நடிகர் மதுவுக்கு உதவிய எம்.ஜி.ஆர்.,
மலையாள நடிகர் மது, வயது, 84; நகைச்சுவையாக பேசும் குணமுடையவர். இவர், சமீபத்தில், எம்.ஜி.ஆர்., பற்றிய சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார். அது... 'சுயம்வரம் படத்திற்காக, ரஷ்யாவில் நடைபெற்ற திரைப்பட விழாவுக்கு சென்றிருந்தேன். திடீரென்று புறப்பட்டதால், 'ரூபிள்' என்ற ரஷ்ய கரன்சி பெற முடியவில்லை. அனைத்து செலவுகளையும் ரஷ்ய அரசு கவனித்துக் கொண்டாலும், ஒரு நாள் உணவுக்கு பின், ஒரு சிகரெட் வாங்க ரூபிள் இல்லாமல், கவலையுடன் உட்கார்ந்து இருந்தேன்.'அப்போது, அங்கே வந்த எம்.ஜி.ஆர்., என்னிடம், நலம் விசாரித்து, பின், 'செலவுக்கு ரூபிள் இருக்கிறதா?' என்று கேட்டார்.'பதில் கூறாமல் அசடு வழிந்தேன். விடைபெறுவதற்கு முன், என்னை கட்டி அணைத்து சென்றார். அவர் சென்ற பின். 'உதவி கேட்டு இருக்கலாமே...' என்ற வருத்தத்துடன், கோட் பாக்கெட்டில் கை போட்டபோது, அதிர்ந்து போனேன். காரணம், பாக்கெட்டில், ஏராளமான ரூபிள்கள் இருந்தன.'எம்.ஜி.ஆரின் குணத்தை அறிந்து மெய்சிலிர்த்துப் போனேன்...' என்று குறிப்பிட்டுள்ளார், மது.— ஜோல்னா பையன்.