உள்ளூர் செய்திகள்

உழைப்பால் உயர்ந்தவர்!

தமிழகத்தின் வருமான வரி துறையின் முதன்மை ஆணையர் எஸ். செந்தாமரைக் கண்ணனுடன் ஒரு பேட்டி!சென்ற இதழ் தொடர்ச்சி...கல்லூரி தரும், 180 ரூபாய் பஸ் கட்டணத்தை மிச்சம் பிடிக்க, கல்லூரிக்கு நடந்தே சென்று வந்தேன். அந்த பணத்தில், கல்லூரிக்கு கட்ட வேண்டிய கட்டணம், 120 ரூபாய் போக, மீதி, 60 ரூபாயில், அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்வேன்.தினமும் விடுதிக்கு, 'இந்து' ஆங்கில பத்திரிகை வரும். அப்போது தான், என் வாழ்க்கையில், 'தி இந்து' பத்திரிகையை முதன் முதலில் பார்த்தேன். அதுவரை, ஆங்கில பத்திரிகையை கண்ணால் கூட பார்த்ததில்லை.விடுதியில் தங்கிய போது, அங்கு தங்கியிருந்த ராஜேந்திரன் என்ற நண்பரின் அறிமுகம் கிடைத்தது. எம்.ஏ., முடித்து சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர், ஐ.பி.எஸ்.,க்கு தேர்வு ஆகி, முசவுரிக்கு பயிற்சிக்காக செல்ல வேண்டும்.அவரிடமிருந்து தான் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதுவது பற்றி நிறைய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். அவர், பின்னாளில், டி.ஜி.பி.,யாக சிறப்பாக பணி செய்து, தமிழகத்தில் பணி நிறைவு பெற்றார்.பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ரொம்ப செல்வாக்கு உள்ளவர்கள் தான், ஐ.ஏ.எஸ்., மாதிரி தேர்வுகளை எழுத முடியும் என்று, பல கிராமத்து இளைஞர்கள் நினைப்பது போல நானும், அப்போது வரை தவறாக நினைத்தேன். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, எளிமையாக பழகும், ராஜேந்திரனை பார்த்து, பேசி, பழகிய பின் தான், ஐ.ஏ.எஸ்., கனவு சாத்தியமில்லாத விஷயம் இல்லை என்று உணர்ந்தேன்.எம்.எஸ்சி., முடித்த பின், (பத்து மார்க்கில், முதல் வகுப்பை தவற விட்டேன்) தொடர்ந்து, அந்த விடுதியிலேயே தங்கினால், நானும் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராக முடியும் என்பது புரிந்தது. என் கிராமத்திற்கு திரும்பி சென்றுவிட்டால், அங்கு உட்கார்ந்து படிக்க முடியாது. சட்டக் கல்லூரியில் சேர்ந்தால், மூன்று ஆண்டுகள் படித்து பட்டமும் பெறலாம், இடையில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் போட்டி தேர்வில், ஐ.ஏ.எஸ்., தேர்வும் எழுத லாம். விடுதியில் இடம் கிடைத்தது. ஆனால், சட்டக் கல்லூரி அனுமதிக் கான, எலெக்ஷன் எல்லாம் காலதாமதமானதால், தொடர்ந்து விடுதியில் இருக்க முடியவில்லை.வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு, அப்போது ஒரு வேலைவாய்ப்பு திட்டம் அமலில் இருந்தது. கிராமத்தில் பணி, மாத சம்பளம், 45 ரூபாய். அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி. சென்னையில் இருக்க முடியாததால், விரிஞ்சிபுரம் என்ற இடத்தில் பணியை ஆரம்பித்தேன். எங்கள் கிராமத்திலிருந்து, 15 கி.மீ., என்பதால், சைக்கிளில் சென்று வந்தேன்.பிறகு, 1975 - 1976 ஆகிய இரு ஆண்டுகளிலும், சிவில் சர்வீஸ் தேர்வு - ஐ.ஏ.எஸ்., தேர்வுகள் எழுதினேன்; தேர்வு பெறவில்லை. 1975ம் ஆண்டு, அரசு பணியில் உதவியாளர்கள் பணிக்கான தேர்வு எழுதினேன்; தேர்வானேன். டில்லியில் தகவல் ஒலிபரப்பு அமைச்சரகத்தில், உதவியாளர் பணி கிடைத்தது; டில்லிக்கு போய் வேலையில் சேர்ந்தேன்.டில்லிக்கு சென்றதால், சில நல்ல விஷயங்கள் நடந்தன. முதலாவதாக, ஐ.ஏ.எஸ்., தேர்வு குறித்து நல்ல தெளிவு கிடைத்தது.ஐ.ஏ.எஸ்., எழுதி தேர்வு பெற்றவர்கள், ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் பெற்ற மதிப்பெண் களையும் தொகுத்து, சிறு புத்தகமாக வெளி யிடுகின்றனர். 60 மார்க், மொத்தத்தில் போதுமானது என்று புரிந்தது.மேலும், ஐ.ஏ.எஸ்., பரீட்சையில் தேர்வு பெற்று, நேர்முகத் தேர்வுக்கு சென்று, வெளியே வருபவர்களை சந்தித்து, 'இன்டர்வியூ எப்படி இருந்தது; என்ன கேள்வி எல்லாம் கேட்டனர்?' என்று கேட்டு, நேரடித் தகவல்களை அறிந்தேன்.இவையெல்லாம் எனக்கு நிறைய தன்னம் பிக்கையை கொடுத்தன. டில்லியில், அலுவலக நேரம் போக, மீதி நேரம் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு, என்னை தயார் செய்வதி லேயே செலவழித்தேன்.தமிழ் இலக்கியம், கணிதம், இந்திய வரலாறு, ஆங்கிலம், பொது அறிவு ஆகிய ஐந்து சப்ஜெக்ட்களிலும், 1977ல், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதினேன். அதில் தேர்ச்சிப் பெற்றேன்.தேர்வில், பாசானவர்களில் தேவையான நபர்களை, நேர்முக தேர்வுக்கு அழைக்கின்றனர். எழுத்துத் தேர்வின் மார்க்குகள் மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற மார்க்குகள் இரண்டையும் கூட்டி, மிகவும் அதிகமாக மார்க் வாங்கியவரிலிருந்து ஆரம்பித்து, லிஸ்ட் போடுகின்றனர்.சுமார், 800 பேர்களில் எனக்கு, 234வது ராங்க் கிடைத்தது. சிறந்த மார்க் வாங்கியவரிடமிருந்து, ஆரம்பித்து, அவரவர் எந்த பணியில் சேர விரும்புகின்றனர் என்று கேட்கப்படுகிறது. பொதுவாக முதல் சாய்ஸ், ஐ.ஏ.எஸ்., அடுத்தது, ஐ.எப்.எஸ்., அடுத்து, ஐ.பி.எஸ்., அடுத்து, ஐ.ஆர்.எஸ்., மற்றும் பல சர்வீஸ்கள்.ஆனால், இதில் விதிவிலக்கும் உண்டு. பெஸ்ட் ராங்க் பெறுபவர்களில் சிலர், 'எனக்கு போலீஸ்துறை வேண்டும்; ஐ.ஆர்.எஸ்., வேண்டும்' என்று கேட்பதும் உண்டு. நான் பெற்ற ராங்க்கிற்கு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளில் இருந்த காலி இடங்கள் எல்லாம் முடிந்து விட்டன. எனக்கு, ஐ.ஆர்.எஸ்., கிடைத்தது.எனக்கு, நேர்முக தேர்வு, 30 நிமிடங்கள் நடந்தது. மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். அதிகார தோரணை ஏதுமின்றி, அன்பாக பேசினர். கணிதம், தமிழ் இலக்கியம் பற்றி சில கேள்விகள் கேட்டனர்; சரியாக பதில் சொன்னேன்.விரிஞ்சிபுரம் என்ற ஊரில், நான் ஆசிரியராக பணி ஆற்றியதை அறிந்த ஒரு பேராசிரியர், விரிஞ்சிபுரம் கோவிலின் மூலவரின் பெயர், அம்மனின் பெயர் என்ன என்று கேட்டார். மூலவர் பெயர் மார்க்கபந்து என்று சரியாக கூறினேன். ஆனால், அம்மனின் பெயர் ஞாபகம் வரவில்லை. 'சாரி, தெரியவில்லை...' என்றேன். அவர் சரியான பெயரை கூறினார்.நம் வாழ்க்கையின் போக்கையே நிர்ணயிக்க போகும் அந்த இன்டர்வியூவிற்கு, பலர் முழு சூட்- கோட்டில் வந்தனர். என்னிடம், சூட்-கோட் கிடையாது. நண்பர் ஒருவரிடமும் டை இரவல் வாங்கி கட்டிக் கொண்டு, பேன்ட், முழுக்கை சட்டை, ஷூவுடன் சென்றேன். பல மாதங்களாக, நிறைய படித்து, என்னை தயார் செய்து இருந்தேன்.பின், ஏப்ரல் 14, 1978ல், தமிழ் வருடப்பிறப்பு அன்று, ஐ.ஏ.எஸ்., தேர்வின் இறுதி ரிசல்ட் வெளியானது.ஐ.ஆர்.எஸ்.,க்கு நான் தேர்வானேன் என்பதை, நான் தகவல் ஒலிபரப்பு அமைச்சரகத்தில் பணிபுரிந்ததால், பழக்கமான ஒரு அதிகாரி மூலம், ஒரு நாள் முன்பாகவே அறிந்து கொண்டேன்.'எஸ்.செந்தாமரைக் கண்ணன் ஐ.ஆர்.எஸ்.,' இந்தியன் ரெவின்யூ சர்வீஸ் லிஸ்டில் என் பெயரைக் பார்த்ததும், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றேன். உடனே, அங்கிருந்து இரண்டு தந்திகள் கொடுத்தேன் - முதலாவது என் தாயாருக்கு; இரண்டாவது, என் நெருங்கிய நண்பர் மூர்த்திக்கு.ஐ.ஆர்.எஸ்., தேர்வு ஆனதும், பயிற்சிக்கு வரும்படி உத்தரவு வந்தது. மீண்டும், ஒரு முறை ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத விரும்பினேன். ஆனால், முடியவில்லை. அந்த பேட்சில், இந்தியன் ரெவின்யூ சர்வீஸ் அதிகாரிகள், 120 பேர் இருந்தோம். நாக்பூரில் ஒரு ஆண்டு முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டது.— தொடரும்.* இந்தியாவில் அரசுப் பணியிலும், தனியார் துறையிலும், லஞ்ச புகார்கள் நிறைய வருகின்றன. ஆனால், அரசியல்வாதிகளின் சிபாரிசுகளை ஏற்காத, லஞ்சம் சிறிதும் நுழைய முடியாத நேர்மையாக செயல்படும் துறை ஒன்றும் இருக்கிறது.அகில இந்திய அளவில், திறமையான இளைஞர்களுக்கு தேர்வுகள் நடத்தி, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை மத்திய, மாநில அரசுகள் நிர்வாகத்தில், மிக முக்கிய பதவிகளில் பணிபுரிய வழி செய்யும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தான் அது.* ஐ.ஏ.எஸ்., பணிக்கான தேர்வுகளை, 50 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக நடத்தி வரும் இந்நிறுவனம், லஞ்சம் மற்றும் சிபாரிசுகளுக்கு துணை போகாமல், நேர்மையாக தேர்வுக்கு வரும் லட்சக் கணக்கான இளைஞர்களின் அறிவு, திறமையை மட்டும் சீர்தூக்கிப் பார்த்து, ஏழை, பணக்காரர் என்று பாகுபாடின்றி, தேர்வு செய்கிறது. சுதந்திர இந்தியா விற்கு, இந்நிறுவனம் ஒரு வரப்பிரசாதம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.***எஸ். ரஜத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !