், எனக்கு சப்ளை செய்தவனை பார்த்து, ''பெருமாள் இங்க வா,'' என்றார். ஓடி வந்தான்.அவனிடம் பில்லைக் காட்டி, ''இவருக்கு என்ன சப்ளை செய்தே, பில் எவ்வளவு?'' என்றார். அவன் கணக்கு பார்த்து, ''பில் தப்பாப் போட்டுட்டேன். அஞ்சு ரூபா குறையுது,'' என்றான்.''இப்படி கவன குறைவா இருக்கியே,'' என்று, முதலாளி அவனைக் கடிந்து கொண்டார்.விடுபட்ட பணத்தையும் சேர்த்துக் கொடுத்த போது, ''சார் ரொம்ப நன்றி. உங்கள மாதிரி நல்லவங்க இருக்குறதனால தான், மழை பெய்யுது,'' என்று ஓட்டல் முதலாளி கூறிய போது, பெருமையாக இருந்தது.நகரப் பேருந்தை பிடித்து, பத்து கிலோ மீட்டருக்கு அப்பால், தொழில் படிப்பு படிக்கும், என் மகனை பார்க்கப் புறப்பட்டேன். அவனைப் பார்த்த பின், அப்படியே நகரத்தில் உள்ள, என் நண்பர் பார்த்திபனை பார்த்து விட்டு, ஊர் திரும்ப நினைத்து, பிற்பகல், 4:00 மணிக்கு, நண்பர் வீட்டுக்கு போனேன். நண்பரும், அவர் மனைவியும், வரவேற்று, உபசரித்தனர். நண்பரும், நானும் பால்ய காலத்து சிநேகிதர்கள் என்பதால், பள்ளியில் ஒன்றாக படித்த காலம், பாடம் நடத்திய ஆசிரியர்கள் மற்றும் உடன் படித்த நண்பர்கள் என, பேச்சு, கிளை கிளையாகப் பிரிந்தது.''சார்... சார்...'' வாசலில் கூப்பிடும் குரல் கேட்டு, எழுந்து போனார் பார்த்திபன்.''அடடே, பெருமாளா... வாப்பா,'' என்றார்.நான், எழுந்து, எட்டிப் பார்த்தேன்.லட்சுமி பவன் ஓட்டலில், எனக்கு சப்ளை செய்த பெருமாள் நின்றிருந்தான். அவன், என்னைப் பார்க்கவில்லை.''இன்னிக்கு ஓட்டல்ல வேலை இல்லையா?'' என்று கேட்டார் பார்த்திபன்.''ஒரு தப்பு நடந்து போச்சுங்க,'' தயக்கத்துடன் சொன்னான் பெருமாள்.''என்ன தப்பு?''''ஓட்டல் முதலாளி, என்னை வேலையை விட்டு நிறுத்திட்டாருங்க,'' அவன் சொன்னதும், எனக்கு, 'ஷாக்' அடித்தது போலானது.''நிறுத்திட்டாரா... நீ என்ன தப்பு செய்தே?''''சாப்பிட்டவருக்கு, பில் தப்பா போட்டுட்டேன். அஞ்சு ரூபா விடுபட்டுப் போச்சு.''நடந்ததை சொன்னான் பெருமாள்.வருத்தப்பட்ட பார்த்திபன், ''அஞ்சு ரூபா தவறுக்கு, உன்னை வேலைய விட்டு நீக்கிட்டாரா,'' என்றவர், சிறிது யோசனைக்கு பின், ''சரி விடு. எப்படியோ நடந்து போச்சு. வேற எங்காவது, வேலை பார்த்துச் சொல்றேன். இதுக்காக, கவலைப்படாதே,'' என்றார். பெருமாள், அவரைக் கும்பிட்டு போனான்.உள்ளே வந்த பார்த்திபன் சொன்னார்...''பாவம், பெருமாள் ரொம்ப நல்லவன். அவன் வீட்டுல ரொம்ப கஷ்டம்; அவனோட அம்மா ஒரு நோயாளி; அப்பா இல்ல. நான் சிபாரிசு செய்து தான், லட்சுமிபவன் ஓட்டல் முதலாளி, பெருமாளுக்கு வேலை குடுத்தாரு. அவனைப் புடிச்ச கெட்ட நேரம், சாப்பிட வந்த யாரோ, அவன் போட்ட பில்லில் தப்புக் கண்டுபிடிச்சு, முதலாளிக்கிட்ட சொல்லி, அவனை வேலையை விட்டு நிறுத்திட்டாங்க.'' பார்த்திபன் சொல்ல சொல்ல, எனக்கு ஊசி குத்துவது போல் இருந்தது. என்னுடைய நேர்மை, ஒருவனுடைய பிழைப்பைக் கெடுத்து விட்டதே என்று, வருத்தமாக இருந்தது.பெருமாள் வேலை இழக்க காரணம் நான் தான் என்பதை, நண்பரிடம் சொன்னேன். பார்த்திபன் எதுவும் பேசாமல் லேசாக, சிரித்துக் கொண்டார். அதில், வருத்தம் கலந்திருந்தது.உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தவருக்கு, பெருமாள் வந்து விட்டு போன பின், முகம் வாடி, கவலை சூழ்ந்து விட்டது. பெருமாள் கஷ்டத்தை, தன் கஷ்டமாக அவர் நினைத்திருக்க வேண்டும். ஊருக்கு வந்து, ஒரு மாதத்துக்கு பின், போன் போட்டு, நண்பரிடம் கேட்டேன். ''பெருமாளுக்கு இன்னும் வேலை அமையலே. அவனுடைய அம்மாவும், இறந்து விட்டார்,'' என, பார்த்திபன் வருத்தத்தோடு சொன்னார்.பாவம் பெருமாள். என்ன கஷ்டத்தில் இருக்கிறானோ... வாழ வைக்கத் தெரியாத நான், வாயை மூடிக் கொண்டிருந்திருக்கலாம். ஐந்து ரூபாயை பெரிதுபடுத்தி, என்னுடைய நேர்மைக்கு வெளிச்சம் போட்டு, அவனை, இருட்டில் தள்ளி விட்டேன்.அந்த பார்த்திபன் தான், என்னை பற்றி என்ன நினைப்பார்... 'இவர் எப்படி பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியராக இருக்கிறார்; என்ன படித்தார்; என்ன பண்பாளர்...' என்று நினைத்திருப்பாரே!''என்னங்க பெரிய யோசனை?'' என்று, கேட்டுக் கொண்டே வந்த என் மனைவி மரகதம், என்னைப் பார்த்து சிரித்தாள்.''ஏன் சிரிக்குறே?''''உங்களை பார்த்தா, சிரிப்பு தான் வருது.''''ஏன்?''''உங்க நேர்மை குணத்தை நினைச்சு தான்!''''அதுக்கு என்ன சிரிப்பு?''''யாரும் எந்த தப்பும் செய்யக் கூடாது; தப்புக்கு தண்டனை அனுபவிக்கணும்ன்னு, கோமாளித்தனமாக நடந்துக்கிறத நினைச்சுத் தான்'' ''தப்புக்கு தண்டனை கூடாதுங்கறயா?''''நான் அப்படி சொல்லல. தண்டனைக்குன்னு, சில தவறுகள் இருக்கலாம். தவறுகள் எல்லாமே, தண்டனைக்குரியதா என்ன!''மரகததுக்கு, என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நான், மவுனமாகி விட்டேன். அவளே பேசினாள்...''உங்களுக்கு ஞாபகம் இருக்கா... ஆறு மாதத்துக்கு முன், ஒருநாள், நீங்க எங்க அண்ணனுக்கு சொந்தமான, 'ஓர்க்-ஷாப்'புக்கு போயிருந்தீங்க. அப்ப, கேட் வாட்ச்மேன் டீ குடிக்க, எதிர்பக்கத்து டீக்கடைக்கு போயிட்டான். உடனே, எங்க அண்ணன்கிட்டப் போய், 'வாட்ச்மேன் கேட்லயே இருக்கறதில்லே'ன்னு பத்த வச்சுட்டு வந்தீங்க. அந்த வாட்சுமேனுக்கு, வேலை தொலைஞ்சுது. எங்க அண்ணனோ, உங்களை, 'நேர்மையில் தங்கம்ன்'னு பாராட்டினாரு. நீங்க பூரிச்சுப் போயிட்டீங்க. உங்களுக்கு, அதுல என்ன பெருமையோ.... இப்ப, ஒரு ஓட்டல் சப்ளையரை, வேலைய விட்டுத் தூக்கிட்டீங்க. ஒரு தனியார் பஸ் டிரைவர் பஸ் நிறுத்தத்துல, பஸ்சை நிறுத்தலேன்னு, கம்பெனி முதலாளிகிட்ட புகார் சொல்லி, டிரைவரோட வேலைக்கு வேட்டு வைக்கப் போனீங்க. நல்லவேளை அந்த முதலாளி, டிரைவரை எச்சரிச்சு, 'ஒழுங்கா வேலை பாருன்'னு சொல்லிட்டாரு. அவரு மனுஷன்.''உங்களை மற்றவங்க புகழணும்; உங்க நேர்மைக்கு முத்திரை குத்தணும்; எல்லாரும், எப்பவும் பாராட்டணும்; இப்படியே நினைக்கும் உங்களை பார்த்து சிரிக்காம, என்ன செய்றது! ''மரகதத்தின் பேச்சு ஒவ்வொன்றும், பசு மரத்து ஆணியாக மனதை தைத்தது. என் செயல்களை, முட்டாள்தனமானது என்று சொல்லாமல் சொல்கிறாளா!யோசித்து பார்த்தால், அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. 'தப்புப் பண்ணாதவன் யார்... செய்யும் தப்புக்கெல்லாம் தண்டனை என்றால், எல்லாரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். அப்புறம், சான்றாண்மை, பண்பாடு, பொறுமை, மனிதநேயம் என்றெல்லாம் எதற்காக சொல்லி வைத்தனர்... இத்தனைக்கும் மேலாக, மன்னிப்பு என்ற ஒரு சொல், காலங்காலமாக வழக்கில் இருக்கிறதே!'அந்தச் சொல், எத்தனையோ பேர்களை திருத்தி, வாழ வைத்திருக்கிறது. இதெல்லாம், எனக்கு ஏன் புரியவில்லை. தலைமையாசிரியர் என்ற இறுமாப்பா அல்லது பாராட்டுக்குரியவன் என்ற சின்னப்புத்தியா... ச்சே... நான் என்ன, நியாயங்களை நிலைநாட்டி விட்டேன்! தவறு செய்தவரை, திருத்தி, வாழ வைக்கத் தெரியவில்லை. ஆனால், குற்றம் சொல்ல தெரிந்திருக்கிறது. 'மாணவர்களை வழி நடத்தும் ஒரு தலைமையாசிரியராய் இருந்தும்... ச்சே... மரகதம் என்னைப் கோமாளி என்று சொன்னது சரியாக தான் இருக்கிறது. அவளைப் போல நான் ஏன் சிந்திக்கவில்லை. பெருமாளுக்கும், வாட்சுமேனுக்கும் வேலை போக காரணமாக இருந்தவன் நான். நான் பாராட்டப்பட வேண்டியவனா, மன்னிக்க தெரியாதவர்கள் தான், என்னைப் பாராட்டியிருக்கின்றனர். கஷ்டப்பட்ட பெருமாளுக்கு வேலை தேடி தந்த பார்த்திபன் எங்கே, அந்த வேலை போக காரணமாக இருந்த நான் எங்கே...'தினமும், என் மனம், எனக்கு சூடு போட்டுக் கொண்டே இருக்கிறது. என் மனப்புண் ஆறுவதற்காக, பெருமாளிடமும், வாட்ச்மேனிடமும் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எம்.நன்னன்