உள்ளூர் செய்திகள்

மரவேர் சிற்பி!

சென்னை துறைமுகத்தில் வேலை பார்ப்பவர் @Œரன்; புது பெருங்களத்தூரில் வசிப்பவர்.தான் ஒரு ஓவியனாக உருவாக வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால், முழுநேர ஓவியராக முடியவில்லை. துறைமுகத்தில் வேலை பார்த்தது போக, மீதமுள்ள நேரத்தில் ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல், கட்டுரை எழுதுதல் என்று, பன்முக கலைஞராக இருந்தார்.இந்நிலையில், வெட்டப்பட்ட வேப்ப மரத்தின் வேர் ஒன்றை உற்றுப்பார்த்த போது, அது ஒரு பெண் போன்று தென்படவே, அந்த வேரை அப்படியே வெட்டி எடுத்து வந்து, உப்புக் காகிதத்தால் தேய்த்து, சிறிது வார்னிஷ் தடவி, 'வேம்பில் உருவான சுயம்பு சுந்தரி' என்று பெயரிட்டார். பார்த்தவர்கள் பாராட்டவே, மேலும் மரவேர்கள், மரத்துண்டுகளை தேடும் பயணத்தை துவக்கினார்.இப்படி கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேல், தேடி தேடி சேகரித்த மரவேர்கள் மற்றும் மரத்துண்டுகளில் இருந்து உருவாக்கிய சிற்பங்கள், நாற்பதுக்கும் மேல் உள்ளன. சரியாகச் சொன்னால், மரக்கழிவு பொருட்கள் எல்லாம், இவர் கை பட்டு, கலைப் பொருட்களாக மின்னுகின்றன.மான், மயில், சிவலிங்கம், நெருப்புக்கோழி, சீல், பாம்பு, கழுகு, மகுடி என்று, வீடு முழுவதும் இவர் உருவாக்கிய சிற்பங்கள், வித விதமாய் நிறைந்து கிடக்கின்றன.'உண்மையில் இவைகள், நான் செதுக்கிய சிற்பங்கள் அல்ல, இயற்கை செதுக்கிய சிற்பங்களாகும், நான் சாதாரண சேகரிப்பாளன் மட்டுமே. கிடைக்கும் மரவேர்களை, அழகு படுத்துகிறேனே தவிர, வேறு எதுவும் செய்வதில்லை. மேலும், ஒரு சிற்பம் போல இன்னொரு சிற்பம் அமையவே அமையாது, ஆகவே, நான் உருவாக்கிய இந்த மரச் சிற்பங்களை விலைக்கு கொடுப்பதில்லை.'மனிதர்கள், தங்களது மனதிற்கு பிடித்த விஷயங்களை தேடிக்கொண்டே இருக்க வேண்டும், தேடல் உள்ளவரைதான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும்' என்று சொல்லும் சேரன், தன் மரச் சிற்பங்கள் மூலம், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதை விருப்பமாக கொண்டுள்ளார். இந்த மரவேர் சிற்பங்களை உருவாக்க, ஒரு பெரிய கலைஞனாக இருக்க வேண்டும் என்பதில்லை, ஆர்வமும், தேடலும் மட்டும் இருந்தால் போதும். செலவோ மிகக் குறைவு, கிராமப்புறங்களில் தேடினால் நிறைய கிடைக்கும், விறகு கடை போன்ற இடங்களில் ஐந்து ரூபாய் கொடுத்தால் போதும் சிற்பம் செய்வதற்காக என்று தெரிந்தால், இலவசமாகவே கொடுத்திடுவர்.எல்லாம் சரி...இதை எப்படி உருவாக்குவது என்கிறீர்களா, அதற்கு அதிகபட்சமாக, ஒரு நாள் பயிற்சி போதும். பயிற்சி கொடுக்க, இந்த சேரன் ரெடி, பயிற்சி பெற நீங்கள் ரெடியா? அப்படியானால் சுழற்றுங்கள் இந்த தொலைபேசி எண்ணை: 9500179791.***எம்.ஆர்.மோகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !