உள்ளூர் செய்திகள்

திண்ணை!

நீதிக் கதைகளை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அதன் மூலம், அன்பும், ஒருவருக்கொருவர் உதவும் குணமும் வளர வேண்டும்...' என்று, எண்ணுபவர் சாண்டோ சின்னப்பா தேவர்.கதாசிரியன் என்ற முறையில், இவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சினிமாவுக்கு கதை சொல்வதென்றால், ஒரு மணி நேரம் தேவைப்படும். இதற்கான நேரத்தை, கதை சொல்பவரும், கேட்பவரும் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.அன்றைக்கு தேவரை சந்திக்கும்போது, ஏதோ வங்கிக்குப் போக வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தார். 'கதையை நாலு வரிகளில் சொல்லுங்கள்; கருத்து என்னவென்று தெரிந்தால் போதும்...' என்றார்.'எந்தக் கதையையும், நாலு வரியில் சொல்லி விட முடியும்; ஆனால், நான் சொல்ல இருக்கும் கதையைக் கொஞ்சம் விரிவாகச் சொன்னால்தான், அதன் சிறப்பு புரியும். உங்களுக்கு எப்போது அவகாசம் கிடைக்கிறதோ, அப்போது கூப்பிடுங்கள்...' என்றேன்.அவரோ விடுவதாக இல்லை. 'சுருக்கமாகச் சொல்லுங்கள்; நான் புரிந்து கொள்வேன்...' என்றார்.'இப்படித்தான் என்னைப் போல ஒருவன், ஒரு ராஜாவிடம் கதை சொல்லி, சன்மானம் வாங்கிப் போகலாமென வந்தான். ராஜாவும் உங்களைப் போல, 'நேரமில்ல; நாலு வரியில் கதை சொல்...' என்றான். அதற்கு கதை சொல்ல வந்தவன், 'ஒரு வரியில கூட சொல்வேன்...' என்றான்.'அப்படியா... இந்த எலுமிச்சைப் பழத்தை மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பேன். இது மேலே போகும்போது, ராமாயணத்தின் கதையையும், கீழே வரும் போது, மகாபாரதத்தின் கதையையும், அதன் சாராம்சம் குறையாமல் சொல்ல வேண்டும்...' என்றான் மன்னன்.'தூக்கிப் போடுங்கள், நான் சொல்கிறேன்...' என்றான் புலவன். 'எச்சரிக்கை... சொல்லத் தவறினால் உன் தலை இருக்காது...' என்று, அரசன் மிரட்டினான்.'போடுங்கள்...' என்றான் புலவன். பழத்தை மேலே விட்டெறிந்தான் அரசன். பழம் மேலே போகும்போது, 'மண்ணாலே கெட்டது பாரதம்...' என்றவன், பழம் கீழே வரும் போது, 'பெண்ணாலே கெட்டது ராமாயணம்...' என்றான்.— மா. லட்சுமணன் எழுதிய, 'திரைப்பட நினைவுகள்'நூலிலிருந்து.பாபரின் மகன் ஹுமாயுனுடன் போரிட்டு, அவரை டில்லியை விட்டு விரட்டி, சில காலம் ஆட்சியில் இருந்தவர் ஷேர்கான். ஆறு ஆண்டுக்குப் பின், ஹுமாயூன், மீண்டும் போரிட்டு, ஷேர்கானை விரட்டி, ஆட்சியைப் பிடித்தார். இந்த ஷேர்கான் பாபரிடம் கூட்டணி அமைத்து, ஆப்கானியர்களை எதிர்த்துப் போரிட்டவர். அந்தரங்கத்தில் அவருக்கு, முகலாயர்கள் மீது, கடுங்கோபம் இருந்து வந்தது. 'எனக்கும் ஒரு காலம் வரும்; அப்போது நான், இந்த முகலாயர்களை இந்தியாவை விட்டே துரத்தியடித்து விடுவேன்...' என்று, அடிக்கடி கூறிக் கொள்வார். இதைக் கேட்டு, அவரது நண்பர்கள் கேலி செய்வர்.முன்பு, ஒரு சமயம், ஷேர்கான், முகலாயர்களோடு சேர்ந்திருந்த போது, பாபர் ஒரு விருந்து வைத்தார். அந்த விருந்தில், விருந்தினர் ஒவ்வொருவருக்கும் பொரிக்கப்பட்ட முழு கோழி பரிமாறப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட ஷேர்கான், தன் பங்கிற்கு வந்த முழு கோழியையும், ஒரு சில நிமிடத்தில் வாயால் கிழித்தே சாப்பிட்டு விட்டார். இதனைக் கூர்ந்து கவனித்த பாபர், ஷேர்கானை சுட்டிக்காட்டி, 'இந்த மனிதனுடைய தோற்றத்தையும், இவன் முழுக் கோழியை சில நிமிடத்தில் சாப்பிட்ட விதத்தையும் பார்த்தால், ஒரு சந்தர்ப்பத்தில், இவனால் நம் ஆட்சிக்கு ஆபத்து நேரிடும் என்று, என் மனம் கூறுகிறது...' என்றார். (பிற்காலத்தில் அப்படித்தான் ஆயிற்று!)— குலாம் ரசூல் எழுதிய, 'முஸ்லிம் மன்னர்கள்' நூலிலிருந்து.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !