திரும்பிப் பார்க்கிறேன்! (3)
பிட் மனுக்கு பூஜையும், 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிகையும்!உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேரை வாழ வைத்துக் கொண்டிருப்பது, பிட்மன் கண்டுபிடித்த சுருக்கெழுத்து. 30 ஆண்டுகளுக்கு முன், கம்ப்யூட்டர் அறிமுகமாவதற்கு முன்வரை, 10 பேர் அலுவலகத்தில் இருந்தால், அதில், 'ஸ்டெனோகிராபர்' ஒருவர் இருப்பார்.என்னுடன், 'பாரி' நிறுவனத்தில் பணிபுரிந்த, சி.ஜி.ராமகிருஷ்ணன் பழகுவதற்கு மிகவும் இனியவர். கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்த சர் ஐசக் பிட்மனுக்கு நன்றி சொல்லும் வகையில், அவரது பிறந்த நாளான ஜனவரி 4ம் தேதியை, 'பிட்மன் ஜெயந்தி' என்று கொண்டாடுவார்.முதலில் அவரை கேலியாக பார்த்த பலர், பின்னர் அவரது செயல்பாடுகளை மதிக்க ஆரம்பித்தனர். இந்தியாவின் பல இடங்களில் உள்ள, 'ஸ்டெனோகிராபர்கள்' அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிட்மனின் கொள்ளுப் பேரன் பீட்டர் பிட்மன், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் நகரத்திலிருந்து இவருக்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து, வாழ்த்து தந்தி அனுப்பியிருந்தார்.மே 10, 1984ல், 'குமுதம்' இதழில் இதுகுறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரையை படித்த யாரோ ஒருவர், 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிகைக்கு தெரிவித்திருக்கிறார். கட்டுரையின் சிறப்பை உணர்ந்து, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' நிறுவனத்திலிருந்து என்னை தொடர்பு கொண்டு, இந்தக் கட்டுரையை சுருக்கி வெளியிட அனுமதி கேட்டனர். உலகத்தின் மிக அதிக, 'சர்க்குலேஷன்' உள்ள, 25 மொழிகளில் வெளியாகும், 'ரீடர்ஸ் டைஜஸ்ட்'டில், அனைத்து பதிப்புகளிலும் பிட்மன் பற்றிய கட்டுரை, என் பெயர் மற்றும் குமுதம் - இந்தியா என்றும் வெளியானது.'குமுதம் இதழில், நாம் பலருக்கு, 'பப்ளிசிட்டி' கொடுக்கிறோம். ஆனால், உலகம் முழுவதும், நம் இதழுக்கு, ரஜத், 'பப்ளிசிட்டி' பெற்றுக் கொடுத்திருக்கிறார்...' என்று பாராட்டினார், ஆசிரியர் எஸ்.ஏ.பி., சஞ்சயுடன் சில நிமிடங்கள்!நவ., 25, 1979 - ஞாயிற்றுக்கிழமை.ரா.கி.ரங்கராஜன் எனக்கு போன் செய்து, 'இன்று, பிரதமர் இந்திராவின் இரண்டாவது மகன் சஞ்சய், சென்னை வருகிறார். அவரைப் பேட்டி எடுத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும்...' என்றார். 'சார், அவரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட்...' என்றேன்.'அதெல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என்று, எடிட்டர் சொல்லி விட்டார்...' என்றார்.தென்னிந்திய முஸ்லிம் இளைஞர்கள் மாநாட்டை சஞ்சய் துவக்கி வைப்பதை அறிந்தேன். அப்போது, பிரதமர் இந்திராவுக்கு அடுத்து, இந்தியாவிலேயே மிகவும், 'பவர்புல்' மனிதராக கருதப்பட்டவர், சஞ்சய்.மாநாடு நடக்கும் இடத்துக்கு சென்று, சந்திக்க அனுமதி கோரி, ஹிந்தியில் எழுதி அவருக்கு அனுப்பினேன். கூட்டம் முடிந்ததும் சந்திப்பதாக சொல்லி அனுப்பினார்.மாநாடு முடிந்ததும் அவசரமாக அங்கிருந்து வெளியேறி விட்டார். எங்கு சென்றார், எங்கு தங்குகிறார் என்ற தகவலும் கிடைக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு உடல்நலம் சரியாக இல்லை என்ற தகவல் கிடைக்கவே, எனக்குள் ஒரு பொறி தட்டியது.உடனே, மூப்பனார் வீட்டிற்கு சென்றேன். சஞ்சய் பயணம் செய்த கார், அங்கு இருந்தது. டிரைவரிடம் சஞ்சயின் நண்பர் என்று அறிமுகப்படுத்தி, காரின் முன் சீட்டில் உட்கார்ந்தேன். மூப்பனாரை பார்த்துவிட்டு திரும்பி வந்தார், சஞ்சய்.என்னை பார்த்ததும், 'என் சீட்டில் உட்கார உங்களுக்கு எவ்வளவு தைரியம்?' என்றார், ஆங்கிலத்தில்.'மன்னித்து விடுங்கள். என்னை சந்திக்க ஒப்புக் கொண்டீர்கள். ஆனால், திடீரென்று கிளம்பி விட்டீர்கள். எனக்கு உங்கள் பேட்டி வேண்டும். கார் டிக்கியில் கூட உட்கார நான் தயார். நீங்கள் கூறுவதை கேட்க வேண்டும் அவ்வளவுதான்...' என்றேன்.சிரித்தபடியே, 'பின் சீட்டில் உட்காருங்கள்...' என்றார், சஞ்சய்.நடுவில் நான் அமர, ஒரு பக்கம் ஆந்திர மாநில முதல்வர் பாஸ்கர் ராவ், மறுபக்கம் மத்திய அமைச்சர் ஒருவர் அமர்ந்தனர். கார் கிளம்பி கொஞ்ச துாரம் சென்ற பிறகே, நான் எடுத்துச் சென்றிருந்த, 'டேப் ரிக்கார்டர், நோட்புக்' மற்றும் பேனா எல்லாம் அடங்கிய பையை, என் வண்டியில் வைத்து, மூப்பனார் வீட்டில் விட்டிருந்தது, ஞாபகம் வந்தது. அவர் பேசுவதை குறித்துக் கொள்வது எப்படி என, விழித்தேன். 'கேள்விகளைக் கேளுங்கள்...' என்றார், சஞ்சய்.ஒரு கேள்வி கேட்டு, அவர் சொல்லும் பதிலை உள்வாங்க வேண்டும், அதேசமயம் அடுத்த கேள்வியை மனதில் தயாரிக்க வேண்டும்; அவரது முக பாவனைகளை கவனிக்க வேண்டும். மனதை திடப்படுத்தி, பேட்டி எடுக்க தயாரானேன்.நான் கேட்ட கேள்விகளுக்கு, தெளிவாக பதில் சொன்னார், சஞ்சய்.தாஜ் கோரமண்டல் ஹோட்டல் அருகே, பார்லிமென்ட் உறுப்பினர் ஒருவர் வீட்டுக்கு சென்று, மோர் அருந்தினார். 'சில ஆண்டுகளில், நீங்கள் பிரதமராக ஆகிவிடுவீர்கள் என்று, சில ஜோசியர்கள் சொல்கின்றனரே...' என்றேன். 'எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை கிடையாது...' என்றார்.'எம்.ஜி.ஆர், - கருணாநிதி இருவரையும் எப்படி ஒப்பிடுவீர்கள்?' என்றதற்கு, 'கருணாநிதி, அரசியல் பிரச்னைகளை அரசியல் ரீதியாக பார்க்கிறார்; ஆனால், எம்.ஜி.ஆர்., அரசியல் பிரச்னைகளை, சினிமா ரீதியில் பார்க்கிறார்...' என்றார்.'கருணாநிதியை உங்களுக்கு முன்பே பர்சனலாக தெரியுமா?' என்று கேட்டேன்.'தெரியாது. எங்கள் இரு கட்சிகளுக்கும் தேர்தல் உடன்பாடு ஏற்பட்ட பிறகே, அவரை டில்லியில், முரசொலி மாறன் வீட்டில் முதலில் சந்தித்தேன். அவர் மிக புத்திசாலியான, திறமையான அரசியல்வாதி...' என்றார், சஞ்சய்.சென்னை விமான நிலையத்தை அடைந்தது கார். காரை விட்டு இறங்கிய சஞ்சய், அங்கிருந்த குலாம் நபி ஆசாத்திடம் (பின்னாளில் மத்திய அமைச்சரானார்), 'இவர் வண்டியை, மூப்பனார் வீட்டில் விட்டிருக்கிறார். இவரை அங்கு அழைத்துப் போக ஏற்பாடு செய்யுங்கள்...' என்று கூறி விடைபெற்றார்.வீட்டிற்கு வந்து மனதில் ஏற்றிக் கொண்டதை அப்படியே கோர்வையாக எழுதினேன். 'சஞ்சயுடன் சில நிமிடங்கள்...' என்ற தலைப்பில், டிச., 6, 1979 'குமுதம்' இதழில், நான்கு பக்கம் பேட்டி வெளியானது.'இது ஒரு ஐந்து நட்சத்திர கட்டுரை...' என்று பாராட்டினார், எஸ்.ஏ.பி., இளமையின் ரகசியம் பற்றி, முன்னாள் துணை பிரதமரான ஒய்.பி.சவான்...— தொடரும்எஸ். ரஜத்