உள்ளூர் செய்திகள்

பழக்கத்தை, வழக்கமாக்கி கொள்ளுங்கள்!

இச்சை செயல் என்றால், விரும்பி செய்வது; அனிச்சை செயல் என்றால், நம்மை அறியாமல், தாமாக இயங்குவது.ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறோம்... நம்மை, ஒரு கொசு கடிக்கிறது; உடனே, 'பட்'டென்று அந்த இடத்தில் அடிக்கிறோம். மறுநாள் காலையில், உடலில், உடையில், கொசு சிந்திய ரத்தத்தை பார்க்கிறோம். எப்படி வந்தது இந்த ரத்தத் துளி!'தூக்கத்தில் நம்மை அறியாமல் நாம் செய்த மென் கொலை...' என்பது புரிகிறது. நம் தூக்கம் கலையவில்லை; நாம் கொசுவை அடித்தது, நமக்கே தெரியவில்லை. இதைத் தான், அனிச்சை செயல் என்கிறோம்.என் அமெரிக்க நண்பர் கிறிஸ் சுப்பிரமணியனுடன், அமெரிக்காவில் காரில் பயணித்த போது, அவர், கார் ஓட்டிய விதம், எனக்கு நடத்தப்பட்ட மறைமுகப் பாடமாகவே கருதினேன். காரணம், யாரும் அற்ற வனாந்திர பகுதியில் கூட, சிக்னலுக்கு மதிப்பு கொடுத்து, சில நிமிடங்கள் நின்று, பச்சை விளக்கு எரிந்ததும் தான் புறப்பட்டார். வளைவுகளில், 'இண்டிகேட்டர்' போட்டு திரும்பினார். 'வேகத்துடன் செல்லலாம்...' என்று, சாலைக் குறியீடுகள் இருந்தால் அதன்படி, வேகத்தை கூட்டினார்; குறைத்தார்.'போக்குவரத்து போலீசார் அமைத்துள்ள கேமராக்களின் கண்களில் சிக்கி, 'சார்ஜ் ஷீட்' வாங்கி விடுவீர்கள் என்று தானே இப்படியெல்லாம் ஓட்டுகிறீர்கள்?' என்று, கேட்டேன்.'இல்ல; என் இயல்பே இது தான்...' என்றார்.'பாராட்டுகிறேன்; ஆனால், 'இண்டிகேட்டர்' போட்டு ஓட்ட வேண்டும் என்று, எந்த போலீசும், உங்களை வற்புறுத்த முடியாது. ஆனாலும், எவருமே இல்லாத இடத்திலும், 'இண்டிகேட்டர்' போட்டு ஓட்டுகிறீர்களே... இது எப்படி?' என்றேன்.'இந்த பழக்கத்தை, என் மூளையில் பதிய வைத்து விட்டேன்...' என்று சொல்லி, சிரித்தார்.இந்த பதில், என் கண்களை திறந்தது; இந்தியா திரும்பியதும், இதை கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். ஆம்... இதற்கு முன் வரை, சூழ்நிலை பார்த்து முடிவு எடுப்பதை பின்பற்றி வந்தேன்.அதாவது, போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும், 'இண்டிகேட்டர்' போட்டு ஓட்டுவது; சாலையில், வாகனமோ, எவருமோ இல்லாவிட்டால், 'இண்டிகேட்டர்' போடுவதில்லை. ஆனால், இப்போதோ, திருப்பங்கள் வரும் போதெல்லாம், 'இண்டிகேட்டர்' போடுவதை, வழக்கமாக்கி விட்டதால், என் சக பயணியோடு, எவ்வளவு சுவையாக, உணர்வுப்பூர்வமாக உரையாடல் நடத்தினாலும், என் சிறு மூளையில் பதிவாகி விட்ட செய்தி, என்னையும் அறியாமல் நிகழ்கிறது.'இது, ஏதோ வாகனம் ஓட்டுபவர்களுக்கான கட்டுரை போலிருக்கிறது...' என, அடுத்த பக்கத்திற்கு தாவி விடாதீர்கள்; விஷயத்திற்கு வருகிறேன். குளித்ததும், சோப்பை ஈரம் படாமல் வைப்பது; பூட்டியதும், சாவியை உரிய இடத்தில் வைப்பது; கணினியை முறையாக, 'ஷட் டவுன்' செய்த பின் எழுந்திருப்பது; பணம் என்றால், முன் பாக்கெட்; டோக்கன் என்றால், பின் பாக்கெட்; பெண்கள் என்றால், தீப்பெட்டி - லைட்டரை நிலையாக ஓரிடத்தில் வைப்பது; இரவு படுக்கையில் சரியும் முன், 'கதவை தாழிட்டு விட்டோமா...' என்று, உறுதி செய்வது; மொபைல் போன் கையாளல்; மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளுதல் என, ஒவ்வொரு விஷயத்திலும், ஒரு பழக்கத்தை கொண்டு வாருங்கள்.'சித்தம் போக்கு சிவன் போக்கு...' என்று சொல்வரே, அப்படி இல்லாமல், எதிலும், ஒழுங்குமுறை வரட்டும். கொஞ்ச காலம் விடாமல் பின்பற்றி பாருங்கள். இப்படி செய்து வந்தால், சிறு மூளை விழித்து, நினைவூட்டும். அனிச்சை செயலாகவே, நாம் செய்யும் செயல்பாடுகளை பார்த்து, பலரும் வியக்க ஆரம்பித்து விடுவர்.இது மட்டுமல்ல, 'அடடா... என்ன, சிஸ்டமாட்டிக்...' என்று, பாராட்டு பத்திரங்களும் வழங்குவர்!லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !