புதியவை ஏற்கப்படும்!
புது மணப்பெண் மாலினி, அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்து, இரண்டு நாட்கள் தான் ஆனது. திருமண விருந்து மற்றும் 'ஹனிமூன்' அது, இது என, இரண்டு வாரமாக அலைந்து மகனும், மருமகளும் வீட்டிற்கு வந்தனர்.இந்த சமயத்தில் பெங்களூரில் இருக்கும் மகள், போனில் அழைத்து, ''அம்மா, கல்யாணத்துக்கு அப்புறம் ஊருக்கு வந்த பிறகு, உன் பேரன், பேத்தி இரண்டு பேருக்குமே உடம்புக்கு முடியலை. இதில், எனக்கும் தொடர்ந்து காய்ச்சல். 'டெஸ்ட்' பண்ணியதில், 'டைபாய்டு'ன்னு சொல்றாங்க.''நீ இங்கே வந்து என்னோடு, 10 நாள் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும். தம்பிக்கும் கல்யாணம் முடிந்து புது மருமகள் வந்த சமயத்தில் கூப்பிடுறேன்னு எனக்கும் சங்கடமாக தான் இருக்கு,'' என்றாள்.''போயிட்டு வாங்க அத்தை. 10 நாள் தானே, எனக்கு சமையல் தெரியும். உங்க மகனையும், மாமாவையும் நான் பத்திரமாகப் பார்த்துக்கிறேன்,'' என, புன்னகையுடன் கூறிய மருமகளை திருப்தியோடு பார்த்தாள், ராஜம்.''என்னங்க... மாலினிக்கு எல்லாம் புதுசு. சாப்பாடு, முன்ன பின்ன இருந்தாலும், 'அட்ஜெஸ்ட்' பண்ணிக்குங்க. ஏதாவது உதவி கேட்டா செய்து கொடுங்க. அவளுக்கு எதுவும் புரியாமல் இருக்கும்.''இந்த சமயத்தில் விட்டுட்டு போறது, எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கு. வேற வழியில்லை. போய் தான் ஆகணும்,'' என, கணவன் மற்றும் மகன் பரத்திடம் சொல்லி புறப்பட்டாள், ராஜம்.சமையலறையில் நுழைந்த பரத்தின் அப்பா திகைத்துப் போனார்.''என்ன மாமா பார்க்கிறீங்க?''''இல்லம்மா... சமையலறையையே தலைகீழாக மாத்தி வச்சுருக்கே... பாத்திரம் வைக்கிற, 'ஷெல்ப்' இடம் மாறியிருக்கு. ராஜம் டம்ளர், தட்டெல்லாம் கீழ், 'ஷெல்பில்' வைச்சிருப்பா. நீ அதையும் மாத்தி வச்சுருக்கே. அது மட்டுமில்லாமல் மளிகை பொருட்கள் இருக்கும் அலமாரியில் எல்லாம் மாறியிருக்கு.''''ஆமாம் மாமா... இப்படி வச்சால் தான் எனக்கு வசதியா இருக்கும். டம்ளர், தட்டெல்லாம் வலது பக்கம் இருந்தால் தான், எடுப்பதற்கு வசதி. மிக்ஸி மேடையில் இடத்தை அடைக்குது. அரைக்கும்போது எடுக்கலாம்ன்னு, எடுத்து உள் அலமாரியில் வச்சுட்டேன்.''மருமகள் சொல்ல, மனதில் சின்னதாக பயம் தோன்றியது. ராஜத்திற்கு எதுவும் அவள் வைத்தபடி இருக்க வேண்டும்.ஒருமுறை, சமையலறையில் டம்ளர், தட்டையெல்லாம் மேலடுக்கில் எடுத்து வைத்திருந்தார்.உடம்பு முடியாமல் காய்ச்சல் என, சமையலறை பக்கம் இரண்டு நாள் வராமல் இருந்த, ராஜம் வந்து பார்த்துவிட்டு, 'என்னங்க இது, ஏன் நான் வச்சதை இடம் மாறி வச்சிருக்கீங்க... சமையலறையில் நான் வச்சது மாதிரி தான் இருக்கணும்...' என, கோபமாக சொன்னவள், திரும்ப பழையபடி இருந்த இடத்தில் வைத்தாள்.'ராஜம் ஊரிலிருந்து திரும்பி வந்தால் இதையெல்லாம் பார்த்துவிட்டு என்ன சொல்லப் போகிறாளோ... ஆரம்பத்திலேயே பிரச்னைகள் உருவாகப் போகிறதா...' என, அவர் மனதில் குழப்பம் ஏற்பட்டது.குக்கரில் சாம்பார் கொதிக்க, அங்கு வந்த பரத், ''என்ன மாலினி, சாம்பாரை குக்கரில் வைக்கிறே... அம்மா பாத்திரத்தில் தான் வைப்பாங்க,'' என்றான்.''அது வேலை அதிகம். காய்கறி, பருப்புன்னு தனித்தனியாக வேக வைத்து, வேலையை ஏன் இழுத்து விட்டுக்கணும். குக்கரில் எல்லாம் ஒன்றாக போட்டு வைத்தால், 10 நிமிஷத்தில் சாம்பார் ரெடி.''உங்கம்மா மாதிரி, நான் சமைக்கணும்ன்னு இல்லை. என் சமையலை சாப்பிடுங்க. இதுவும் நல்லாதான் இருக்கும்,'' என்றாள், மாலினி.வாசலில் உட்கார்ந்திருக்கும் அப்பாவிடம் வந்த பரத், ''என்ன யோசனை?'' என்றான்.''ஒண்ணுமில்லை, பரத். உங்கம்மாவை நினைச்சேன். அவளுக்கு எல்லாம் அவ செய்யறது தான் சரிங்கிற நினைப்பு, நிறைய இருக்கு. அதுமட்டுமில்லை, மாலினி எல்லாத்துலயும் வித்தியாசமா இருக்கா.''சமையல் முதற்கொண்டு எல்லாமே வேற மாதிரி இருக்கு. உங்கம்மாவுக்கு குக்கரில் செய்தாலே பிடிக்காது. அவ பொரியல், சாம்பார், கூட்டுன்னு எல்லாத்தையும் குக்கரில் தான் செய்யறா.''சமையல் அறையையே மாத்தி வச்சிருக்கா. உங்கம்மா வந்து என்ன சொல்லப் போறான்னு தெரியலை. புது மருமகள் அதை எப்படி எடுத்துப்பாளோ. தேவையில்லாமல் எந்த பிரச்னையும் வரக்கூடாதுன்னு நினைக்கிறேன்,'' என்றார்.''புரியுதுப்பா, நானும் அதைத்தான் நினைக்கிறேன். மாலினிகிட்ட மறைமுகமாகச் சொல்லிப் பார்த்தேன். அவ அதை பெரிசா எடுத்துக்கலை,'' என்றான்.''சரி, உங்கம்மா வரட்டும்... அவக்கிட்ட பக்குவமாக எடுத்துச் செல்வோம். வேற வழியில்லை,'' என்று, அந்த பிரச்னையை அப்போதைக்கு முடித்து வைத்தார், பரத்தின் அப்பா.சில நாட்களுக்கு பின், ஊரிலிருந்து திரும்பி வந்தாள், ராஜம்.''எல்லாரும் நல்லா இருக்காங்களா அத்தை... அண்ணி உடம்பு பரவாயில்லையா?''''சரியாயிடுச்சும்மா... உன்னை தான் தனியா விட்டுட்டு போயிட்டேன். எப்படி சமாளிக்கிறியோன்னு நினைச்சேன்.''''ஒண்ணும் பிரச்னையில்லை, அத்தை. எல்லாம் நல்லபடியாக போச்சு. உங்க பிள்ளையும், மாமாவும் என் சமையலை குறை சொல்லாமல் சாப்பிட்டாங்க,'' என்றாள்.சமையலறைக்குள் நுழைந்த ராஜம், விழிகள் விரிய பார்த்தாள்.''என்னம்மா இது, நம்ப வீட்டு சமையலறை மாதிரியே தெரியலை. எல்லாத்தையும் இடம் மாத்தி வச்சிருக்கே... எது எங்கே இருக்குன்னு எனக்கு தெரியலை.''''ஆமாம் அத்தை... எதுவும் ஒழுங்கில்லாமல் கண்டபடி இருந்துச்சு. ஒருநாள் முழுக்க சிரமப்பட்டு, எல்லாத்தையும் எடுக்க, வசதியான முறையில் அடுக்கி வச்சேன்.''எதுவும் சொல்லாமல் மவுனமானாள், ராஜம்.இரவு மணி பத்தாக, சமையலறை கதவை மூடினாள், மாலினி.''இரு மாலினி... டிகாஷன் போட்டு வச்சுடலாம். காலையில் எழுந்ததும் காபி போட வசதியாக இருக்கும்.''''எதுக்கு அத்தை, தேவையில்லை. எழுந்ததும் டிகாஷன் போட்டால், பால் காய்ச்சுவதற்குள் ரெடியாயிடும். ஒரு பத்து நிமிஷம் முன்ன பின்னே ஆகும் அவ்வளவு தான்,'' என்றபடி, கதவை மூடினாள், மாலினி.''ராஜம், நம்ப மருமகள் மாலினி பரவாயில்லை. உன்னை மாதிரி சமைக்காட்டியும், ஓரளவு நல்லா செய்யறா. சாப்பிடற மாதிரி தான் இருக்கு. சாம்பாரெல்லாம் குக்கரில் செய்யறா... அதுவும் வித்தியாசமாக தான் இருக்கு.''நாளைக்கு அவளை சமைக்கச் சொல்லி சாப்பிட்டுப் பாரேன்,'' என, கணவன் சொல்ல, பதில் பேசாமல் படுக்கைக்கு போனாள், ராஜம்.மறுநாள் மாலினி குளிக்க போயிருக்க, அம்மாவை தேடி வந்தான், பரத்.''அம்மா, ஊரிலிருந்து வந்ததிலிருந்து ஏதோ யோசனையில் இருக்கே. மாலினி செய்யிறது உனக்கு ஏதும் மனசுக்கு வருத்தமாக இருக்காம்மா. எதுவும் யோசிக்காதம்மா... கொஞ்ச நாள் போனால் நம் பழக்க வழக்கங்களை கத்துத் தரலாம். சமையல் கூட, உன்கிட்ட கத்துப்பா. ''சமையலறையில அவ மாத்தி வச்சது, உனக்கு பிடிக்கலைன்னா, திரும்பவும் பழையபடி வச்சுடலாம். நீ இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு வருத்தப்படாதம்மா,'' என்று சமாதானப்படுத்தினான், பரத்.''நீயும், அப்பாவும் ஏன் இப்படி பதறுறீங்கன்னு புரியலை. சமையல் அறை என் ராஜ்ஜியம் தான். இல்லைன்னு சொல்லலை. ஆனால், அதில் பங்கெடுக்க இன்னொருத்தியும் வந்துட்டா. அவ உணர்வுகளையும் நான் மதிக்கணும் இல்லையா.''அவளோட ரசனை வேற மாதிரி இருக்கு. சமையலும் வித்தியாசப்படுது. என் அம்மா, அம்மியில் அரைச்சு சமைச்சாங்க. நான் இப்ப மிக்ஸியில் அரைக்கலையா. அது மாதிரி தான். அவளுக்கு எது வசதியோ, எளிதோ, அதுக்கு தகுந்த மாதிரி சமையல் பண்றா. இதில் நான் குறை கண்டுபிடிக்க எதுவுமில்லப்பா.''என்ன, என் மருமகளோடு கோபப்பட்டு, நான் ஏதாவது பிரச்னை பண்ணிடுவேன்னு நீயும், அப்பாவும் பயப்படறீங்களா? நிச்சயம் நடக்காது...''கல்யாணமான புதுமண தம்பதிகளோடு தான் புரிதல் இருக்கணும்ன்னு இல்லை. மாமியார், மருமகளுக்குள்ளும் புரிதல் இருக்கணும். அப்பதான் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் வராது. எங்களுக்குள் ஒத்து போயிடும். நீ சந்தோஷமாக இரு பரத்,'' என, ராஜம் சொல்ல, தெளிவாக யோசிக்கும் மனைவியை பெருமிதம் பொங்க பார்த்தார், பரத்தின் அப்பா.பரிமளா ராஜேந்திரன்