நவராத்திரியின் போது...
நவராத்திரி ஒன்பது நாட்களும், விரதம் இருப்பதால் குடும்ப விருத்தி, சத்ரு பய நிவர்த்தி, கோர்ட் வழக்கு சாதகமாதல், மன அமைதி போன்றவை கிடைக்கும்.துர்க்கையை பூஜிப்பதால், தைரியமும், சத்ரு ஜெயமும் உண்டாகும். லட்சுமியை பூஜிப்பதால், குபேர சம்பத்து கிடைக்கும். சரஸ்வதியை பூஜிப்பதால், கல்வியில் மேன்மையும், எதையும் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலும் கிடைக்கும்.நவராத்திரியின் முதல் நாள்: 2 வயது குழந்தையை வரவழைத்து பூஜிக்க வேண்டும். அன்று, குமாரிகா என்று அந்த குழந்தையை அழைப்பர். தேவியின் வடிவமாக பூஜிப்பதால், வறுமை நீங்கும்; கடன் ஒழியும்.2ம் நாள்: 3 வயது குழந்தையை திருமூர்த்தி என்று அழைத்து பூஜிப்பதால், வீட்டில் தன தான்யங்கள் பெருகும்.3ம் நாள்: 4 வயது குழந்தையை கல்யாணி என்று அழைத்து பூஜிப்பதால், பகை மறையும்.4ம் நாள்: 5 வயது குழந்தையை யோகினி என்று அழைத்து பூஜிப்பதால், கல்வியில் மேன்மை உண்டாகும்.5ம் நாள்: 6 வயது குழந்தையை காளிகா என்று அழைத்து பூஜிப்பதால், துன்பங்கள் விலகும்.6ம் நாள்: 7 வயது குழந்தையை சண்டிகா என்று அழைத்து பூஜிப்பதால், செல்வம் மேன்மேலும் பெருகும்.7ம் நாள்: 8 வயது குழந்தையை சாம்பவி என்று அழைத்து பூஜிப்பதால், குடும்பத்தில் மங்களகரமான விஷயங்கள் விருத்தியாகும். குடும்ப ஷேமம் உண்டாகும்.8ம் நாள்: 9 வயது குழந்தையை துர்கா என்று அழைத்து பூஜிப்பதால், பயம் விலகும்.9ம் நாள்: 10 வயது குழந்தையை சுபத்ரா என்று அழைத்து பூஜிப்பதால், எல்லா மங்களங்களும் உண்டாகும். அம்பாளை வழிபடும் இந்த நவராத்திரி, இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் வரிசையில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. நவராத்திரியைப் பெண்களுக்கு உரித்தான பண்டிகையாக பலர் நினைக்கின்றனர். நவராத்திரி காலங்களில் ஆண்கள், விரதமிருந்து தேவியை பூஜிப்பதால், இஷ்டகாரிய சித்தியை அடைய முடியும். குழந்தைகளுக்கு, சரஸ்வதி பூஜையும்; உழைப்பவர்களுக்கு, ஆயுத பூஜையும் நவராத்திரியில் தான் கொண்டாடப்படுகிறது.வட மாநிலங்களில், 10வது நாளையும் சேர்த்து, தசரா என்று கொண்டாடுவர். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து, ஒன்பது நாட்கள், அன்னை ராஜ ராஜேஸ்வரியை கலசத்தில் ஆவாஹனம் செய்து, முறைப்படி பூஜிப்பர்.முதல் மூன்று நாட்கள், துர்க்கையாகவும்; இரண்டாவது மூன்று நாட்கள், லட்சுமி தேவியாகவும்; கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதியாகவும் பூஜிப்பர்.கொலுவை, 5 படி, 9 படி என்று வைப்பர். 9 படி, மிக விசேஷமானது. முதல் படியில், ஓரறிவு ஜீவராசிகளாக விளங்கும் செடி, கொடி, புல் போன்றவற்றையும்; இரண்டாவது படியில், ஈரறிவு ஜீவராசிகளாக விளங்கும் நத்தை, சங்கு போன்றவற்றையும்; மூன்றாவது படியில், கறையான், எறும்பு போன்றவற்றையும்; நான்காவது படியில், நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளையும்.ஐந்தாவது படியில், மிருகங்கள், பறவைகள் போன்றவற்றையும்; ஆறாவது படியில், மனிதர்களையும்; ஏழாவது படியில், மனித நிலையிலிருந்து உயர்ந்த சித்தர்கள், ரிஷிகள் மற்றும் மகான்களையும்.எட்டாவது படியில், தேவர்கள்; ஒன்பதாவது படியில், பிரம்மா, விஷ்ணு, சிவன், ராஜ ராஜேஸ்வரி மற்றும் விநாயகர் என, வரிசைக்கிரமமாக வைப்பது விசேஷம்.
சிதம்பரம் கோவில் கொலு!
கிட்டத்தட்ட, 4,000 பொம்மைகளுடன் மெகா கொலு வைக்கப்படுவது, நடனத்துக்கு பெயர் பெற்ற சிதம்பரம் கோவிலில் தான்.நடராஜர் சன்னதியிலுள்ள கல்யாண மண்டபத்தில், 12 ராசிகள், 9 நவக்கிரகங்கள் இவற்றின் கூட்டுத்தொகை வருகிற மாதிரி மொத்தம், 21 படிகளில் பிரம்மாண்டமாக கொலு பொம்மைகள் வைக்கப்படுகிறது.தெற்கு நோக்கி அமைக்கப்படும் இக்கொலுவில், நடராஜர் பிரதானமாக இருப்பார். 22 அடி உயரம், 18 அடி அகலத்தில் அமைக்கப்பட்டு, பொம்மைகளை சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.மேலே உள்ள முதல் படியில், விநாயகர், முருகன், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி என, அனைத்து கடவுள்களும் கொலுவில் வீற்றிருப்பர். அதற்கடுத்தாற் போல், அனைத்து ஜீவராசிகளும் வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்டிருக்கும்.கொலுவிற்கு முன்னால், வெள்ளி ஊஞ்சல் அமைக்கப்பட்டிருக்கும். நவராத்திரி சமயங்களில் கோவிலுள்ள சிவகாமசுந்தரி அம்மனுக்கு, சிறப்பு வழிபாடு நடைபெறும். அபிஷேகம் முடிந்தவுடன் அம்மன், சர்வாலங்கார பூஷிதையாக இந்தக் கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கொலுவிற்கு எதிரே உள்ள வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளுவார். அதன்பின் தீபாராதனை நடக்கும்.வேறெங்கும் இல்லாத விசேஷமான இந்த கொலுவையும், தீபாராதனையையும் காண வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வர்.பாசிப்பருப்பு சுண்டல் செய்ய, பாசிப்பருப்பை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து, வடிகட்டி, பிறகு, வெந்நீரை ஊற்றி மூடி வைத்தால் போதும், பதமாக வெந்து விடும்.சுண்டலை தாளித்து, பின்னர், இரண்டு தேக்கரண்டி அவலை வறுத்துப் பொடி செய்து துாவினால், சுவையுடன் இருக்கும்.மூக்குக்கடலை சுண்டல் தாளிக்கும்போது, இரண்டு கேரட்டைத் துருவி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கினால், அதன் சுவையே அலாதி தான்.சுண்டல் மேல் தேங்காய் துருவல், சீஸ் துருவல், பனீர் என, ஏதாவது ஒன்றைக் கலந்து செய்ய சுவையாய் இருக்கும்.சுண்டல் செய்தபின், அதன் மேல் காராபூந்தியைத் துாவினால், சுவையாக இருக்கும்.சுண்டலுக்கான மூக்கடலையை ஊற வைத்த பின், வெயிலில் ஒரு மணி நேரம் வைத்த பிறகு வேக வைத்தால், சுண்டல் சுருங்காமல், நன்றாக வெந்து பெரிது பெரிதாக இருக்கும்.சுண்டல் மேல், இட்லி மிளகாய்ப் பொடியைத் துாவினால், புதுவித சுவையுடன் இருக்கும்.