உள்ளூர் செய்திகள்

மோய் பின் பை! (12)

தாய்லாந்து நாட்டின் முக்கிய நகரமான பட்டையாவை சுற்றி பார்த்த பின், அன்று மாலை - தாய்லாந்து நாட்டின் தலைநகரான, பாங்காக்கை அடைந்தோம். உயரமான கட்டடங்கள் மற்றும் மேம்பாலங்கள் என, விளக்கொளியில் ஜொலித்தது, பாங்காக் நகரம். நாங்கள் தங்க வேண்டிய, 'பொலிவர்ட்' என்ற நான்கு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றோம். குளித்து வந்ததும், உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார் டிரைவர். வட மாநில உணவு வகைகளை திருப்தியாக சாப்பிட்டோம். திரும்பி வரும் வழியில், நடைபாதை கடைகள் சிலவற்றை பார்த்தபடி, ஓட்டலுக்கு திரும்பினோம்.மறுநாள் காலை, 'சபாரி வோர்ல்டு' என்ற, வன விலங்கு சரணாலயத்துக்கு அழைத்துச் செல்ல, வேனுடன் வந்தார் வழிகாட்டி, டாம்.நம்மூர் வண்டலுார் ஜூவை விட, பல மடங்கு பெரியதாக இருந்தது, 'சபாரி வோர்ல்டு!' வன விலங்குகள் சுதந்திரமாக உலா வர, கார், வேன் போன்ற வாகனங்களின் உள்ளே நாம் அமர்ந்து, கண்டு களிக்கலாம். டிஸ்கவரி, 'டிவி' சேனலில் பார்த்த, விலங்குகள் அனைத்தையும், நேரில் பார்த்து பரவசமானோம். தாய்லாந்து நாட்டில், வெள்ளை யானை இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு வெள்ளை யானை கூட, கண்ணில் தென்படவில்லை. முழுவதும் சுற்றிப் பார்க்க, மதியம், 2:00 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அங்கிருந்து கிளம்பி, மதிய உணவை முடித்து, ஓட்டலுக்கு திரும்பினோம்.மாலை, 4:00 மணியளவில், 'டுக் டுக்' ரிக் ஷாவில், 'இந்திரா ஸ்கொயர்' என்ற, வணிக வளாகத்துக்கு சென்றோம். கம்போடியாவில் பார்த்த, 'டுக் டுக்' ரிக் ஷாக்கள் போல், இங்கும் நிறைய, ரிக் ஷாக்கள், கூடுதல் அலங்காரத்துடன் உள்ளன. இந்தியாவில் இவை தயாரிக்கப்பட்டு, தாய்லாந்துக்கு அனுப்பப்படுகிறதாம். டில்லியில், சரோஜினி மார்க்கெட், மும்பையில், சோர் மார்க்கெட், சென்னை மாநகராட்சி, வணிக வளாகம் போல், 'இந்திரா ஸ்கொயர் மார்க்கெட்'டில், நிறைய பொருட்களை குவித்து வைத்துள்ளனர். அவரவருக்கு தேவையான பொருட்கள், சிலவற்றை வாங்கினோம். தாய்லாந்தை பொறுத்தவரை, வளர்ச்சியடைந்த நாடு போல் தோன்றினாலும், கலாசார சீரழிவு தலைதுாக்கி உள்ளதையும், வேதனையுடன் பார்க்க முடிந்தது.விபசார தொழில் இங்கு, கொடிகட்டி பறக்கிறது. அதற்காகவே, வெளிநாட்டினர் நிறைய பேர் இங்கு வருகின்றனர். மாலை ஆனதும், சர்வ அலங்காரத்துடன் இளம்பெண்கள், சாலையோரம் நின்றபடி, வெளிநாட்டு சுற்றுலா பயணியரிடம் பேரம் பேசுவதை, சர்வ சாதாரணமாக பார்க்கலாம். அரசே இதை, அங்கீகரித்திருப்பதால், யாரும் பெரிதுபடுத்துவதில்லை.இது சம்பந்தமாக, வழிகாட்டி டாம், சில தகவலை கூறினார். அது: ஐரோப்பிய நாட்டினர், குறிப்பாக, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டவர்கள், பணி ஓய்வு பெற்றதும், அவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை தருகிறது, அந்நாட்டு அரசு.அங்கு, குளிர் காலம் ஆரம்பித்ததும், தாய்லாந்து நாட்டுக்கு வந்து, இங்கிருக்கும் இளம்பெண்களை திருமணம் செய்து, சொந்தமாக வீடும் வாங்கி, 'செட்டில்' ஆகிவிடுவர். இரண்டு, மூன்று ஆண்டுகள் தாய்லாந்தில் குடியிருந்து, மனைவி, குழந்தைகளை இங்கேயே விட்டு, சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், சரியான பராமரிப்பில்லாமல், அனாதைகளாகி விடுகின்றனர்; பெண் குழந்தைகள், 15 வயதானதும் விபசாரத்தில் ஈடுபட்டு, தங்கள் வாழ்க்கையை தாங்களே பார்த்துக் கொள்கின்றனர்.ஒரு ஞாயிற்றுக் கிழமை, எங்களது பயணம் முடிந்து, இந்தியா திரும்ப வேண்டிய நாள். ஏராளமான அனுபவங்களுடன், இந்தியா திரும்ப ஆயத்தமானோம்.மோட் ஹாய் சோ பாமோய் பின் பைஹுங் சங் சாம்- இதெல்லாம் என்ன என்கிறீர்களா?புகைப்படம் எடுப்பதற்கு முன், ஒன்று, இரண்டு, மூன்று என்று தமிழிலும், 'ஒன், டூ, த்ரி' என்று ஆங்கிலத்திலும் சொல்வரே, அதுபோல், வியட்நாம், 'கெமர்' - கம்போடிய மொழி மற்றும் 'தாய்' மொழியில் சொல்லப்படும் வார்த்தைகள் தான், இவை.நாங்கள் சென்று வந்த வியட்நாம், கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளுமே, இந்தியாவை விட, பல வழிகளில் பின்தங்கிய நாடுகள். ஊழலும், லஞ்சமும் மலிந்தவை தான்.ஆனாலும், சுத்தம், சுகாதாரத்திலும், சாலை விதிகளை மதிப்பதிலும், நதி நீரை காப்பதிலும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்கின்றனர், பொது இடங்களில், 'ஒன், டூ' போகாமலும், எச்சில் துப்பாமலும், சுய கட்டுப்பாடுடன் இருக்கின்றனர் மக்கள்.சுற்றுலா தான், நாட்டின் பெரிய வருமானம் என்பதால், தங்கள் நாட்டு பாரம்பரிய இடங்களை, கண் போல் காக்கின்றனர்.அன்றைய தமிழர்கள், கடல் கடந்து, வாணிபம் செய்தனர். நாடுகளை வென்று, தம் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினர், கோவில் கட்டினர், தங்கள் வீரத்தையும், வெற்றியையும் கல்வெட்டுகளில் செதுக்கினர். ஆனால், இன்றைக்கு நாம் எப்படி இருக்கிறோம்...நம் நாட்டில் கிடைக்கும் அமைதியும், சுதந்திரமும் வேறு எங்கும் கிடைக்காது. பாரம்பரியமும், கலாசாரமும் உடைய அற்புதமான நாடு இது. பல சாதனைகள் மூலம், உலக நாடுகளின் கவனத்தையும், மரியாதையையும் பெற்று வரும் தேசம்.நம் பெருமைகளை நாம் மறந்து விட்டோமா அல்லது அலட்சியப்படுத்துகிறோமா... எங்கே இந்த பிசகு ஏற்பட்டது. இதை சீராக்குவது, மக்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. ஆனால், எப்படி... எப்போது? ஊர் திரும்பும்போது, 'தாய்' ஏர்லைன் விமான பணிப்பெண்களிடம், அவர்கள், 'பாஷை'யில் பேசி அசத்த வேண்டும் என்பதற்காகவே, மனப்பாடம் செய்த வார்த்தைகளை ஒருமுறை சொல்லி பார்த்தோம்.சென்னை திரும்ப, 'தாய்' ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி, உள்ளே நுழைந்தோம். அவர்கள் வரவேற்பதற்கு, முன், 'ஸ்வங் டி - வணக்கம், பென் டி யாங் ரை பாங்க் - எப்படி இருக்கிறீர்கள்?' என்று, 'தாய்' மொழியில் சொல்ல, வாய் திறப்பதற்குள், 'வாங்க... நமஸ்காரம்...' என்று, அழகு தமிழில் அவர்கள் வரவேற்றதை கேட்டதும், எங்கள் முகம், 'ங்ஞ்ஙே... மஞ்ஙே...' என்று அஷ்டகோணலானதை பார்க்க வேண்டுமே!என்ன வாசகர்களே... இத்தனை வாரம் பொறுமையாக எங்களோடு பயணம் செய்து, எங்கள், 'லுாட்டி'யை பொறுத்த தங்களுக்கு, மிகப்பெரிய நன்றி. உங்கள் கருத்துகளை பதிவு செய்ய மறந்து விடாதீர்கள்; விடைபெறுகிறேன்.எங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத, கரும்பையும் கொடுத்து, தின்ன கூலியையும் கொடுத்த எங்கள், கே.ஆருக்கு, என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்!- முற்றும் - - ந.செல்வி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !