உள்ளூர் செய்திகள்

திண்ணைக் கிழவி!

''ஏண்டா தவமணி... உங்க ஆத்தா தொறக்குச்சிய, தொலைச்சுப்புட்டு, தெருவெல்லாம் தேடிட்டு திரியறாடா... உன் பள்ளிக்கூட பையை, இங்கன கடாசிபுட்டு, நீ கொஞ்சம் அவ கூட போயி தேடிட்டு வாய்யா...'' என்ற எதிர்வீட்டு திண்ணைக் கிழவியின் சத்தம், வீதியை தாண்டி, என் காதுகளை தொட்ட போது, எரிச்சல் வந்தது.'எதுக்கு இந்த கிழவி இந்த சத்தம் போடுது... தெருவுல போற கொமரிக எல்லாம், ஒரு மாதிரியா பாத்துட்டு போறாளுக...' என்ற கடுப்புடன், கிழவி அமர்ந்திருந்த திண்ணையை அடைந்தேன்.சாலையில் இருந்து, மூன்றடி உயரத்தில், ஒய்யாரமாய், இரண்டு பக்கம் மரத்தூணும், கருங்கல் சிலாப்புமாய் நிமிர்ந்து நின்றது, கிழவி வீட்டு திண்ணை. அந்த கருங்கல்லில் படுத்து கொண்டால், பத்து நாளைக்கு கூட சோறு, தண்ணி கேட்காமல், சுகமாக தூங்கலாம்.''ஏங்கிழவி இப்படி கத்துற... எப்ப பாரு தொறக்குச்சி, கிரக்குச்சின்னு சொல்லிட்டு... அதுக்கு பேரு சாவி இல்லாட்டி, இங்கிலீஷ்ல, 'கீ'ன்னு சொல்லு,'' என்றேன்.சுட்ட சோளக் கதிரை தின்றபடி, பக்கத்தில் வந்து அமர்ந்தான், கிழவியின் கொள்ளு பேரன் திருநாவு; அவனும், நானும் ஒன்றாக படிப்பவர்கள்.''டேய் கிளிக்கு பொறந்த பய மகனே... நீ தான் கீ, கீனு கத்துவே... நான் என்னத்துக்கு கத்துறேன். கூமுட்டப் பயலே... தொறக்குற குச்சிக்கு பேருதாம்ல தொறக்குச்சி,'' என்றாள் கிழவி.எல்லா வார்த்தைக்கும் சரியோ, தப்போ ஒரு அர்த்தம் வைத்திருப்பாள், கிழவி. இதனாலேயே அவளிடம் பேச எனக்கு ரொம்ப பிடிக்கும்.என்னுடைய தலையை, வாஞ்சையாய் வருடிய கிழவி, ''ஏம்ல தவமணி... நீ போய் உங்க ஆத்தா கூட சேர்ந்து தொறக்குச்சிய தேடிட்டு வாய்யா...'' என்றாள்.''போ கிழவி... நானே அலைஞ்சு வீட்டுக்கு வர்றேன்... பஸ் இறங்கி நடந்து வந்து சேர்றதுக்குள்ள காலு காலா இல்ல. எங்கம்மாவ, யாரு சாவிய தொலைக்க சொன்னா... நல்லா அலையட்டும்...'' என்றேன், கோபத்துடன்!கிழவி என் மேவாயை பிடித்தபடி,''அடப்பயமவனே... எட்டு வருஷம் புள்ளை இல்லாம, அங்காளி அம்மன் கோவில்ல, மண் சோறு தின்னு, தவமிருந்து, உன்னை பெத்தாடா உங்காத்தா... அதான், உனக்கு தவமணின்னு உன் தாத்தன் பேரையே வச்சா; இப்படி பேசுறேயேடா,'' என்றாள்.''கிழவி... நாங்கல்லாம் இவனை தவக்களைன்னு தான் கூப்பிடுவோம்,'' என்றான் திருநாவு.''டேய் திக்கு வாய் திருநா... சும்மா இருந்திரு ஆமா...'' என்று ஒற்றை விரலைக்காட்டி எச்சரிக்கவும், வாயை மூடிக் கொண்டான்.''ஏங்கிழவி... எனக்கு ஏன் திருநாவுன்னு பேரு வச்சியாம்...'' என்று கேட்டான், திருநாவு.''அட கூமுட்ட பயலே... அது உன் தாத்தன், அதான் என் மவன் பேருடா... தாத்தன் பேரையும், பாட்டி பேரையும் பேத்து எடுத்து, வச்சுக்கிறதால தான், அவுகளுக்கு பேரன், பேத்தின்னே பேர் வந்துச்சு,'' என்றாள் கிழவி.'இதப்பாருடா...' கிழவியின் பேச்சை கேட்டு, சுவாரசியமானோம் நானும், திருநாவும்!''அப்ப நான் உனக்கு கொள்ளு பேரன்... அதுக்கென்ன அர்த்தம் சொல்லப் போற?''''அதுக்கு என்னடா புதுசா அர்த்தம் தர... கொள்ளுப் பேரனை தாண்டி, அடுத்த தலைமுறையை பாக்குறது அபூர்வம்; என்னை கொல்ல வந்திருக்கிற பேரன், கொள்ளுப் பேரன்னு வேணா சொல்லிக்கலாம்,'' என்றாள்.கிழவியின் விளக்கத்தைக் கேட்டு, கை தட்டி ஆர்ப்பரித்தேன். நிஜமோ, பொய்யோ கிழவி தருகிற விளக்கம், ரொம்ப சுவாரசியமாய் இருக்கும்.அந்த தெருவில், திண்ணை கிழவியை பிடிக்காத கூட்டமும் இருக்கத் தான் செய்தது. முச்சூடும் திண்ணையில் உட்காந்து, சம்மன் இல்லாமல் அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு, கிழவியிடம் வாங்கி கட்டிக் கொள்பவர்களுக்கு கிழவியை பிடிக்காது.கிழவியின் புருஷன், ராணுவத்தில் சிப்பாயாய் இருந்தவர். ஓய்வு பெற்று ஊர் திரும்பியதும், சொந்த மனையை எடுத்துக் கட்டி, 'அங்காளம்மா இல்லம்' என்று அழகாய் பெயர் பதித்து விட்டார். மஞ்சள் பெயின்ட் அடித்து, அக்காலத்து அழகோடு, மினுக்காக இருக்கும்.அதைப் பற்றி ஒரு முறை கிழவி, 'இந்த வீடு கட்டுறப்போ, நாலு மாடு இருந்தது; வீட்டில அதுக சாணத்தை எருவா தட்டி உலர்த்த, ரெண்டு பக்கமும் திண்ணை வச்சு கட்டச் சொல்லி, யோசனை சொன்னதே நாந்தேன். ஆனா, ஒருநாக்கூட, அதுல, எருவ உலர்த்தவே இல்ல. நெகமத்திலிருந்து வெளியூர் போறவங்க இங்க வந்து இளைப்பாற தங்கிப் போற இடமா அது ஆகிபோச்சு. இப்பத்தான், மினி பஸ் லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் வந்தாச்சே... அதனால, இங்க வந்து தங்கிப் போற வழிபோக்கு ஜனமும் இல்லாம போயிடுச்சு...' என்று அங்கலாய்ந்தாள்.அந்த நேரம் கிழவிக்கு மோர் கொண்டு வந்த திருநாவின் அம்மா, 'ஆமலு, இப்ப அதுதேன் முடையா போச்சு... தவமணி... உன் பாட்டனெல்லாம் யோசனையா கூடம், முற்றம் வச்சு வீட்டை கட்டிப்புட்டு, இந்த திண்ணையை வைக்காம விட்டாங்க. இங்க வந்து உட்கார்ந்து போறவங்க, துப்புற வெத்தலை எச்சிலையும், புகையிலை குப்பையையும் வாரி அள்ளியே, என் இடுப்பு ஒடுஞ்சு போச்சுல...' என்று மோர் பாத்திரத்தை கிழவியின் முன், 'ணங்' கென வைத்து விட்டுப் போனாள்.எனக்கு சங்கடமாக இருந்தது; ஆனால், கிழவி அலட்டிக்கவே இல்லை.'அவ கிடக்காடா கூறுகெட்ட சிறுக்கி. கூடத்துல கூடிக்கிட; முற்றத்துல முடிஞ்சதும் படும்ன்னு சொல்லும் எங்காத்தா... அந்த நாள்ல அவுக சொன்ன அம்புட்டு வாக்கும், அர்த்தமில்லாம சொன்னதில்ல. 'திண்ணை வச்ச வீடு; திருட்டறியா வீடும்'ன்னு சொல்வாங்க. வீட்டுல திருட வர்றவன், வாசல்ல படுத்திருக்கவங்கள தாண்டி உள்ள வர, பயப்படுவானாம். செத்தபின் மனுஷன முற்றத்துல வந்து கிடத்தறதால தான், அது முற்றம்; கதை முற்றும் புரியுதா...' என்று சிலேடையாக கூறி, பொக்கை வாய் மலர சிரித்தாள் கிழவி.பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் சேர சென்னைக்கு புறப்பட்ட போது, ''தவமணி... எதிர்த்த வீட்டு கிழவிகிட்ட சொல்லிட்டு வந்துடேன்... நீ ஊருக்குப் போறதா சொன்னேன்; ரொம்ப விசனப்பட்டுச்சு,'' என்றாள் அம்மா.கிழவியை பார்க்க கிளம்பினேன். பிளஸ் 2 பெயிலானதால், மதுரையில் இருந்த, மாமாவின் ஜவுளிக்கடைக்கு வேலைக்கு போய்விட்டான், திருநாவு.திண்ணையில், சுவர் பக்கமாய் திரும்பி படுத்திருந்தாள், கிழவி. ரவிக்கை அணியாத சுருங்கிய முதுகுத் தோல், 80 வயதை கடந்து விட்டதை சொன்னது.''பாட்டி...'' என்றேன் மெதுவாய்!திரும்பி பார்த்த கிழவி, முக மலர்ச்சியுடன் எழுந்து அமர்ந்து, ''அட பயமக்கா... என்ன பாட்டி, கீட்டின்னு பட்டணத்துக்காரங்க மாதிரி கூப்பிடற... நான், எப்பவும் உன் அங்காளம்மா கிழவி தான்டா,'' என்று, என் முகவாயை வழித்து முத்தம் தர, நெக்குருகிப் போனேன்.''ஊருக்கு போறியாமே... உன் சேக்காளியும் மதுரைக்கு போயிட்டான். எல்லாரும் இந்த கிழவியை விட்டுட்டு போறீகளே... நான் காபந்து பண்ண, பேரப்புள்ளை இல்லாம நிக்கயில தான், எமன் வந்து, என்னை கொண்டு போயிருவானோன்னு கலக்கமா இருக்கு,'' என்றாள்.கிழவியின் பேச்சுத் தொனியும், அதில் இருந்த வலியும், என்னை புரட்டி போட்டது. தலைமுறை கடந்தும், உறவுகளையும், உயிர்களையும் நேசிக்க முடியும் என்று கற்பிக்கும் ஜீவன்களை விட்டு பிரிவதும் கூட, வாழ்க்கையில் இழப்பு தான்.சென்னை வந்ததும், இங்கு பரிச்சயப்பட்ட ஆயாக்களில், கிழவியின் ஸ்பரிசமும், பாசமும் தேடி தோற்றேன்.அத்துடன், கடலும், மால்களும் கவர்ந்து இழுத்த கவர்ச்சியில், ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு போவது கூட அலுப்பாய் இருக்க, இரண்டாம் ஆண்டு லீவில் தான் ஊருக்குப் போனேன். முகம், கை, கால் அலம்பிய பின், முதலில் கிழவியைத் தான் பார்க்கப் போனேன். வயோதிகத்தில், கண் இமை முடியெல்லாம் சுருங்கி நரைத்து, போன தேகத்தை பார்த்த போது, முதுமையை எண்ணி பயமாக இருந்தது.''பாட்டி...'' என்று தோளைத் தொடவும், ''தவமணி நல்லா இருக்கியாடா...'' வாரிச் சுருட்டி எழுந்து, என்னை கட்டிக் கொண்டாள்.''நான் நல்லா இருக்கேன்; நீயேன் கிழவி இப்படி அசந்து போய் கிடக்குற...'' என்றேன் ஆதங்கமாய்!''ஏன்டா பயமவனே... எம்புட்டு வயசாச்சு... இதுக்கு மேலயும் அசராம இருக்க, நான் என்ன மரமா, மலையா... இன்னும் சொல்லப் போனா, காலம் பார்த்து காறித் துப்புறத்துக்குள்ள, காடு போய் சேர்ந்திரணும். எம்மவன் காலம் முடிஞ்சு, இப்போ என் பேரன் குடும்பம் தான், என்னை பாத்துக்கிடுது... இதுக்கு மேலயும் நான் இருந்து என்னத்த கொண்டு போகப் போறேன்,'' என்றாள், யதார்த்தமாய்!''ஏங்கிழவி சும்மா சாவ பத்தியே பேசுற... உனக்கு பயமா இல்லயா?''''உன் வயசுல பயமாத்தேன் இருந்துச்சு; இப்ப, இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்க போகுதோன்னு பயமா இருக்கு. யாருக்கும் உபகாரமா இல்லாம, நமக்கு நாமே பாரமாயிடக் கூடாதில்ல...''கிழவிக்காக வாங்கி வந்திருந்த வெற்றிலை பாக்கையும், வாசனை சுண்ணாம்பையும் தந்தேன்; வாங்கிக் கொள்ளாமல், அதை வெறித்து பார்த்து,''நான் இப்ப வெத்திலை, பாக்கு போடுறத விட்டுட்டேண்டா பேராண்டி...'' என்றாள்.நான் ஆச்சரியமாய் பார்த்தேன்.''ஆமாய்யா... அறுபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, என் புருஷன் கட்டுன வீடுய்யா இது! இப்போ பழசாப் போச்சாம்; அதுனால, வீட்டை இடிச்சு, கட்டப் போறாங்களாம். புது வீட்டுல திண்ணை இருக்காது; இந்த திண்ணைக்கிழவிய எங்க கொண்டு போய் போடப் போறாங்ன்னு தெரியல. அதனால தான், வெற்றிலையை விட்டுட்டேன். கண்ட இடத்துல துப்பி, அவுகள நோவடிக்க கூடாது பாரு...''வீட்டிற்கு வந்ததும், அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன். திருநாவின் அம்மாவும், மற்றவர்களும் கிழவியை கொடுமைப்படுத்துவதாக கூறினாள் அம்மா.மாதங்கள் உருண்டோட, தேர்வுகள் முடிந்து, லீவுக்கு ஊருக்கு புறப்பட்டேன். கிழவியின் வீடு அழகாய் எடுத்து கட்டப்பட்டு இருந்தது. திண்ணை இருந்த இடத்தில், கார் பார்கிங்கோடு, நெகமத்தில் இப்படியொரு வீடா என்று ஆச்சரியபடும்படியாக இருந்தது.கிழவியை பார்க்கிற ஆவலில் உள்ளே போனேன். இரண்டடியில் சுருங்கிப் போன தேகத்தோடு, ஹாலில் ஒரு ஓரமாய் படுத்திருந்தது. ரவிக்கை அணியாத புடவையோடு, பார்த்து பழக்கப்பட்ட கிழவியை, நைட்டியில் பார்த்த போது, மூப்பின் தள்ளாட்டம், உடை விஷயத்தில் கூட, நம்முடைய முடிவுகளுக்கு அனுமதிப்பதில்லை என்று புரிந்தது.''நீ படிச்சு பெரியாளாயிட்ட... எங்க திருநாவு, ஜவுளிக்கடையில துணி மடிச்சுட்டு திரியறான். எல்லாம் தலையெழுத்து. என் வயசுக்காரிக எல்லாம் கார், பங்களான்னு பொழைக்கயில, நான் இந்த கிழவிக்கு, பீ அள்ளிட்டு திரியறேன்,'' திருநாவின் அம்மா, நாக்கில் கத்தி வைத்திருந்தாள்.என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், கிழவியை பார்த்தேன். எப்போதும் போல அலட்டிக் கொள்ளாமல் படுத்திருந்தது கிழவி. சூழ்நிலையின் அழுத்தத்தை குறைக்க எண்ணி, கிழவியை, 'கலகல'ப்பூட்ட, ''அது சரி கிழவி... எப்ப பாத்தாலும், கதை முற்றும்ன்னா தான், முற்றத்துல கொண்டாந்து போடுவாங்கன்னு சொல்வியே... இப்போ உங்க வீட்ல முற்றத்தையே காணாமே... நீ வந்து ஹால்ல படுத்திருக்க, இதுக்கு என்ன சொல்லப் போற...''என்றேன், கிழவியை ஜெயித்து விட்ட மிதப்பில்!கிழவி அசரவேயில்லை. ஒரு நொடி கூட தாமதிக்காமல், ''ஹால்ல கொண்டாந்து போட்டுட்டா, உன்னை தூக்க, நாலு ஆளு வந்து சேர்ற நேரம் நெருங்குதுன்னு அர்த்தம்,'' என்று கூறி, பொக்கை வாய் மலர, அர்த்தமாய் சிரித்தாள். அசந்து போனேன். 'புறவெளி திண்ணையிலேயே தன்னுடைய நீண்ட வாழ்க்கையை கழித்த கிழவியின் அறிவு முதிர்ச்சிக்கு, மூப்போ, தள்ளாட்டமோ இல்லவேயில்ல...' என்ற நிதர்சனம் புரிந்தது.சென்னை திரும்பிய மூன்றாம் நாள், அம்மாவிடமிருந்து, கிழவி இறந்து விட்டதாக தகவல் வந்தது. கிழவியின் சகாப்தம், ஆர்ப்பாட்டம் இல்லாமலே முடிந்து போனது.அடுத்தமுறை ஊர் சென்ற போது, கிழவியின் வீட்டை திரும்பி கூட பார்க்க தோன்றவில்லை. ஏனென்றால், கிழவி இல்லாத திண்ணையையும், திண்ணை இல்லாத கிழவியையும், எனக்கு பார்க்கவே பிடிக்கவில்லை.எஸ்.மானசா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !