ஞானிகளை அவமதிக்கலாமா!
என்றும், எங்கும் இருக்கின்றனர், நல்லவர்கள். ஆனால், உலகம் தான், அவர்களை உணர்வதில்லை. அந்த மாதிரி நேரங்களில், அந்த உத்தமர்கள், வேறு வழியற்ற நிலையில், தங்கள் தெய்வீக சக்தியை வெளிப்படுத்தி உணர்த்துகின்றனர். அவ்வாறு உணர்த்திய ஓர் அற்புத நிகழ்வு இது:சோழ மன்னர் ஒருவர், காவிரிக்கரையில் உலா போய்க் கொண்டிருந்தார். அப்போது, காவிரிக்கரை ஓரமாக ஊர்ந்து வந்த, சங்கு ஒன்று, வாயை திறந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. அருகில் இருந்த மரத்திலிருந்த மலர்களில் இருந்து, தேன் துளி ஒன்று, சங்கின் திறந்திருந்த வாயில் விழுந்தது.அதைப் பார்த்த மன்னருக்கு, மெய் சிலிர்த்தது.'சங்கு கூட பசித்திருக்கக் கூடாது என்று, தன் இடம் தேடி வந்த சங்கிற்கு, இம்மலர்கள், தேனை அளிக்கின்றனவே...' என்று வியந்தபடியே, அரண்மனை திரும்பினார், மன்னர்.மறுநாள், அரசவை கூடியது. நேற்று கண்ட, சங்கு - தேன் பற்றிய நினைவிலேயே இருந்தது, மன்னர் மனது. அந்த நேரத்தில், பல நாட்களாக நெடுந்தொலைவு நடந்து வந்த அவ்வை, மிகுந்த சோர்வுடன் சபையில் நுழைந்தார். வந்தவரை, 'வாருங்கள்... அமருங்கள்...' என்று வாய் வார்த்தையாகச் சொன்ன மன்னர், அவ்வைக்கு, ஆசனம் அளிக்க, எந்த முயற்சியும் செய்யவில்லை.தன் மனதில் இருந்ததையும், மன்னர் மனதில் இருந்ததையும், அப்படியே பாடலாகப் பாடி விட்டார், அவ்வை.கால் நொந்தேன் நொந்தேன் கடுகி வழி நடந்தே; யான் வந்த துாரம் எளிதன்று - கூனல்; கருந்தேனுக்கு அங்காந்த காவிரி சூழ் நாடா! இருந்தேனுக்கு எங்கே இடம்? பாட்டைக் கேட்டதும், 'நேற்று நாம் கண்டதை, அப்படியே சொல்லி விட்டாரே... தெய்வ சக்தி நிறைந்தவர் இவர்...' என, வியந்தார், மன்னர்; வியக்க வைத்தவர், அவ்வை என்று அறிந்ததும், அவரின் வியப்பு அதிகமானது.ஆம்... அதுவரை, அவ்வையைப் பற்றி அறிந்திருந்தாரே தவிர, பார்த்தது இல்லை, மன்னர். அதன்பின், அவையினரிடம், தான் நேற்று கண்ட காட்சியை கூறி, அவ்வை, அதை அப்படியே விவரித்து, பாடலாக பாடியதை சொல்லி, மகிழ்ந்தார். அவ்வையை மனமாரப் புகழ்ந்தனர், அவையோர். சங்கிற்கு, மரத்திலிருந்த மலர்கள், தேன் தந்த நிகழ்ச்சியல்லவா, மன்னர் மனதில் இருந்தது. அதை உணர்த்தும் முகமாக, தான் பாடிய பாடலில், 'தேன்' என்ற சொல்லை பலமுறை பாடிய, அவ்வையின் தமிழாழம் அளவு கடந்தது. அதுமட்டுமல்ல, 'தண்ணீரில் அங்கும் இங்குமாக உலாவும் சங்கு, கரையோரமாக ஒரு மரத்து அடியில் வந்தவுடன், 'என் இருப்பிடம் தேடி வந்த சங்கை, உபசரிப்பது என் கடமை...' என்று, மரம், தன் மலர்கள் மூலம் தேன் தந்து உபசரித்தது. 'அதைப் பார்த்தவன் நீ... உன் நாட்டில், ஓரறிவு உள்ள மரங்கள் கூட, இருப்பிடம் தேடி வந்தவர்க்கு இனிமையான உபசரிப்பை அளித்திருக்கிறது... ஆறறிவுள்ள நீ, அதைப் பார்த்தும்,- அரசனாக இருந்தும், உன் சபை தேடி வந்த எனக்கு, அமர எங்கே இடம் - என்றல்லவா கேட்கும்படி ஆகி விட்டது...' என்பது, நுண்பொருள்.அவ்வையை போன்ற ஞானிகள்-, உத்தமர்கள், எங்கும் இருக்கின்றனர். நாம் தேடிப் போகிறோமோ, இல்லையோ, அந்த ஞானிகள் நம்மைத் தேடி வருவர். மனப்புண்ணுக்கு மருந்திடுவோர், உணர்ந்துகொள்ள வேண்டியது, நம் பொறுப்பு. பி.என்.பரசுராமன் ஆலய அதிசயங்கள்!காசியில், பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை; காசி நகரை சுற்றி, 10 கி.மீ., வரை, கருடன் பறப்பதில்லை.