திரும்பிப் பார்க்கிறேன்! (13)
மனித நேயம்!என் மனைவி ரஜனியின் நெருங்கிய தோழி என்.ஆர்.வசந்தா. வங்கி அதிகாரியாக இருந்தார். அவருக்கு நேர்ந்த அனுபவத்தை, என் மனைவி மூலம் அறிந்த, நான், 'குமுதம்' இதழ் ஆசிரியரிடம் தெரிவித்தேன்.'இது, மனிதநேயத்தின் சிறப்பான வெளிபாடு. இதைப் பற்றி கட்டுரை எழுத வேண்டும். உங்கள் மனைவியின் சினேகிதி மற்றும் அவரது குழந்தைகளை அட்டைப் படத்தில் போட வேண்டும்...' என்றார், ஆசிரியர்.சென்னை, தங்க சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த, தன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வசந்தா, தன் இரு சிறிய குழந்தைகளுடன் சென்றிருக்கிறார். திரும்பி வரும்போது, நல்ல வெயில், அசதி. பனகல் பார்க் பஸ் ஸ்டாப் வந்தபோது, திருமணத்தில் கொடுத்த பட்சணங்கள் அடங்கிய பை, குழந்தைகள் டிரஸ் இருக்கும் பையை மட்டும் எடுத்துக் கொண்டு, 10 சவரன் நகை, 2,000 ரூபாய் மற்றும் வீட்டு சாவி கொத்து அடங்கிய பையை, பஸ்சிலேயே விட்டுவிட்டார்.தவற விட்டதை அறிந்து சுதாரிப்பதற்குள், பஸ் கிளம்பி போய் விட்டது.தற்செயலாக, வசந்தா வசிக்கும் தெருவில் இருக்கும் நபர் கண்ணில் பட, 'கைப்பையை பஸ்சில் விட்டுவிட்டேன். ஆட்டோவில் துரத்த வேண்டும். ஐந்து ரூபாய் கொடுங்கள்...' என்று கேட்டு வாங்கி, 'இதோ வந்து விடுகிறேன்...' என்று சொல்லி, இரு குழந்தைகளையும் அவரிடம் விட்டுவிட்டு ஆட்டோவில் விரைந்தார்.தி.நகர் பஸ் நிலையத்தில், அவர் வந்த பஸ் இருந்தது. ஆனால், அதில் அந்த பையை காணவில்லை.'தொலைந்து போன பொருள் என்று, யாரும் எங்களிடம் எதுவும் கொடுக்கவில்லை...' என்று, டிப்போவில் இருந்தவர்கள் கூறினர். கவலையாக வீட்டுக்கு திரும்பியபோது, அந்த நபர், இரு குழந்தைகளையும் வீட்டு வாசலில் விட்டுச் சென்று இருப்பது தெரிந்தது. அருகில் இருந்த கரும்பு ஜூஸ்காரரை அழைத்து, வீட்டு வாசற் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்.கருணை உள்ளம் கொண்ட, வீட்டு உரிமையாளர், நடந்தவற்றை அறிந்து, 2,000 ரூபாய் கொடுத்து, 'செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்...' என்றார்.பால் வாங்கி குழந்தைகளுக்கு குடிக்க கொடுத்தார்.இரவு, படுக்கலாம் என்று நினைத்த போது, யாரோ வாசல் கதவை தட்டுவது கேட்டது. கதவைத் திறக்காமல், 'போலீசா, ஐ.டி., இருக்கா?' என்று கேட்டார், வசந்தா.'போலீஸ் இல்ல. இன்னைக்கு உங்க பையை எங்கேயாவது தொலைச்சீங்களா?' என்று கேட்டு, ஜன்னல் வழியாக பையை காண்பித்தார், வந்தவர்.பையை பார்த்த பின் சந்தோஷத்தில், என்ன பேசுவது என்று தெரியவில்லை.ஜோதிராம் என்ற அவர், விலாசம் கண்டுபிடித்த விபரத்தை கூறினார்:நீங்கள் பஸ்சில் விட்ட பையில், உங்கள் விலாசம் இல்லை. மாறாக, ஸ்ரீவில்லிபுத்தூர் டாக்டர் மருந்து சீட்டு இருந்தது. அவருக்கு போன் செய்து கேட்கலாமா என்று நினைத்தபோது, பையில் ஒரு திருமண அழைப்பிதழ் இருப்பது தெரிந்தது. நீங்கள் வருவீர்கள் என்று, கிருஷ்ணவேணி தியேட்டர் வாசலில், அரைமணி நேரம் காத்துக் கொண்டிருந்தேன்; நீங்கள் வரவில்லை. ஆட்டோ எடுத்து தங்க சாலைக்குச் சென்று, அந்த மண்டபத்தில் விசாரித்தேன். அப்போது உங்கள் உறவினர் ஒருவர், உங்களது முகவரியை கொடுத்தார்.பணம் மட்டும் பர்சில் இருந்தால், ஒரு விளம்பரம் போட்டு கூட கொடுத்து விடலாம். ஆனால், வீட்டு சாவி கொத்து மற்றும் நகைகள் இருந்தன. அவை இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படுவீர்கள் என்று புரிந்தது என்று கூறி, பையை ஒப்படைத்தார்.ஆட்டோ செலவுக்கு கூட பணம் வாங்கிக் கொள்ள மறுத்து, 'கடவுள் புண்ணியத்தில் நாங்கள் நன்றாக இருக்கிறோம்...' என்றார், வந்தவர்.பையை ஒப்படைத்தவர் பெயர், சரவணன். பழங்கால நடிகர் எஸ்.வி.சுப்பையாவின் மகன் என்று அறிந்த, வசந்தாவின் கணவர், மனைவியுடன், மந்தைவெளியில் இருக்கும் சரவணன் வீட்டுக்குச் சென்று, மனமார மீண்டும் நன்றி கூறினர். ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவும் மனிதாபிமானம் கொண்டவர்கள், பாராட்டுக்குத் தகுந்தவர்கள்.'குமுதம்' இதழில், வசந்தா மற்றும் அவரது குழந்தைகள் அட்டைப் படத்தில் வந்ததும், ஒரே நாளில் அவர் பணிபுரிந்த வங்கியில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்பது கூடுதல் செய்தி.திக்குவாய் பிரச்னை தீர்ந்தது எப்படி? அடுத்த இதழில்...— தொடரும்மற்ற தமிழ் பத்திரிகை ஆசிரியர்களிடம் இல்லாத சிறப்பு, 'வாரமலர்' இதழின் பொறுப்பாசிரியரிடம் உண்டு. தமிழகத்தின் முக்கிய நகரங்கள், சிறு நகரங்கள் என்று, எல்லா இடங்களுக்கும் பலமுறை தானே காரை ஓட்டிச் சென்ற அனுபவம் அவருக்கு உண்டு; எல்லா இடங்களும் அத்துப்படி.அவருடன் சில சமயம், புதுச்சேரி, மதுரை போன்ற இடங்களுக்கு காரில் சென்று இருக்கிறேன். திருச்சியில் ஒரு சிறிய சந்தில், சிறிய கடைக்கு எங்களை அழைத்துச் சென்று, மிகவும் சுவையான டிபன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.பெரிய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் என்று இல்லாமல், சுவையான, சுத்தமான உணவு கிடைக்கும் இடங்களை அவர் அறிவார். நம்மில் பலருக்கு, மயிலாப்பூரில் இருந்து தேனாம்பேட்டை போவது போல, வெளியூர்களுக்கு 300 - 400 கி.மீ., துாரம், காரை ஓட்டிச் செல்வது, பொறுப்பாசிரியருக்கு மிகவும் சாதாரணம்.'தினமலர் - வாரமலர்' பொறுப்பாசிரியருக்கும், 'குமுதம்' நிறுவனரும், ஆசிரியருமான, எஸ்.ஏ.பி.,க்கும் இடையே வியக்கத்தக்க ஒற்றுமைகள் பல உண்டு. இருவரும் எக்காரணம் முன்னிட்டும்,தங்களது புகைப் படங்களை தங்கள் பத்திரிகையில் வெளியிட விரும்பியதில்லை. தங்களைவிட, தங்கள் பத்திரிகை தான் முக்கியமானது என்பது, அவர்கள் எண்ணம்.இரண்டாவதாக, இருவரும் அலுவலகத்திற்கு வரும்போது தங்களின் காரை, அவர்களே ஓட்டி வருவர். மற்றவருக்கு தெரியாமல் எளியவருக்கு உதவி செய்வர். எந்த விஷயத்தைப் பற்றியும் அரை நொடியில் முடிவெடுப்பர்.எஸ். ரஜத்