உள்ளூர் செய்திகள்

ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!

பொருளாதார வளர்ச்சி, ராணுவ வலிமை, புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றில், உலகின் மற்ற வல்லரசு நாடுகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல சீனா. ஓய்வின்றி உழைப்பதிலும், சீனர்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஆனாலும், ஒரு சில விஷயங்களில், சீன மக்களிடையே, வெளிநாட்டு மோகம் தலைவிரித்தாடுகிறது.இயற்கையாகவே, சீன மக்கள், இடுங்கிய, சிறிய கண்களை உடையவர்கள். இதனால், இந்தியாவில் உள்ளவர்களின் கண்கள் மீது, இவர்களுக்கு ஆசை அதிகம். தங்களுக்கும் அதுபோன்ற பெரிய கண்கள் வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, இமைகளை பெரிதாக்கி கொள்ளும் நடைமுறை, அங்கு அதிகரித்துள்ளது.அதேபோல், மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்தின் மீதும், அங்குள்ள நாகரிகத்தின் மீதும், சீனர்களுக்கு ஆசை உண்டு. லண்டன், மாட்ரிட், சிட்னி, நியூயார்க் போன்ற நகரங்களில், நாமும் வசிக்க மாட்டோமா, என ஏங்குகின்றனர், ஆயிரக்கணக்கான சீன மக்கள்.இவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சீனாவின் வர்த்தக நகரமான, ஷாங்காயின் புறநகர் பகுதியில், பல ஏக்கர்களை வளைத்துப் போட்டு, மேற்கத்திய நாடுகளில் உள்ள சிறப்பு வாய்ந்த அடையாளங்களுடன், அட்டகாசமான குடியிருப்புகளை கட்டியுள்ளனர். லண்டனின் தேம்ஸ் நதி, அங்குள்ள அழகு கொஞ்சும் கட்டடங்கள், வின்ஸ்டன் சர்ச்சில் சிலை ஆகியவற்றை, இந்த குடியிருப்புகளில் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். லண்டனில் இருப்பது போன்ற கடை வீதிகள், பார்கள், காபி ஷாப்களும் உண்டு. இங்கு சென்றால், நாம் சீனாவில் இருக்கிறோம் என்பதே மறந்து போய் விடும்.இப்பகுதியிலேயே, சற்று தூரம் சென்று, இடதுபுறமாக திரும்பினால், ஸ்பெயினின் மாட்ரிட் நகரம், நம்மை வரவேற்கும். மாட்ரிட் நகரின் அடையாளமாக விளங்கும், இயற்கை எழில் கொஞ்சும் பொட்டானிக்கல் கார்டன், பழைமை வாய்ந்த கதீட்ரல் தேவாலயம் ஆகியவற்றை, நம் கண் முன்னே நிறுத்தியுள்ளனர். இவற்றை சுற்றி, ஸ்பெயின் கலாசாரத்தில் உருவாக்கப்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இதை கடந்து சென்றால், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றனர். ஒபரா ஹவுஸ், சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் சிட்னி துறைமுகப் பாலம் ஆகியவற்றை போல் வடிவமைத்துள்ளனர். இதேபோல், நியூயார்க், பாரீஸ் நகரங்களில் உள்ளதைப் போன்ற வீடுகளும், அவற்றின் அடையாளங்களுடன் கட்டப்பட்டுள்ளன.'ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்' என, இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட அதிசயத்தை காண்பதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர். எப்போதும் மிகவும் பிசியாக காணப்படும் இந்த <உல்லாசபுரியை காண வருவோர், அவற்றைப் பார்த்து அதிசயித்தாலும், இதை வடிவமைத்தவர்கள் முகங்களில், அந்த மகிழ்ச்சியை காண முடியவில்லை. 'இந்த இடம், சுற்றுலா தலம் போல் ஆகிவிட்டது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து, ஜோடி ஜோடியாக புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இங்குள்ள வீடுகளை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. இத்தனை வீடுகள் கட்டப்பட்டும், ஒரு சில வீடுகளில் தான் ஆட்கள் வந்துள்ளனர். அதற்கான விலை மிகவும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அனைவரும் நினைப்பதே இதற்கு காரணம்...' என, கவலை யுடன் கூறுகின்றனர்.***எஸ். ரேவதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !