உள்ளூர் செய்திகள்

திண்ணை!

சிம்லா நகரில், வட்ட மேஜை மாநாடு, 1931ல், நடைபெற்றது. அதில், வைஸ்ராய் இர்விங் பிரபுவுடன், காந்திஜி, நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள், சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மும்பையிலிருந்து நேருவும், பட்டேலும், அந்த மாநாட்டிற்கு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர். இடையில் சூரத் நகரில், ரயில் சிறிது நேரம் நின்றது. அங்கு நேருஜியைக் காண மொரார்ஜி தேசாயும், வேறு சில காங்கிரஸ் பிரமுகர்களும் பிளாட் பாரத்தில் காத்திருந்தனர்.ரயில் அங்கு நின்றதும், மொரார்ஜியைப் பார்த்த நேரு, 'எனக்கு ஒரு டீ வேண்டும்' என்று கேட்டார். அதே ரயில் பெட்டியில், வல்லபாய் பட்டேலும் இருந்ததைப் பார்த்த மொரார்ஜி, அவருக்கும் சேர்த்து இரண்டு கப் டீ வாங்கி, ஒரு தட்டில் வைத்து, எடுத்து வந்தார்.அதைப் பார்த்த நேரு, 'ஒரு கப் டீ தானே கேட்டேன். எதற்காக இரண்டு கப் வாங்கி வந்தாய்?' என்று, கோபத்துடன் கேட்டு, தட்டி விட்டார். பிளாட்பாரத்தில் விழுந்த கப்பை, மறுபடியும் காலால் உதைத்துத் தள்ளினார்.'நேருவும், பட்டேலும் ஒரே ரயில் பெட்டியில் பயணம் செய்த போதிலும், அவர்களுக்குள் ஏதோ தகராறு நேர்ந்திருக்க வேண்டும். பட்டேலுக்கும் சேர்த்து நான் டீ வாங்கி வந்ததே, நேருவின் கோபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்...' என்று மொரார்ஜி, தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.***பெருமாள் கோவில்களில், 'வழுக்கு மரம்' ஏறும், திருவிழா நடைபெறும். வழுக்கு கம்பம் ஒன்றில், வழிய வழிய, எண்ணெய் தடவி இருப்பர். அதில், ஒருவர் ஏறி, கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும், பணமுடிப்பை எடுக்க வேண்டும். ஒருவராக ஏற முடியா விட்டால், மூன்று, நான்கு பேர் சேர்ந்த குழுவாக, இம்முயற்சியில் ஈடுபடலாம். மூன்று பேர், அந்த வழுக்கு கம்பத்தைக் கட்டிப்பிடித்து நின்று கொள்வர். ஒருவன், அவர்கள் மேல் ஏறி, அவர்கள் தோள் மீது காலை வைத்து, வழுக்கு கம்பத்தில் ஏறுவான். கீழே நிற்போர், வழுக்கு கம்பத்தின் மீது தண்ணீரை ஊற்றுவர். எண்ணெய்யும், தண்ணீரும் சேர்ந்தால், மேலும் வழுக்கும். ஏறுபவன் அதையும் மீறி, உச்சியை அடைய வேண்டும். முடியாவிட்டால், அடுத்த குழுவினர் வருவர். எப்படியோ, ஒரு குழுவைச் சேர்ந்தவன், ஏறி, பணமுடிப்பை எடுத்து விடுவான்.வாழ்க்கையும், ஒரு வழுக்கு மரத்தைப் போன்றது தான். அன்றாடப் பொழுது, கஷ்ட மில்லாமல் போனால் போதும் என்று, நினைப்போரைப் பற்றி பேச எதுவும் இல்லை. ஆனால், சாதிக்கத் துடிப் போர், சந்திக்கும் பிரச்னை என்னவென்றால், வழுக்கு மரமெனும் வாழ்வில் ஏறும் போது, அவனை, வெற்றி அடைய விடாமல், செய்வதற்கு தண்ணீர் வாரி அடிக்க சிலர் உண்டு. அதையும் மீறி, அவன் கம்பத்தின் உச்சியை அடைய வேண்டும். ஆனால், அதை விடுத்து, தன் முயற்சிக்கு இடையூறாகத் தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள் மேல் கோபம் கொண்டு, கம்பத்தை விட்டு இறங்கி வந்து, அவர்களோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பான் அல்லது தண்ணீர் வீசியடித்தவர்களைக் கண்டு, 'சே! என்ன பொறாமைக்கார உலகம்' என்று, சமூகத்தை நிந்தித்து, தனிமை வாழ்வை நாடத் துவங்கி விடுவான்.— 'வாழ்க்கை வாழ்வதற்கே' நூலிலிருந்து...***போலீஸ் இலாகா எப்படி உருவாயிற்று... ரோம் நகரை ஆண்ட, அகஸ்டஸ் சீசர் தான், கிறிஸ்து ஆண்டின் துவக்கத்தில், தன் நாட்டில் அமைதியை நிலைநாட்ட, தனியாக ஒரு படை அணியை, முதன் முதலாக ஏற்படுத்தினான். இந்த அமைப்பு, 350 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. இந்த காவல் துறை, அரசனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து வந்தது.அரசனின் நிதி நிர்வாகத்தை விட, இக்காவல் படையின் சமூக நிர்வாகத்தை, மக்கள் வரவேற்றனர். தங்கள் உரிமை, உடைமை, அமைதிக்கு, இவர் கள் தான் பாதுகாப்பு தர வேண்டும் என, எதிர் பார்த்தனர்.இதுபோன்ற கருத்து, இங்கிலாந்தில் உருவாகி, அமெரிக்காவிலும் பரவியது.ஆங்கிலேயர்கள், தம் பாதுகாப்புக்காக, காவல் துறையை அமைத்தனர். நம் நாட்டில், டிச., 7, 1792ல், கிழக்கிந்திய கம்பெனியினரால், போலீஸ் இலாகா ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு முக்கிய ஊரிலும், காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டு, இன்ஸ்பெக்டரின் தலைமையில், ஒரு உதவி இன்ஸ்பெக்டர், 10 காவலர்கள், ஒரு போலீஸ் எழுத்தர் அடங்கிய, காவல் குழு அமைக்கப்பட்டது.கடந்த, 1861 முதல், காவல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. காவலர்களின் சீருடை, ஊதியம் மற்றும் ஊழியர் நிலை தொடர்பான விதிமுறைகள் அமைக்கப்பட்டன. அப்போது, காவல் துறையினருக்கு, சிவப்பு மற்றும் நீல நிற தலைப்பாகையும், நீல நிற உடையும் சீருடையாகத் தரப்பட்டன. இன்று, ஒவ்வொரு மாநிலத்துக்கும், தனித்தனி போலீஸ் படை உள்ளது.***நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !