அன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்
அன்புமிக்க சகோதரி,நான் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை; என் கணவர், ஒரு தனியார் நிறுவனத் தொழிலாளி. அவர் எனக்கு அத்தை மகனாக இருந்ததால், ஆசிரியப் பட்டப்படிப்பு படித்திருந்த என்னை, ஐ.டி.ஐ., மட்டுமே படித்திருந்த அவருக்கு மணம் செய்து வைத்தனர். வறுமையென்றோ, வசதியென்றோ சொல்ல முடியாத, நடுத்தரமென வாழ்வு. சில ஆண்டுகள் வரை சுமாராக ஓடியது. எல்லா குடும்பங்களிலும் எழும் சராசரி பிரச்னைகள் போல, எங்கள் இல்லத்திலும் எழும், மறையும்.தொழிலகத்தில் கடுமையாக உழைத்துத் திரும்பும் அவர், களைப்பு, சோர்வு காரண மாகவோ, அவரின் ஆண்மைக் குறைபாடோ தெரியவில்லை... என்னை முழுமையாக திருப்தி படுத்தாமலே இருந்தார். இதை எங்கு, யாரிடம் சொல்லி அழுவதென தெரியாமல் தவித்தேன். எங்களின் தவணை முறை உறவில், ஒரு பெண் குழந்தையும் பிறந்து விட்டது. என் மகளுக்கு நான்கு வயது ஆகியும், பழைய போராட்டமே எங்களுக்கிடையே எழும். வேறு வழியின்றி அடங்கி விடுவேன்.நான், வேறு பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன். புதிய பள்ளியில், ஆசிரியர் ஒருவரின் திறமை, தோற்றம், வித்தியாசமானவராகத் திகழ்ந்தது மட்டுமின்றி, என்னை அறியாமலேயே எனக்குள் அவர் மீது ஈடுபாடு ஏற்பட்டது. எனவே, நல்ல நண்பர்களாக பழகி, மனப்போராட்டங்களைப் பகிர்ந்து கொண்டேன்; என் கணவருக்கும் அறிமுகம் செய்து வைத்தேன். அவரும், என் கணவரும் நெருங்கிய நண்பர்களும் ஆயினர். ஆறு மாத காலம் தான் ஓடியது.ஒரு நாள் திடீரென, சற்றும் எதிர்பாராத வகையில், தொலைபேசியில், என்னிடம் உல்லாசமாக இருக்க விரும்புவதாகவும், தவறாக நினைத்தால் மன்னித்து, மறந்து விடுமாறு கேட்டதோடு, "உன் எந்த விதமான பதிலுக்கும், ஒரு வாரம் வரை காத்திருப் பேன்...' என்றார். மேலும், "ஏதோ தோணுச்சு... கேட்டுட்டேன். சரியென்றால் இருக்கலாம்; இல்லையென்றால், விஷயத்தைப் பெரிது பண்ணாமல், நம் பெயர் கெடாமல் நாகரிகமாக விலகி விடலாம்... நம் நட்பையும் இனி நிறுத்திக் கொள்ளலாம். ஏனெனில், வரக்கூடாத சிந்தனை வந்துவிட்ட பிறகு, அந்த சிந்தனை மீண்டும் வந்து வந்து நம்மைச் சங்கடப்படுத்தும்!' என்றார்.அவர் விதித்த ஒரு வார கெடு முடிவதற்குள், ஒரு வழியாகி விட்டேன். என்ன தான் ஆகிறது பார்க்கலாம் என, ஒன்றுமே சொல்லாமல் இருந்து விட்டேன்.ஒரு வாரத்திற்குப்பின், ஒரு நாள் இரவு பத்து மணிக்கு, எதிர்பாராமல் என் வீட்டுக்கு வந்து விட்டார். என் கணவர் நைட் ஷிப்ட்டுக்கு சென்றிருந்தார். நான் நைட்டியில் இருந்தேன். மகள் தூங்கிவிட்டாள். "இந்த சிந்தனை உனக்கு ஏன் வந்தது எனக் கேட்க மாட்டாயா?' எனக் கேட்டார்.நான் மவுனம் சாதித்தேன். "உன் கணவர், உங்களிருவரின் செக்ஸ் குறைபாட்டை ஒரு நாள் என்னிடம் கூறி, வருந்தினார். பிறகு தான், உங்களிருவரில் ஒருவருக்காவது ஆறுதலாக இருக்கலாமென உன்னிடம் கேட்டேன்; தவறா?' என்றபடியே, திடீரென கட்டிப்பிடித்து, அழுத்தமாக முத்தமிட்டார்.ஏற்கனவே பசியிலிருந்த நான், செயலிழந்து விட்டேன். கதவை அடைத்துவிட்டு வந்து, என்னையும் அடைந்து விட்டார். என் கணவரில்லாத நாட்களிலெல்லாம், வாரம் ஓரிரு முறை, இரவு, பகல் என சந்தர்ப்பங்களிலெல்லாம் பயன்படுத்திக் கொண்டார். விளைவு... வயிற்றில் மீண்டும் ஒன்று வளர்ந்து, பிறந்து விட்டது. அச்சு அசல் மாறாமல் அப்படியே அவரையே உரித்து வைத்தது போல, மீண்டும் பெண் குழந்தை பிறந்து விட்டது.சில நாட்களுக்கு பின், ஏதோ ஒரு ஒன்றுமில்லாத பிரச்னையை பெரிதாக்கி, என் கணவருடன் வாக்குவாதம் செய்து, திட்டமிட்டு பகைமை உருவாக்கி, பிரிந்து விட்டார். என்னையும், கண்டு கொள்வதோ, பேசுவதோ இல்லை. அவரின் மகளுக்கு இரண்டு வயதாகிறது. பெண்ணாகப் பிறந்ததால், யாருக்கும் வேறுபாடு அதிகமாகத் தெரியவில்லை. ஆனால், குழந்தையின் ஒவ்வொரு அசைவும், அவரின் ஜாடையை எனக்கு அடையாளம் காட்டுகிறது.என் கணவர் பாவம்; அப்பாவி... குழந்தை தனக்குப் பிறந்தாகவே கருதி, கொஞ்சி, மகிழ்ச்சியில் திளைக்கிறார். எனக்குதான், என்றைக்கு குட்டு வெளிப்படுமோ என, இதயம் படபடப்பு அடைகிறது. தூக்கம், நிம்மதி, போச்சு; எதிலுமே நாட்டம் இல்லை. பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறது.இனி நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து ஒரு வழி சொல்லி, என்னைக் காப்பாற்ற வேண்டுமென, அன்பு சகோதரி உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். தற்கொலை எண்ணமும் அடிக்கடி மேலிடுகிறது. எனக்கு நல்ல வழி சொல்லுங்கள் சகோதரி... ப்ளீஸ்! — இப்படிக்கு, சகோதரி.
அன்புள்ள சகோதரிக்கு — உன் கடிதம் கிடைத்தது.முதலில் உன் கல்வித்தகுதி பற்றி பார்ப்போம். நான்கு பட்டங்கள் பெற்ற பெண்கள் கூட, கைநாட்டு கேஸ்களை திருமணம் செய்து, மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஆசிரியப் பட்டப் படிப்புக்கும், ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி படிப்புக்கும், மலைக்கும், மடுவுக்கும் ஆன பெரிய வித்தியாசம் இல்லை.திருமண உறவை அதிப்ருதியுடன் ஆரம்பித்திருக்கிறாய் சகோதரி. அதனாலேயே இத்தனை பிரச்னைகளும். அதீத கற்பனைகளுடன் அணுகப்படும் தாம்பத்ய உறவுகள், பெரும்பாலும் சோபிப்பதில்லை.அத்தை மகனை நீ மணந்திருக்கிறாய்... சிறுவயதிலிருந்தே அவனைப் பார்த்து வளர்ந்திருக்கிறாய். அத்தை மகன் அஜீத்குமாரை விட, அந்நியன் சந்தானத்தைதான் மனம் ஈர்க்கும்.உன் கணவருக்கு, மனப் பதட்டம் காரணமாக, தற்காலிக ஆண்மைக் குறைவு (மேல் மெனோபாஸ்) ஏற்பட்டிருக்கலாம். அதை உன் அன்பின் மூலம், அனுசரனையான அணுகுமுறை மூலம் நீ சரிப்படுத்தி இருக்கலாம். பெண்களை முழுமையாக திருப்திபடுத்தும் ஆண்கள் இதுவரை உலகில் பிறக்கவே இல்லை; இனிமேல் பிறக்கப் போவதும் இல்லை. 90 சதவீதம் அன்பு கிடைத்தால் போதும்; பத்து சதவீத தாம்பத்யத்தில் திருப்தி அடைகின்றனர் இந்தியப் பெண்கள்.உன் கணவருக்கு, உயர் ரத்த அழுத்தமோ, நீரிழிவு நோயோ இருக்கிறதா என பரிசோதித்து, தகுந்த மருத்துவம் மேற்கொள்ளலாம். ஆண்மைக் குறைவுக்கு, சித்தாவிலும், ஹோமியோபதியிலும் மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன; சாப்பிட்டு பார்க்கலாம்.நீ மாற்றலாகிப் போன புதிய பள்ளியில், ஒருவரை சந்தித்து, அவரை திட்டமிட்டு குடும்ப நண்பராக்கியிருக்கிறாய். இது எப்படி இருக்கிறது தெரியுமா சகோதரி... ஆப்கானிஸ்தானத்தில் சுற்றிய தீவிரவாதியை வீட்டுக்கு கூட்டிவந்து, வெடிகுண்டு வைத்துக் கொண்டது போலிருக்கிறது உன் செய்கை.அந்த ஆள், பெண்களை உபயோகித்து எறியும் ஜித்தன். உன் பணமும், உடலும் மட்டுமே அவனது குறிக்கோள். அவன், தவறான உறவுகளை, ஒரு கட்டத்திற்கு பிறகு தொடர விரும்பாதவன். தன் ஆர்வமும், வேட்கையும் தீர்ந்தவுடன், பழகிய பெண்ணை வெட்டிவிடும் சாகசன் அவன். உன்னைப்போல பல திருமணமான பெண்களின் வாழ்க்கையை கெடுத்திருப்பான். நட்புக்கு அர்த்தம் தெரியாதவன். உண்ட வீட்டுக்கு, இரண்டகம் செய்திருக்கிறான். அவன், உன்னை விட்டு பிரிந்தது எல்லாவகையிலும் நல்லதுதான்.அவன் வழியாக உனக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள்; ஏற்கனவே, திருமண உறவின் மூலமாக ஒரு மகள். மொத்தத்தில், இரு மகள்களின் எதிர்காலம் உன் கையில். இனியாவது, அலைந்து திரியும் மன மிருகத்தை, கட்டிப்போடு. புதிதாக எந்த ஆண் நண்பருடனும் பழகாதே... கணவன் உனக்கு செய்த நல்லவைகளை மனதுக்குள் ஓடவிட்டு பார்... கணவன் இனிப்பான்.இரண்டாவது மகளுக்கு, ஆடை உடுத்தி விடுவதிலும், தலைவாரி விடுவதிலும் சிறு சிறு மாற்றம் செய். அவள், அவன் சாயலில் இருப்பதாக நீ நினைப்பது, குற்ற உணர்வுடன் கூடிய மனப்பிரமை. உன் தற்கொலை எண்ணம், உன் மகள்களை நடுரோட்டில் நிறுத்திவிடும். இனி நீ வாழப் போகும் தடுமாற்றம் இல்லாத வாழ்க்கை, பழைய வழித் தவறல்களை செம்மைப்படுத்தி விடும்.நீ ஆசிரிய பணியில் இருக்கிறாய் தங்கச்சி. உன்னை அழகிய முன்மாதிரியாக வைத்து, ஆயிரம் மாணவ - மாணவியரின் எதிர்காலம் சிறக்க வேண்டும், இல்லையா? அதனால், மன தடுமாற்றங்களை ஜெயித்து கம்பீரமாக நடை போடு. கடந்த கால நடத்தைக்கு, இறைவனிடம் மன்னிப்பு கேள்... கட்டாயம் மன்னிப்பான். தவறு செய்யாதோர் யார் தங்கச்சி. தவறு செய்து, மீள்பவன் தான் மனிதன்; தொடர்ந்து தவறுகளில் உழண்டு கொண்டிருப்பவன் மிருகம்.மிருக நிலை வேண்டாம் சகோதரி... மனிதராய் வாழ்வோம்!திருமண பந்தம் தாண்டிய தவறான உறவுகள், எப்போதும் தற்தொலைகளையும், வன்கொலைகளையும் பரிசளிக்கின்றன. உன் இரு மகள்களை நன்கு படிக்க வை. உன் மகன், கணவனை, இனியாவது காதலி. மிகச் சிறந்த ஆசிரியையாக பரிமளி. எதிர்காலத்தில், சகலத்திலும் ஜெயிக்கப் போகும் உனக்கு, என் வாழ்த்துக்கள்!— என்றென்றும் அன்புடன், சகுந்தலா கோபிநாத்.