உள்ளூர் செய்திகள்

உயிரே உனக்காக (32)

இதுவரை: மதுரிமாவும், அவள் அம்மாவும் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினர். விமான நிலையத்திலிருந்து இவர்களை அழைத்துச் செல்ல, மதுரிமாவின் மாமா பையன் பாஸ்கர் வந்திருந்தான். இந்தியா திரும்பிய மதுரிமா, நாரத கான சபாவில் நடை பெற்ற ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு சென்றாள். அங்கு, அவளது அப்பா, வேறொரு பெண்ணுடன் நாட்டியம் பார்க்க வந்திருந்தார். அப்பெண் யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் மதுரிமாவுக்கு ஏற்பட்டது —''பாஸ்கர்... தயவு செஞ்சு கையை எடுக்கறீங்களா?''பாஸ்கரின் பக்கமாகத் தலையை சற்றே திருப்பி, அழுத்தமாக சொன்னாள் மதுரிமா.''சாரி... நான் வேணும்ன்னு வைக்கல.''அவசரம், அவசரமாக அப்போதுதான் தன் தவறை உணர்ந்தவனாய், மதுரிமாவின் கை மீது வைத்திருந்த தன் கையை எடுத்தான் பாஸ்கரன்.பாஸ்கரன், தன் கை மீது, அவன் கையைத் தெரிந்தே, வேண்டுமென்றே வைத்தானா இல்லை தெரியாமல் வைத்தானா என்பதை வாதிக்கிற நேரமும், இடமும் இதுவல்ல என்பதை உணர்ந்தவளாய், மவுனமாகி விட்டாள் மதுரிமா.மது, தன்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று சொன்ன பெண், மேடையில் கால் தூக்கி அபிநயம் காட்டிக் கொண்டி ருந்தாள். அரங்கமே நிசப்தத்தில், அவளது அசைவுகளில் லயித்துப் போய் இருந்தது. முன் வரிசையில் அமர்ந்திருக்கும் மதுவின் அப்பாவும், அவரோடு வந்த பெண்ணும் மங்கலான வெளிச்சதில் தெரிய, யோசித்துப் பார்த்தாள் மது; அவள் அம்மாவிற்காகப் பரிதாபப்பட்டாள். ஒரு வழியாக நாட்டியம் முடிந்து, அனைவரும் அரங்கை விட்டு வெளியேற, மதுவும், பாஸ்கரனும் வெளியே வந்து, காரில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.இரவு, 10:00 மணி —அவளது அறையில் கட்டிலில் தனித்துப் படுத்திருந்தாள் மதுரிமா.பால் டம்ளருடன் அறைக்குள் வந்தாள் அம்மா. படுத்திருந்த மது, கட்டிலில் எழுந்து அமர்ந்தாள்.''மது... இந்தா, பால் சாப்பிடு.''''வேணாம்மா... எதையும் சாப்பிடுற மனநிலையில் நான் இப்போது இல்லை.''''மனசைப் போட்டுக் குழப்பிக்காதே... இந்த பாலை சாப்பிட்டுட்டு, நிம்மதியா ஒரு தூக்கம் போடு. காலைல எல்லாம் சரியாயிடும்; நான் சரி செய்யறேன்.'''அதெப்படி... ஒரு டம்ளர் பாலிலும், ஒரு இரவு தூக்கத்திலும் சரி செய்துவிடுற விஷயமா என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது? என் மீதுள்ள அன்பாலும், பாசத்தாலும், அம்மா இப்படி சொல்கிறாள். அது, இத்தனை சுலபமான விஷயமா இருந்தால், அப்பா எதற்காக வேறு யாரோ ஒரு பெண்ணோடு நாட்டியம் பார்க்க வந்தார்?'''அம்மா... அப்பா வந்தாச்சா?''''ம்... வந்துட்டார்.''அம்மா பதில் சொன்ன விதம், மதுவை திருப்திப் படுத்தவில்லை.''அப்பா சாப்பிட்டாரா?''''இல்லை... சாப்பாடு வேணாம்ன்னு தூங்கிட்டார்.''''என்னம்மா நீ... அப்பா சாப்பாடு வேணாம்ன்னா விட்டுடுவியா?''''என்ன பண்ண சொல்ற... ஒரு வேளை உன்னை மாதிரியே சாப்பிடுற மனநிலை அவருக்கும் இல்லையோ என்னமோ... யாருக்குத் தெரியும்?''இதை மதுவின் முகத்தைப் பார்த்துச் சொல்லாமல், வேறு எங்கேயோ பார்த்தபடி சொன்னாள் அம்மா.அம்மாவை நினைக்க மதுரிமாவிற்கு பாவமாக இருந்தது...''சரி... நீ சாப்பிட்டி யாம்மா?''''ம்... சாப்பிட்டேன். இந்த வீட்ல நான் செஞ்சுக் கிட்டிருக்கிற ஒரே வேலை சாப்பிடுறதும், தூங்கறதும் மட்டும்தானே... அதையும் செய்யலேன்னா எப்படி?''இதை வருத்தமாக சொல்கிறாளா அல்லது கோபமாகச் சொல்கிறாளா என்று புரிந்து கொள்ள முடியாத நிலையில் அம்மா பேசினாள்.''அம்மா... நீ தப்பா எடுத்துக்கலேன்னா உன்னை ஒண்ணு கேக்கலாமா?''''என்ன கேக்கப் போற?''''ஏம்மா... உனக்கும், அப்பாவுக்கும் ஏதாவது பிரச்னையா?''''எனக்கும், உன் அப்பாவுக்கும் பிரச்னையா... யார் சொன்னது அப்படி? எதுக்காக இப்படி ஒரு கேள்வி கேக்குற மது?''''சும்மாதான்... இன்னைக்கு அப்பாவும் டான்ஸ் பார்க்க வந்திருந்தார்.''சொல்லிவிட்டு நிறுத்தினாள் மது. அம்மாவின் முகத்தில் லேசான சிந்தனைக் கோடுகள் விழுவதையும் கவனித்தாள்.''உன்னைப் போலவே அவருக்கும் டான்ஸ் பார்க்கணும்ன்னு தோணி இருக்கலாம்.''''என்னம்மா நீ... எதுக்கெடுத்தாலும் என்னையும், அப்பாவையும், ஒப்பிட்டே பேசுற... என் நிலைமையும், அப்பாவோட நிலைமையும் ஒண்ணா?''மதுரிமாவின் கேள்வி கூர்மையாக வெளிப்பட்டது. அவளது கேள்விக்கு அம்மா பதில் சொல்லவில்லை. மதுரிமாவே தொடர்ந்தாள்...''அப்பா டான்ஸ் பார்க்க வந்ததைப் பத்தி நான் எதுவும் தப்பா சொல்லல... ஆனா, அப்பா தனியா வரல; அவரோட வேற ஒருத்தரும் வந்தார். யாரும்மா அந்த பொம்பள?''அப்பாவின் அந்தரங்கத்தை மகள் போட்டு உடைத்ததில், அம்மா ஒரு கணம் மிரண்டுதான் போனாள். அவளது கணவரின் இந்த விஷயம் அவள் அறியாததல்ல. முதலில் அரசல் புரசலாக காதில் விழுந்த அவள் கணவரும், அந்த இன்னொரு பெண்ணும் சம்பந்தப்பட்ட சில விஷயங்கள், அவளது கண்முன்பாகவே நிகழ்ந்து, அவளே சாட்சியாய் விக்கித்து நின்ற அந்த பழைய சம்பவங்களும், அதன் நினைவுகளும்... அதன் பிறகு அவரிடம் வாதம் புரிந்து மல்லுகட்டி, பின்னர் மன்றாடி தோற்றுப் போய் தன்னளவில் சமாதானமாகி அடங்கிப் போன விஷயம், இப்போது மகளே தெரிந்து, முன்னிறுத்தி கேள்வி கேட்கிறாள். என்ன பதில் சொல்வது?''என்னம்மா... என் கேள்விக்கு பதிலையே காணோம். யார் அந்த பொம்பள?''''எதுவோ ஒரு கழுதை... இப்ப தெரிஞ்சுகிட்டு நீ என்ன செய்யப் போற?'''அவ யாருன்னு தெரிஞ்சும், என்னாலேயே ஒண்ணும் பண்ண முடியல. உன்னால் பெரிசா என்ன செய்ய முடியும்?' என்ற பாணியில் இருந்தது அம்மாவின் கேள்வி. அம்மா தன்னிலேயே புதைத்துக் கொண்ட கோபத்தின் வெளிப்பாடுதான், 'எதுவோ ஒரு கழுதை...' என்ற வாசகம்.'ஒருவேளை, அம்மா பசுவைப் போல சாதுவாக இருந்திருப்பாளோ! அப்பாவிற்கு அந்தப் பெண் கழுதையாக இருந்ததே பிடித்திருக்குமோ! இந்த விஷயத்தில் யாருக்கு எது பிடிக்கும் என்பது சொல்லப்படாமலும், தெரியாமலும் தான், நிறைய பேர் வாழ்ந்து கொண்டும், வாழ்வதாகவும் பாவனை செய்கின்றனரோ?'மதுரிமாவின் நினைவில் அம்மாவும், அப்பாவும், அந்தப் பெண்ணும் மறைந்து போயினர். மாறாக அவளும், நரேனும், கவிதாவும் தோன்ற...'சே... எதற்காக இந்த ஒப்பீடு?' மதுவிற்கு குழப்பமாக இருந்தது.இந்த நேரத்தில் நரேன் என்ன செய்து கொண்டிருப்பான்? அவள், அவனோடு இருந்த நேரத்தில், நரேன் நடந்து கொண்டதெல்லாம், அவள் முன்னே காட்சிப் படங்களாய் விரிய... மதுவின் இதயம் கனத்தது.''என்ன மது... தீவிரமா யோசிக்கிற... என்னையும், அப்பாவையும் பற்றி யோசிக்கிறத விட்டுடு... உன்னைப் பத்தி மட்டும் யோசி.''''இதென்னம்மா நியாயம். என்னைப் பத்தி நீ இத்தனை சீரியசா யோசிக்கும் போது, உன்னைப் பத்தி நான் எப்படி யோசிக்காம இருக்க முடியும்?''''என் விஷயம் முடிஞ்சு போன விஷயம். அதை யோசிச்சு பிரயோஜனமில்ல.''யோசித்துப் பார்த்தாள் மது...'அதெப்படி, முடிஞ்சு போன விஷயமாகும். அப்பா விஷயத்தில் இன்னமும் முடியவில்லையே... தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. பாவம் அம்மா... அவளாகவே வலிந்து முடித்துக் கொண்டு விட்டாள்...'''சரிம்மா... மத்தத காலைல பேசிக்கலாம்; நீ போய் தூங்கு.''''இனிமே பேசறதுக்கு இதுல ஒண்ணுமில்ல... மனசை குழப்பிக்காம, நீ தூங்கு மது.''அம்மா வெளியேறியதற்கு பின், வெகுநேரம் வரையில் தூக்கம் வராமல், கட்டிலில் புரண்டு, புரண்டு கடைசியாகத் தூங்கிப் போனாள் மதுரிமா.நரேனுக்கு பொழுதைப் போக்குவதற்கே சிரமமாக இருந்தது. ஆபீசிலும் ஒழுங்காய் வேலை செய்ய முடியாமல், வீட்டிலும் நிம்மதி என்பது சிறிதும் இல்லாமல், அவன் நினைவுகளை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தாள் மதுரிமா.மதுரிமா இல்லாமல், ஒரு வாரம் ஓடிப் போயிருந்தது. மதுவைப் பிரிந்திருந்த இந்த ஒரு வார இடைவெளி, வருடக் கணக்கில் பிரிந்திருப்பதை போன்ற உணர்வை அவனுள் ஏற்படுத்தி இருந்தது.வைத்தீஸ்வரன் பேச்சைக் கேட்டு, அவசரத்தில் தவறு செய்து விட்டோமா என்ற குற்ற உணர்வு அவனை குடைந்து கொண்டிருந்தது.கூடவே, அவன் உள் மனது, 'அதெப்படி... விவாகரத்து நோட்டீசை நீ அனுப்பாமல் இருந்திருந்தால், மது உனக்கு அதை அனுப்பி இருப்பாள். உனக்கும் முன்பாக மது தீர்மானித்துவிட்ட விஷயம் தானே இது...' என்று, குரல் எழுப்பியது.'விவாகரத்து நோட்டீசை நான் முதலில் அனுப்பியதால், அதை வாங்கிய கையோடு, அம்மாவுடன் இந்தியாவுக்குப் புறப்பட்டு விட்டாள் மது. இதையே அவள் எனக்கு அனுப்பி, நான் அதை வாங்கி இருந்தால், எப்படி நடந்து கொண்டிருப்பேன்...' என்று யோசித்துப் பார்த்தான் நரேன்.'அவள் என்னை சிறுமைப்படுத்தி விட்டதாக, அவமானப்படுத்தி விட்டதாக அவளுடன் வாக்குவாதம் எனும் பேரில் சண்டையிட்டிருபேனா அல்லது என் ஆண்மைத் தன்மையின் இழுக்கை மூடி மறைக்க, அவளிடம் மன்றாடி கெஞ்சி இருப்பேனா?''திருமணமான ஒரு சில நாட்களிலேயே, இந்தப் பிரிவு இத்தனை பெரிதாய், எதனால் விரிசல் கண்டது? 'என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்...' என்ற மதுரிமா போன்ற பெண்களின் அதீதமான பொசசிவ்னஸ். நான் எந்தத் தவறும் செய்து விடவில்லையே. நான் அவளுக்கு மட்டும் தான் என்று தானே வாழ்ந்திருந்தேன். கவிதாவுடன் சற்று தாராளமாய் பழகியதற்கு, இத்தனை பெரிய தண்டனையா?'அவனும், அவளும் சந்தோஷமாய் இருந்த தருணங்கள் அவன் மனத்திரையில் நிழலாட, அவனது இதயம் கனத்து, கண்களில் நீர்த் துளிர்த்தது...''என்ன சார், என்னாச்சு... அழறீங்க?''எதிரே கையில் காபி கோப்பையுடன் நின்றபடி கேட்டாள் ஜெசிகா.''நோ... நோ... அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜெசி. ஐ ஆம் ஆல்ரைட்.''''நோ சார்... நீங்க மறைக்கறீங்க... மதுரிமா மேடம் இல்லாம நீங்க சிரமப்படறத நான் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கிறேன்.''''மது இல்லாமலேயே நான் சவுகரியமாத்தானே இருக்கிறேன். நான் குளிக்கவும், உண்ணவும், உறங்கவும் எல்லாவற்றையும் எந்தக் குறையுமின்றி நீதான் பார்த்துக் கொள்கிறாயே ஜெசி. பிறகென்ன சிரமம்?''''சார்... நானும் திருமணமானவள் தான். நான் சிரமம் என்று குறிப்பிட்டது, நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களை அல்ல. அதற்கும் மேல்!''ஒரு வேலைக்காரியாய் இருந்த போதிலும், எஜமானனோடு பேசிய போதிலும், தான் சொல்ல வருவதை எத்தனை நாசூக்காக வெளிப்படுத்துகிறாள் ஜெசிகா.''சார்... இதுவே நீங்கள் ஒரு அமெரிக்கனாக இருந்திருந்தால், இந்த விஷயம் பற்றி நான் உங்களிடம் பேசியே இருக்க மாட்டேன்.''''ஏன் அப்படி ஜெசிகா?''''கற்பு என்பதன் பேரில் உங்க ஊர் கணவன், மனைவிக்கு இது முதல் பிரச்னையாவும், முழு நேரப் பிரச்னையாவும் இருக்கு. இங்கே அப்படி இல்ல...''பரமசிவனுக்கே பாடம் நடத்திய முருகனைப் போல், வேலைக்காரி ஜெசிகா, அவளது எஜமானன் நரேனுக்கு அவள் உணர்ந்து கொண்ட அமெரிக்கர்கள் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தாள்.''சரி... உன்னிடமே கேட்கிறேன்... இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய் ஜெசி?''அந்த நேரத்திற்கு அவளிடம் யோசனைக் கேட்பதை தவறாகவோ, இழிவாகவோ கருதாமல், ஜெசிகாவிடமே யோசனைக் கேட்டான் நரேன். கடலில் தத்தளிப்பவன் கையில் கிடைத்த கட்டையைப் பிடித்து, கரையேறத் துடிக்கும் நிலையில், அவன் இருந்தான்.''<உங்களுக்கு யோசனை சொல்லும் அளவுக்கு நான் மெத்தப் படித்தவள் அல்ல. நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்... ஒன்று, 'ஈகோ' பார்க்காமல், இந்தியாவிற்குச் சென்று, மதுரிமாவை சமாதானப்படுத்தி அழைத்து வாருங்கள். இல்லையென்றால்...''உடனே சொல்லாமல், சற்று தயங்கி நிறுத்தினாள் .''பரவாயில்லை ஜெசி... நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. நீ தைரியமாகச் சொல்லலாம்...''''மதுரிமாவை அடியோடு மறந்து, மேடத்திற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைப் பற்றி யோசியுங்கள். இதுவும் இல்லாமல், அதுவும் இல்லாமல், உங்கள் வாழ்க்கையை நீங்களே நரகமாக்கிக் கொள்ளாதீர்கள்.''கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத ஒன்றை, ஜெசிகா சொன்னதில், எந்த பதிலும் சொல்ல முடியாதவனாய், மவுனமாக இருந்தான் நரேன்.யோசித்துப் பார்த்தான் நரேன்...'மதுரிமாவை ஒரே அடியாக மறந்துவிட வேண்டுமா... மதுரிமாவின் இடத்தில் வேறு ஒரு பெண்ணா... இது தன்னால் சாத்தியமா?''இது, உனக்கு சிறிதும் சாத்தியப்படாத விஷயம். அதே நேரத்தில், செக்ஸ் என்பதையும் உன்னால் தவிர்த்துவிட முடியாது...' என்று, அவன் உள் மனது, பெரிதாய் ஓலமிட்டது.என்ன செய்வது என்ற முடிவுக்கு வர இயலாதவனாய், டீப்பாயின் மீதிருந்த பத்திரிக்கையை எடுத்துப் புரட்டினான் நரேன்.பத்திரிக்கையில், விளம்பரப் பகுதியில் அழகழகான பெண்கள், அரைகுறை ஆடைகளில் நின்றும், படுத்தும், 'அழகே வா... அருகே வா...' என அழைப்பு விடுக்கும் வகையில், போதையுடன் சிரித்துக் கொண்டிருந்தனர்.ஜெசிகா சொன்னாளே... 'செக்ஸ் என்பது, ஒரு அற்புதமான லெட் அவுட்...'நரேனின் மொபைல் போன் ஒலித்தது.ஒருவேளை மதுரிமாவாக இருக்குமோ... நரேன் அவசரமாக போனை எடுத்து நம்பரைப் பார்த்தான். போனில் அழைப்பது மது இல்லை; கவிதா.''குட் ஈவினிங்... எப்படி இருக்க கவிதா?''''நான் நல்லா இருக்கேன் நரேன். மது, உங்களோடு இல்லையாமே... இந்தியாவுக்கு திரும்பி விட்டாளாமே. என்ன செய்துட்டிருக்கீங்க நரேன்... எனக்கு உங்களை பாக்கணும் போல இருக்கு; மீட் பண்ணலாமா?''கவிதாவுக்கு என்ன பதில் சொல்வதென்று, ஒரு சில விநாடிகளே யோசித்தான் நரேன்.''எனக்கும் அப்படித்தான் தோணுது... எங்கே மீட் பண்ணலாம்?''''இன்னும் கொஞ்சம் நேரத்துல ஜெசிகா போயிடுவா இல்லே... உங்க வீட்டிலேயே சந்திப்போம். இன்னும், ஒரு மணி நேரத்துல நான் அங்கே இருப்பேன்.''சொல்லிவிட்டு, போனைத் துண்டித்து விட்டாள் கவிதா. வேலை முடிந்து, வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் ஜெசிகா.கவிதாவின் குரலில், மதுரிமா பற்றிய நினைவுகள் மெல்ல விலகி நிற்க, மீண்டும் ஜெசிகா சொன்ன, 'செக்ஸ் என்பது, ஒரு அற்புதமான லெட் அவுட்...' நரேனின் நினைவுக்கு வந்தது.கவிதாவின் வருகைக்காகக் காத்திருந்தான் நரேன்.— தொடரும்.தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !