உள்ளூர் செய்திகள்

திண்ணை!

என் கதைகளுக்கு இவ்வளவு பணம் வேண்டுமென்று நான் பத்திரிகையாளரிடம் கேட்டதேயில்லை. பேரம் பேச, அவர்கள் என் கதைகளுக்கு தருவது விலை அல்ல. கேட்டுப் பெற அது கூலியும் அல்ல. உரிமைப் போர் புரிய நான் அவர்களிடம் வேலை செய்பவனுமல்ல. எழுத்தாளர் டிரேட் யூனியன், எழுத்தாளர் உரிமைக்காக எழுத்தாளர்களே போரிடல் ஆகியவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை. அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் வருமாயின், நான் எழுதுவதை விட்டு விடுவேன்.என் எழுத்துக்களை வெளியிடும் பத்திரிகைகளின் கொள்கைகள், காரியங்கள் ஆகியவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, பொறுப்புமில்லை. நான் எழுதுகிற எழுத்துக்களுக்கு மட்டுமே நான் பொறுப்பு. இந்த உறவுகள் பற்றற்றவை. இந்த நட்புகள் பந்தமற்றவை. சம்பந்தமே இல்லாத இடத்தில் சண்டைக்கு இடமேது?எவர் கட்டளைக்கும் உட்பட்டு நான் எழுதுவதில்லை. என் சொந்த தர்மத்துக்காகவே நான் எழுதுகிறேன். அவற்றை வெளியிட்டு, எனக்கு மரியாதை செலுத்துகிறவர்களிடம் சச்சரவிடுவது அநாகரிகம்.பத்திரிகைகாரர்களோடும், ஏன் எல்லாரோடும் ஒரு காலத்தில் நான் துவந்த யுத்தம் கூட செய்ததுண்டு. ஆனால், அது இலக்கிய விவகாரமோ, பொது விவகாரமோ கூட அல்ல. அவை என் அறியாமையின் விளைவுகள்.நான் இப்போதெல்லாம் பெட்டி பாம்பாக அடங்கி விட்டதாக பலர் பேசுகின்றனர்! நல்லது தானே? பாம்பு பல்லை இழக்காமல் இருந்தால் சரி. பெட்டிக்குள் இருப்பதால் பாம்பு புழுவாகி விடாது. துள்ளித் துள்ளிக் குதிப்பதால் புழுக்கள் பாம்பாவதுமில்லை!—ஜெயகாந்தன் ஒரு கட்டுரையில்...***கடந்த, 1944ல் என் தங்கை, பிரசவத்தின் போது இறந்து விட்டாள். அவளுடைய நினைவு, என் உள்ளத்திலே பொங்கி வருகிறபோதெல்லாம் ஆறுதல் பெறுவதற்கு, ராஜாஜியின் கடிதம் எனக்கு துணை செய்கிறது.ஒருவர் மறைந்த பின், நாம் வருத்தப்படுவது, மரணம் அடைந்தவர்களுக்காகவா அல்லது நம்முடைய அவல நிலை மீது, நமக்கு ஏற்படுகிற கவலைக்காகவா! இந்த அடிப்படையான கேள்வியையே எழுப்புகிறார் ராஜாஜி. துயர வெள்ளத்திற்கு, ஒரு வடிகாலும் அமைத்துத் தருகிறார். இதோ: அவர் எனக்கு எழுதிய கடிதம்ஆசீர்வாதம். உங்களுடைய கடிதம் வந்தது. துயரமடைந்தேன். உடனே பதில் எழுதவில்லை. என்னத்தை எழுதி என்ன பயன்?பெற்று வளர்த்த மகளை இழந்த பெற்றோருக்கும், மனைவியை இழந்தவனுக்கும், சகோதரியை இழந்தவர்களுக்கும் வெறும் பேச்சுகளும், தத்துவங்களும் ஆறுதல் தரும் என்று, நான் எதிர்பார்க்கவில்லை.ஆறுதல் தர முடியாதாயினும், உண்மையைச் சொல்வதில் ஒன்றும் குற்றமில்லை.இறந்தவர்களுக்கு இறந்த பின், ஒரு துக்கமும் இல்லை. மற்றவர்களுக்கு வருந்தாமல், நமக்காகவே நாம் வருந்த வேண்டும். அவ்வித துக்கத்தில் என்ன நன்மை இருக்கிறது. அதை விட்டு விடுவதே நலம்.பெண்களின் சேவையும், வாழ்வும் பெரிய அற்புதம் என்பதில் சந்தேகமில்லை. சொல்லொணாத சந்தோஷத்தைப் பிறருக்குத் தந்துவிட்டு, கஷ்டத்தையெல்லாம் தாங்களே தனிப்பங்காக எடுத்து கொள்கின்றனர். உயிரையும் கொடுத்து விடுகின்றனர்.இழந்த சகோதரியிடம் காட்டியும், இனிக் காட்டப் போவதாகவும் இருந்த அன்பு, கவனம், மரியாதை எல்லாவற்றையும், இனி உங்கள் மனைவியிடம் காட்ட வேண்டியது! இறந்தவர்களைப் பற்றிய நினைவு தானே இனி கடன்... வேறொன்றும் அவர்கள் கேட்பதில்லை.- ராஜகோபாலாச்சாரி- இப்படி எழுதி, என்னை ஆறுதல் படுத்தினார்.— மீ.ப.சோமு எழுதிய, 'நீங்காத நினைவுகள்' நூலிலிருந்து...நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !