ஆனைமுகனும் அருகம்புல்லும்!
புண்ணியம் செய்வாருக்கு பூவுண்டு; நீருண்டு. அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும் என்பார் திருமூலர். இறைவனுக்கு நாம் மலர்களையும், அருகம்புல், வில்வம், துளசி, வன்னி மற்றும் மந்தார இலைகளை சாற்றுகிறோம். இவ்வாறு இறைவனுக்கு சாற்றப்படும் இலைகளில், அருகம்புல்லின் மகிமையை கூறும் கதை இது:கணபதி வழிபாட்டை முடித்து எழுந்தார் கவுன்டின்ய முனிவர். அவர் மனைவியான ஆசிரியை (இது பதவியல்ல; அப்பெண்மணியின் பெயர்.) கணவரின் திருவடிகளில் விழுந்து வணங்கியவள், 'சுவாமி... நறுமணமும், அழகும் மிகுந்த மலர்கள் பல இருக்க, தாங்கள் அருகம்புல்லை கொண்டு, ஆனைமுகனை அர்ச்சிக்கிறீர்களே... இதற்கு காரணம் என்ன?' என்று கேட்டாள்.அதற்கு கவுன்டின்யர், 'பெண்ணே... கர்ப்பக்கிருகத்தில் கனல் மூண்டு எழும்; அதனால், அங்கிருக்கும் ஆனைமுகனுக்கு அதிக குளிர்ச்சி வேண்டும். குளிர்ச்சியை தருவது அருகம்புல்; அருக வேர் தைலத்தால் தீராத வெம்மையும் தீரும். புராணங்களில் கூறப்பட்டுள்ள இந்த அடிப்படை உண்மையை உணராவிட்டால், அவை வெறுங்கதைகளாக தான் தோன்றும்...' என்றவர், அக்கதையை கூறத் துவங்கினார்...'யமனுடைய மகன் அனலன்; பெயருக்கு ஏற்றபடி இவன் அடுத்தவர் உடம்பில் அவருக்கு தெரியாமல் புகுந்து, அவர்களை உருக்கி, சத்தை உண்பது தான் இவன் வேலை. மண்ணுலகில் இருப்பவர்களையெல்லாம் இவ்வாறு உருக்குலைத்த அனலன், அதன்பின், தேவலோகத்தில் புகுந்தான். அவனின் குணம் அறிந்த தேவர்கள் பயந்து, 'ஆனைமுக வள்ளலே... அனலனிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்...' என வேண்டினர்.'விக்னம் நீக்கும் விநாயகர் அங்கே தோன்றி, துதிக்கையால் அனலனை சுருட்டி விழுங்கினார். ஆனால், அடுத்த வினாடி அனைவரின் வயிரும் எரிந்தது; தாங்க முடியாமல் தடுமாறினர். விநாயகரின் திருமேனி குளிர்ந்தால் தான், அனைவரின் துயரமும் தீரும் என உணர்ந்த தேவர்கள், சந்திரனின் குளிர்ந்த ஒளிக்கற்றைகள் மற்றும் குளிர்ச்சி மிகுந்த அரவங்களை விநாயகரின் திருமேனியில் சாற்றினர்; பலனேதும் இல்லை. 'அப்போது, முனிவர்கள் ஒவ்வொருவரும், 21 அருகம்புல்லை விநாயகரின் திருமேனியில் சாற்றினர். விநாயகரின் வயிறு குளிர்ந்த அதே வினாடியில், அனைவரின் வயிறும் குளிர்ந்தது. அன்று முதல், ஆனைமுகனுக்கு அருகம்புல் சாற்றும் நியதி உண்டானது....' என்றார்.உடலில் சூடு அதிகமாகும் போது, எதிர்விளைவுகள் உண்டாகி, உடல்நிலை பாதிக்கும். அப்போது பக்கவிளைவுகள் இல்லாதவாறு உடல் கொதிப்பை ஆற்றுவதோடு, ஆரோக்கியத்தையும் அளிப்பது அருகம்புல். அதனாலே, நம் முன்னோர் அருகம்புல் சாறு அருந்தச் சொன்னார்கள்.ஆகவே, ஞானநூல்களின் அடிப்படை உண்மையை உணர்வோம்; ஐங்கரன் அருளால் அல்லல்கள் நீங்கும்!பி.என்.பரசுராமன்திருமந்திரம்!ஓட வல்லார் தமரோடு நடாவுவன்பாட வல்லார் ஒலி பார்மிசை வாழ்குவன்தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரானொடும்கூட வல்லார் அடி கூடுவன் யானே!விளக்கம்: தல யாத்திரை செல்பவர்களோடு செல்வேன்; சிவபெருமானின் புகழை பாடுவோரின் பாடல் ஒலியை கேட்டு, இன்புறுவேன். உள்ளத்தில் இறைவனை தேடி, இறையருளை அடைய வல்லவர்களுடன் சேர்வேன்.கருத்து: புனித தலங்களுக்கு செல்வதும், இறைவனின் புகழைப் பாடுவதும், இறையடியார்களுடன் இணைந்து இருப்பதும், இறை அருளை அடையும் வழி.