உள்ளூர் செய்திகள்

திண்ணை!

ராமாயணம், மகாபாரதம் என்ற, இரண்டு பெரிய இதிகாசங்களில், ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி. இவர் பூர்வீகத்தில், கொள்ளை அடிப்பதையே தொழிலாக கொண்ட ஒரு கொள்ளைக்காரன். பின், ஆண்டவன் அருளால், வால்மீகியாக மாறி, ராமாயணம் எழுதினார் என்பது கதை!அதைப்போலவே, மகாபாரதத்தை எழுதிய வியாசரும், பின்தங்கிய சமுதாயத்தில் பிறந்தவர்; ராஜ குடும்பத்தில் பிறந்தவரல்ல.சாதாரணக் குடும்பத்தில் பிறந்த இவர்கள் இருவருமே, ராஜ பரம்பரை கதைகளைத் தான் எழுதினர்.செங்குட்டுவனும் அவன் தம்பி இளங்கோவும், ராஜ பரம்பரையில் பிறந்தவர்கள்; இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் புதல்வர்கள். ஒருநாள், அரசவைக்கு வந்த ஒரு ஜோதிடன், சகோதரர்கள் இருவருடைய முகங்களையும் பார்த்து, 'செங் குட்டுவன் அண்ணன் என்றாலும் கூட, தம்பியின் முகத்தில் தான், நாட்டை ஆள்வதற்கான குறிகள் தெரிகின்றன எனவே, இளங்கோ தான் நாட்டை ஆளுவான்...' என்று, குறிப்பிட்டார்.இளங்கோ எழுந்து, 'நிமித்தகரே... உன் வாக்கு பொய்க்கட்டும்...' என்று கூறி, துறவி ஆனான்; குண வாயில் கோட்டத்தில் அமர்ந்து, சிலப்பதிகாரம் எழுதினான்.ராஜ பாரம்பரியக் கதைகளான, ராமாயணத்தையும், மகாபாரதத் தையும் எழுதியவர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்த வால்மீகியும், வியாசரும். ஆனால், ராஜ குடும்பத்திலே பிறந்து, அந்த ராஜயோகம், தேவையில்லை என்று, அதை துறந்து விட்ட இளங்கோ எழுதியதோ, ஒரு சாதாரண நடுத்தர மக்களின் கதை. மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த கோவலன் தான் கதாநாயகனாக, வருகிறான். இதற்கு பெயர் தான், 'நிலையும் நினைப்பும்' என்பது!- மு.கருணாநிதி ஒரு கல்லூரி விழாவில் ஆற்றிய உரை. 'பொங்கி வரும் புது வெள்ளம்' நூல். திருமகள் நிலையம் வெளியீடு.ஈ.வெ.ரா.,வின் தலைமையிலிருந்து, அதிகம் பேர் விலகிச் சென்றிருக்கின்றனர். இது, பத்தாண்டுகளுக்கு ஒரு முறையாவது நிகழும். ஒரு முறை கருத்து வேறுபாடு காரணமாக, ஜீவாவும் பிரிந்து சென்றார். ஆனால், மற்றவர்கள் சென்ற போது, ஈ.வெ.ரா., கூறியதற்கும், ஜீவா பிரிந்து சென்ற போது கூறியதற்கும், வேறுபாடு உண்டு. எங்களைப் போன்றவர்கள், ஈ.வெ.ரா.,வின் கரம் நீளாத இடத்திலிருந்து அவரை விமர்சிப்போம் அல்லது அவர் முன், தேம்பித் தேம்பி அழுவோம். ஆனால், ஜீவா ஒருவர்தான், ஈ.வெ.ரா.,வின் முன்னிலையிலேயே, அவரை விமர்சித்தவர். திருத்துறைப்பூண்டி மாநாட்டில், சுயமரியாதை இயக்கம், பாதை தவறுகிறது என்ற தன் கருத்தை, நேருக்கு நேராக எடுத்துரைத்தார்.பொதுவாக, தம்மைவிட்டு வெளியேறு வோ ரைப் பற்றி ஈ.வெ.ரா., 'இவனுக்கு கணக்குத் தீர்த்து, நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இவனை பற்றி எனக்கு எப்போதோ தெரியும். துரோகி...' என்றே கூறுவார். நாங்கள் வெளியேறிய போதும், இப்படித்தான் ஏதோ பழைய கேடிகளின் வரலாற்றைக் கூறுவதுபோல் கூறினார்.ஆனால், ஜீவா விலகியபோது, இத்தகைய சொல் எதையும் ஈ.வெ.ரா., பயன்படுத்தவில்லை. மாறாக, 'ஜீவா பெரிய வீரராக விரும்புகிறார்; அவரது வீரத்திற் கெல்லாம், நம் இயக்கம் சரிப்பட்டு வராது. அவர் நினைக்கிற மாதிரி, தீவிரமாக நாம் செயல்பட முடியாது...' என்று தான் கூறினார். தனிப்பட்ட முறையிலும், ஜீவாவைப்பற்றி ஈ.வெ.ரா., எதுவும் கூறியதில்லை. தமிழகத்தில், பொதுவாழ்வில் இருந்தோருக்கு, ஒரு முன் மாதிரியாக விளங்கியவர் ஜீவா.— ஈ.வெ.கி.சம்பத். (தாமரை; ஜீவா மலர் 1963)இந்த நாட்டில் மெழுகுவர்த்தி கிடைப் பதில்லை. அதற்கு பதிலாக, விளக்கு பிடிப்பவர்கள் என்ற பெயரில், அழுக்கு கும்பல் ஒன்று, தங்கள் கைகளில் தீவெட்டிகளைப் பிடித்து நிற்கின்றனர். வசதி படைத்தவர்கள், நூறு தீவட்டி மனிதர்களை வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். இருட்டு வேளைகளில் வெளிச்சம் தேவைப்பட்டால், இந்த அழுக்கு மனிதர்கள், தங்கள் கைகளில் தீவட்டிகளுடன் அருகில் வந்து நின்று கொள்வர். விவசாயிகள், பாமர மக்கள் அரை நிர்வாணமாகவே காணப்படுகின்றனர். இவர்கள் இடையில் மிகச் சிறிய, 'லங்கோடு' என்ற துணியை மட்டுமே கட்டியிருக்கின்றனர்.- 500 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவைப்பற்றி முஸ்லீம் மன்னர் பாபர், தன் சுயசரிதையான, 'துசுக்கி ஈ பாபரி' நூலில் குறிப்பிட்டுள்ளவை.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !