உள்ளூர் செய்திகள்

வேர்களைத் தேடி ... எல்.முருகராஜ்

காலம் ரொம்பவே சோம்பேறித்தனமாக மாறி வருகிறது... பாத்ரூம் போவதற்கு கூட, 'பைக்'கில் போகலாமா என யோசிக்கிறது. இந்நிலையில், பழமையும், பெருமையும் வாய்ந்த நம் மண்ணைப் பற்றி, அதன் மரபுகளைப் பற்றி, பழந்தமிழ் மாண்பைப் பற்றி, சுருக்கமாக சொல்வதானால், நம் வேர்களைப் பற்றி எப்படி இந்த தலைமுறை தேடிப் போய், தெரிந்து கொள்ளப் போகிறது... யார் இதை அடையாளம் காட்டுவது?இதற்கு அவரையும், இவரையும் பொறுப்பேற்க சொல்லாது, நாமே பொறுப்பேற்போம் என மதுரை தானம் அறக்கட்டளையும், இந்திய தேசிய கலாச்சாரப் பராம்பரிய அறக்கட்டளையின் மதுரை பிரிவும் கைக் கோர்த்து, களம் இறங்கின. முதல் கட்டமாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட மதுரையை தேர்ந்தெடுத்துள்ளது. இங்குள்ள மலைகள் எல்லாம், சாதாரண மலைகள் அல்ல; அனைத்தும் கலைக் கூடங்கள். யானை மலை, நாகமலை, அழகர்மலை உள்ளிட்ட ஒவ்வொரு மலையும், ஓராயிரம் கதை சொல்லும் சிறப்பைக் கொண்டது. அதிலும், அழகர்மலையின் தொடர்ச்சியாக உள்ள நீலமலையில், 'பிராமி' வடிவில் உள்ள தமிழ் எழுத்துக்கள் பொக்கிஷமாகும். இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பாகவே எப்படி வணிகர்கள் செயல்பட்டனர், என்ன மாதிரி வணிகம் நடைபெற்றது, மதுரையின் முற்கால பெயரான, 'மதிரை' என்பது போன்ற விஷயங்களை அறிந்து கொள்ளலாம். இது போல நாகமலை போன்ற பகுதிகளில் உள்ள சமணர் படுகைகள் ஒவ்வொன்றும் ஒரு பல்கலைக்கழகம். இங்குள்ள குகை தளங்கள், படுகைகள், படைப்புச் சிற்பங்கள், ஓவியங்கள் என்று ஒவ்வொன்றை பற்றியும் சொல்ல ஓராயிரம் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இப்படிப்பட்ட இடங்களுக்கு, இலவசமாக வாகனங்களில், காலை உணவு கொடுத்து அழைத்துச் செல்வதுடன், சம்பந்தபட்ட துறை அறிஞர்கள் வெங்கட்ராமன், வேதாசலம் ஆகியோரைக் கொண்டு விளக்கமும் கொடுக்கின்றனர். நிஜமாகவே இப்படி எல்லாம் மெனக்கெடுபவர்கள் இருக்கின்றனரா என்று சந்தேகத்துடன் தொடர்பு கொண்டவர்கள், சர்வமும் நிஜம்தான் என்பது தெரிந்து, இப்போது குழந்தைகள், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து, புதுப்புது இடங்களுக்கு சென்று வருகின்றனர். 'இதன் மூலம் வரலாற்றுப் பெருமையை உணரச் செய்வதுடன், இதை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வையும் உருவாக்க முடிந்தால், அதுவே, எங்களுக்கு பெரிய வெற்றிதான். நம் வேர்களை தலைமுறை, தலைமுறையாக பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இதை செய்கிறோம். ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படும் இந்த பயணத்தில், யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அனைத்தும் இலவசம். விருப்பமுள்ளவர்கள் முன்கூட்டியே பதிந்து கொள்வது மட்டும் அவசியம்...' என்கிறார் இந்த பாரம்பரிய சுற்றுலா பிரிவின் தலைவர் பாரதி. அவரது மொபைல் எண்: 93441 02841. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !