உள்ளூர் செய்திகள்

நம்ம ஊர் ஸ்பெஷல்! ஆற்காடு மக்கன் பேடா!

தோற்றத்தில், குளோப் ஜாமூனின் உடன்பிறப்பு போலவே இருக்கும் ஸ்வீட், 'மக்கன் பேடா!' பிரியாணிக்கு பிரபலமான, ஆற்காடு மற்றும் வேலுார் பகுதியில், இது பிரபலம்.'மெதுமெது'வென இருக்கும் மக்கன் பேடாவிற்குள், திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், பேரிச்சை, சாரப்பருப்பு, வெள்ளரி, தர்பூசணி மற்றும் முலாம்பழ விதை போன்றவற்றில், ஏதேனும் சிலவற்றை, அரை குறையாக தட்டி, நடுவே வைத்துள்ளதால், சுவைக்கும் போதே, புது விதமான சுவையை தருகிறது.அரேபிய மொழியில், 'மக்கான்' என்றால் பால்கோவா; 'பேடா' என்றால் முந்திரி. இரண்டும் சேர்த்து செய்வதால், இதற்கு இப்பெயர். நவாப்களின் பாரம்பரிய இனிப்பு வகைகளுள் ஒன்று இது!ஒருமுறை, நவாப் ஒருவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டார், ஆற்காடை சேர்ந்த கோவிந்தன் என்ற வியாபாரி. அங்கு, மக்கன் பேடாவை சுவைத்தவர், அது போல், வீட்டில் செய்து பார்க்க, அவரால், வெளியுலகிற்கு அறிமுகமானது தான் இந்த ஸ்வீட்!இதை தயாரித்து விற்கும், சுந்தரம் கூறும் போது, ''யார் வேண்டு மானாலும் இதை செய்ய முடியும் என்றாலும், எங்கள் கடையின் சுவையே தனி; காரணம், எங்கள் தாத்தா சொல்லிக் கொடுத்த பக்குவத்துடன், இன்றும் கைமணம் மாறாமல், 65 ஆண்டுகளாக விற்கிறோம்,'' என்றார்.இதன் தயாரிப்பு முறையும் குளோப் ஜாமூன் போன்றது தான்; மைதா மாவு மற்றும் இனிப்பில்லாத பால்கோவா இரண்டையும் ஒன்றாக கலந்து, நடுவே, உலர் பழங்களை வைத்து, உருண்டை பிடிக்க வேண்டும்; பின், எண்ணெயில் பொரித்தெடுத்து, சீனிப்பாகில் ஊற வைத்து எடுத்தால், மக்கன் பேடா தயார்.ஒரு வாரம் வரையிலும் கெடாது என்பதால், பார்சல் வாங்கிச் செல்வோர் அதிகம். ஆற்காடு மற்றும் வேலுார் பக்கம் போனால், இந்த ஸ்வீட்டை சுவைத்துப் பாருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !