திண்ணை!
ராஜாஜி கம்யூனிச ஆதரவாளராக இருந்த போது, கம்யூனிசம் குறித்து அவர் கூறியது: ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. தண்ணீர் வேண்டும் என்பதற்காக, யாரும் ஆற்றை, வீட்டிற்குள் திருப்பி விட்டுக் கொள்வதில்லை. ஒரு குடமோ, இரண்டு குடமோ ஆற்றில் இருந்து, தண்ணீர் மொண்டு வந்து, வைத்துக் கொள்கின்றனர். அது போலவே, இன்னொரு ஊர்க்காரர்களும் செய்து கொள்கின்றனர். பொதுவுடமை என்பதும் இப்படித்தான். எல்லாம், எல்லாருக்கும் பொதுவாக இருக்கும். தேவையானதை, தேவைப்படும் அளவு, அவரவர் எடுத்துக் கொள்வர் என்றார்.ராஜாஜி சிறையில் இருந்த போது, பொதுவுடமை கொள்கையை ஆதரித்து, ஆங்கிலத்தில், அவர் எழுதிய நூலை, தமிழில் தி.ஜ.ர., 'அபேதவாதம்' (பேதமற்ற தன்மை) என்ற பெயரில், மொழி பெயர்த்து, வெளியிட்டார்.ராஜாஜி சுதந்திர கட்சியை ஆரம்பித்ததும், 'அபேதவாதம்' என்ற, தன்னுடைய கம்யூனிச ஆதரவு நூலை, வாபஸ் வாங்கிக் கொண்டார். அதன்பின், அதை நூலாக வெளியிட, எந்த பதிப்பாளருக்கும், அவர் உரிமை தரவில்லை.-'பொதுவுடமை தத்துவம்' என்ற நூலிலிருந்து.இயற்கை வழி வேளாண்மை பற்றி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, முதல் கட்டமாக, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பிரசாரத்தை ஆரம்பித்தோம். ஒரு கரும்பு விவசாயி, 'உரம் வேண்டாம்...' என்று கூறி, அதற்குரிய பணத்தை பெற்று, 3,000 ரூபாய்க்கு சாணம் வாங்கி, நிலத்தில் கொட்டி, தண்ணீர் பாய்ச்சி பயிர் வளர்த்தார்.இதைக் கண்ட வேளாண்மை அதிகாரி, 'இந்த ஆண்டு நீ, விவசாயத்திற்கு வாங்கிய கடனை அடைக்க மாட்டாய்...' என்றார். ஆனால், அந்த விவசாயியோ, 70 டன் கரும்பை வெட்டினார். அதிலிருந்து, இயற்கை வேளாண்மை, வேகமாக மக்களிடையே பரவியது. சத்தியமங்கலத்தில் பரவி, பின், மாவட்டம் முழுவதும் பரவியது.கடந்த, 2004ல், சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மற்றும் அதன் கடற்கரையோர கிராமங்களில், கடல் நீர் புகுந்ததால், 'ஐம்பது ஆண்டுகளுக்கு, அந்த நிலத்தில் எதுவும் பயிரிட முடியாது...' என்றனர்.நாங்கள் அப்பகுதி கிராமங்களில், இயற்கை வழி வேளாண்மையை பயன்படுத்தினோம். தெற்கு பொய்கை நல்லூர் என்ற கிராமத்தில், 450 ஏக்கரில், இயற்கை விவசாய இடு பொருட்களை தூவி, அந்த ஆண்டே விளைச்சலை காண வைத்தோம்.அதிகாரத்தில் இருக்கிற விவசாய விஞ்ஞானிகள், உரக் கம்பெனிகளுக்கு, தரகு வேலை செய்கின்றனர். அவர்கள் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ஒட்டு விதை போன்றவற்றை, எப்படி விற்பது என்பது பற்றி தான், சிந்திக்கின்றனர். இதனால் தான், நம் உணவு விஷமாகிப் போனது.- காலம் சென்ற இயற்கை விவசாய விஞ்ஞானி, நம்மாழ்வார், ஒரு பேட்டியில்.பெண்ணை விட, ஆண் தான் உயர்ந்தவன் என்ற நினைப்பும், செயலும் உள்ள ஆடவர்களை, 'மேல் சாவனிஸ்ட்' அதாவது, ஆணாதிக்கக்காரர்கள் என்று பெண்கள் குறிப்பிடுகின்றனர். இந்த சொல், எப்படி வந்தது தெரியுமா?நெப்போலியனுடைய படையில் பணியாற்றிய, நிகோலஸ் சவ்வின் என்ற போர் வீரன், போர்க்களத்தில், பதினேழு முறை, காயம் அடைந்திருந்தான். அதனால், அவனைப் பாராட்டி, ஓய்வு பெறக் கூறி, ஒரு பதக்கம், ஒரு வாள் மற்றும் ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக அளித்தான் நெப்போலியன்.அதனால், சவ்வின் எப்போது பார்த்தாலும், நெப்போலியனை பாராட்டிப் பேசுவது, வழக்கம்.நாளடைவில், இது, 'சவ்னிசம்' என்ற வார்த்தையாக உருவெடுத்து, கர்வத்துடன், தன் நாட்டை பற்றி, பேசுபவனைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில், இது ஆண்களின் கர்வ உணர்வை குறிக்கும் சொல்லாக, உலகம் முழுவதும் பரவி விட்டது.— 'தோன்றியது எப்படி?' என்ற நூலிலிருந்து.'பசி வந்தால், பத்தும் பறந்து போகும்...' என்பது பழமொழி. அந்த பத்து: மானம், குலம், கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை மற்றும் காதல். நடுத்தெரு நாராயணன்