உள்ளூர் செய்திகள்

திண்ணை!

காட்டில் தலைமறைவாக இருந்த மருது சகோதரர்கள் பிடிபட்டு, பெரிய மருது, அக்.,௧௦ல் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவர், கிழக்கிந்திய கம்பெனி சேனாதிபதி கர்னல் ஆக்னி துரை முன்பாக, மரண வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது. அது:என்னுடைய ஜமீன், வேலு நாச்சியை கல்யாணம் செய்து கொண்டதன் மூலமாக, சிவகங்கை ஜமீனுக்குரிய உயில் சாசனத்தை பெற்றிருக்கிறேன். ௧௭௭௩ல் உயில் சாசனம் பெற்று, மாத்தூர் நவாடி அவர்களால், ஜமீனை ஜப்தி செய்து, ஏலமாக்கிய பணத்தை, நான் கட்டி, ஏலத்தை நீக்கி, அனுபவித்து வருகிறேன். என்னைத் தவிர, இதில், வேறு யாருக்கும் பாத்தியமில்லை.தேவஸ்தானம், பண்ணை மற்றும் கொள் கிரயம், சோறு தேட்டு, ஆயம், சுங்கம், சாயவேல், உப்பளம், சத்திரங்கள், மடம் இவைகள் என்னால், கிரயத்துக்கு வாங்கப்பட்டன; நானே அனுபவித்து வருகிறேன். இந்தச் சொத்துகளில் யாருக்கும் எந்த விதமான பாத்தியமும் இல்லை. நானும், என் வாரிசுகளுமே பாத்தியமுடையவர்கள். மேற்கண்ட சொத்துகள், நான் சுயார்ச்சிதமாக சம்பாதித்தவை. நான், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்முவுக்கும், ஊமைத்துரைக்கும் உதவி செய்யவில்லை; இடம் கொடுக்கவும் இல்லை. என்னால் கட்டப்பட்டிருக்கும் சத்திரங்களுக்கும், கோவில்களுக்கும் விடப்பட்டிருக்கிற, தரும சாசனங்கள், மற்றவர்களுக்கு கொடுத்திருக்கிற தஸ்தாவேஜுகளில் கண்ட சொத்துகள், யாவும் அவரவர்களே அனுபவிக்கும்படி செய்ய வேண்டும்.என் தம்பி சின்ன மருதுவுக்கும், எனக்கும், தாய் ஒருத்தி; தகப்பன் வேறு வேறு. சின்ன மருதுவுக்கு, ஜமீனில் யாதொரு பாத்தியமும் இல்லை. அவனை மானேஜராக மட்டுமே வைத்திருந்தேன். அவன் பாஞ்சாலக்குறிச்சி கட்டபொம்முவுக்கும், ஊமைத்துரைக்கும் அடைக்கலம் கொடுத்து, காத்ததாக சொல்லப்படுகிறதே தவிர, எனக்கு எதுவும் தெரியாது.என் தம்பி சின்ன மருதுவை, மூன்று நாளைக்கு முன் தூக்கிலிட்டதால், என்னைத் தூக்கில் ஏற்றுவதை நிறுத்தி வைக்கக் கூடாது. அப்படி செய்வது, தரும சாஸ்திரத்துக்கு ஏற்காது. நானே கழுத்தில், கயிற்றை போட்டுக் கொள்கிறேன்.என் வாரிசுகளை வரவழைத்து, என் ஜமீனை கொடுக்க வேண்டும். ஜமீன் சொத்துகளை, என் சந்ததிகளுக்கு கொடுத்து விடுவதாகவும், நான் அமைத்திருக்கிற தரும நிலையங்களுக்கு, நான் ஏற்படுத்தியிருக்கிற பிரகாரம் யாவும் ஒழுங்காக நடக்க வேண்டும். அதற்கு, நீங்கள் எனக்கு உறுதிமொழி தருவதுடன், அதற்கு அத்தாட்சியாக, கவர்ன்மென்ட் கத்தியை போட்டுத் தாண்டி, நீங்கள் சத்தியம் செய்து தர வேண்டும்.என் வாரிசுகள்: என் மனைவி ராக்காத்தாள், அவள் மகள் மருதாத்தாள், இரண்டாவது மனைவி கருப்பாயி ஆத்தாள். அவருக்கு, கருத்தையா என்று ஒரு மகன், கண்ணாத்தாள் என்று ஒரு பெண். இருவருக்கும், சந்ததியில்லை. மூன்றாம் மனைவி, பொண்ணாத்தாள்; அவருக்கும் சந்ததியில்லை. நாலாம் மனைவி, ஆனந்திபாய், அவருக்கு ஒரு பெண் குழந்தையுண்டு. ஐந்தாம் மனைவி, மீனாட்சி; அவள் அன்னிய ஜாதி. அவருக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. எனக்கு, சிவகங்கை ஜமீன் உயில் சாசனம் செய்து கொடுத்த, முதல் மனைவி வேலு நாச்சி இறந்து, ஒரு வருஷம் ஆகிறது. அவருக்கு சந்ததியில்லை. என்னுடைய வாரிசுகளை, கம்பெனியார்கள் எந்தவொரு இம்சையும் செய்யாமல் இருக்கும்படி, கேட்டுக் கொள்கிறேன்.மேலே சொன்னபடி, நீங்கள் கத்தியை போட்டு சத்தியம் செய்து கொடுத்ததை, நான் நேரில் பார்த்துக் கொண்டேன். ஆகையால், ஆகாச வாணி, பூமாதேவி சாட்சியாக, நான் என் கழுத்தில் கயிறு போட்டுக் கொள்கிறேன்.(ஒப்பம் பெரிய மருது சேர்வை)ஆதாரம்: கவிஞர் சுரதா தொகுத்த, 'நெஞ்சில் நிறுத்துங்கள்' நூலிலிருந்து...ஒரு ஆங்கிலப் புத்தகம்: பெயர், 'இந்தியா 100 இயர்ஸ் அகோ' கடந்த, 1885ல் வெளிவந்தது. இங்கிலாந்திலிருந்து, இந்தியாவுக்கு வரும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு, இந்தியாவைப் பற்றி அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது. அதன் மறுபதிப்பு, பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்துள்ளது. அன்று, தமிழகத்தில் நிலவிய கொடும் பஞ்சம் பற்றியும், சென்னையில், மக்கள் பட்ட துன்பம் பற்றியும், விவரிக்கப்பட்டுள்ளது. அதில்:கடந்த, 1878ல் ஏற்பட்ட, கடும் பஞ்சத்தின் போது, சென்னையில், 9,000 பேர், இருந்தனர்; இவர்கள் கூடாரங்களில் வைக்கப்பட்டனர். ஒரு நாளைக்கு, முப்பது பேர் வீதம் மாண்டனர். இறந்தவர்களை ஒன்றாகப் போட்டு எரித்தனர். இது, 'கான்ட்ராக்ட்' முறையில் செய்யப்பட்டது. அவ்வருட பஞ்சத்தின் பயங்கரங்கள், சொல்ல முடியாதவை.தானிய மூட்டைகளை, துறைமுகத்திலிருந்து, ரயில் நிலையத்துக்கு எடுத்துச் செல்லும் போது, பலத்த ராணுவப் பாதுகாப்பு, வேண்டியிருந்தது. ஆனால், பசியின் வசப்பட்டவர்கள், சவுக்கடிகளையும், குதிரையின் குளம்படிகளையும் மீறி, மூட்டைகளில் ஓட்டைப் போட்டு, தானியங்களை சிதறச் செய்தனர். பின், நூற்றுக்கணக்கான மக்கள், கீழே விழுந்த தானியங்களைப் ளைப் பொறுக்கினர்.இதற்கு தண்டனையாக, பிடிபட்டவர்களை எல்லாம், கடற்கரையில் உள்ள கொட்டடிகளில், உணவோ, நீரோ இல்லாமல், தகிக்கும் வெயிலில், இருபத்து நான்கு மணி நேரமும், அடைத்து வைத்தனர். இவ்வகையில், பலர் மடிந்தனர். ஆங்கில அதிகாரத்தின் தலைமையிடமான சென்னையில் தான், இந்தக் கொடுமை நிகழ்ந்தது. இதையெல்லாம் நேரில் கண்ட அரசுப் பணியாளர் ஒருவர், 'அப்போது, நாய்களும், கழுகுகளும் இல்லாவிட்டால், பிணங்களை அடக்கம் செய்ய, நாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டிருப்போம்...' என்றார்.மனிதன் பிறப்பதற்கு முன்பே, இங்கே இயற்கை இருக்கிறது. இயற்கை தான், வேளாண்மை செய்திருக்கிறது. ஜப்பான் நாட்டு விவசாய அறிஞர், 'பூமியின் இயற்கை வளத்தை தெரிந்து கொள்ள, மனிதனின் கால்படாத காட்டுப் பகுதிக்குள் சென்று பார்த்தால், புரிந்து கொள்ள முடியும்...' என்று கூறுவார்.மனிதனின் கால்படாத காட்டுக்குள்ளே பூச்சி, புழு வாழ்கிறது. கோடையில் இலை உதிர்கிறது. விலங்குகள் நிலத்தில் சாணம் இடுகிறது. மழைநீர் விழுகிறது. பூமியில் விழும் விதை பயிராகிறது. மரமாகிறது, எந்த மனிதனும் இந்த வேளாண்மையில் ஈடுபடவில்லை; யாரும் ரசாயன உரம் போடவில்லை. ஆனாலும், இயல்பாக எல்லா விளைச்சலும் நிகழ்ந்தது. இதற்குப் பெயர்தான், இயற்கை வேளாண்மை. மனிதன், இயற்கை வேளாண்மை செய்ய முடியாது. இயற்கை வழி வேளாண்மைதான், செய்ய முடியும். நோயில்லா வாழ்வும், நஞ்சில்லா உணவும் பெற, நாம் இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும்.- மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.எம்.ஆர். ராதா தன் நாடகங்களின் போது, இடைவேளை விட மாட்டார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, 'இடைவேளை விட்டால், என் நாடகத்தைப் பற்றிய கருத்துகளை, 'லாவட்டரி'யில் பேசுவர். என்னைப் பற்றி பேசக் கூடிய இடமா இது... நாடகம் முடிந்ததும், தெருவெல்லாம் மக்கள் பேசிக் கொண்டு போவதையே, நான் விரும்புகிறேன். அதனால் தான், 'இண்டர்வெல்' விடுவது இல்லை...' என்றார் எம்.ஆர்.ராதா. நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !