உள்ளூர் செய்திகள்

திண்ணை!

'எல்லை காந்தி' நூலிலிருந்து:அரேபியாவில் உள்ள தாயிப் நகரில், 35 வயது நிரம்பிய ஆறடி மூன்றங்குலம் உயரமுள்ள இளைஞர் ஒருவர், ஊரின் வெளியே உலாவிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தாலே, உள்ளூர்காரராக இருக்க முடியாது என்பது தெரிந்தது. எதிர்த்தாற்போல் நீண்ட தாடியுடைய நெடிய ஆடை அணிந்த ஒரு மனிதர் வந்து கொண்டிருந்தார்.தாடிக்காரர், தாமே இளைஞரிடம் நெருங்கிச் சென்று, 'ஹஜ் புனித யாத்திரை வந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்; இளைஞரும், 'ஆமாம்' என்றார்.'அப்படியானால், நீங்கள் அவசியம் இங்கே இரண்டு பொருட்களைப் பார்க்க வேண்டும்; என்னுடன் வாருங்கள்... நபிகள் நாயகத்தின் தாடியில் இருந்த திருமுடி ஒன்றையும், அவருடைய புனித பாதங்கள் பதிந்த கல் ஒன்றையும் காட்டுகிறேன்...' என்றார் அந்த தாடிக்காரர்.அதற்கு அந்த இளைஞர், 'நான் இங்கே பழம் பொருட்களைப் பார்க்க வரவில்லை; இந்த ஊர் மக்களுடைய நன்மையைக் கருதி, கடும் பாலைவனத்தையும் பொருட்படுத்தாமல் நபிகள் நாயகம், பெரும் பயணத்தை மேற்கொண்டு இங்கு வந்தாரே... அந்தத் தைரியத்தைக் காண வந்தேன். அப்படி வந்த அவரை, இந்த ஊர் மக்கள் எப்படி வரவேற்றனர்... அவர் மேல் கல் எறிந்தனர்; நாய்களை ஏவிவிட்டனர். அப்படி இருந்தபோதிலும், அவர் நம்பிக்கையிழக்காமல், இம்மக்களுக்கு ஆண்டவன் நல்வழி காட்ட வேண்டுமென்று தொழுகை செய்தார்...' என்றார். தாடிக்காரருக்கோ என்ன பேசுவது என்றே தெரியவில்லை; பேசாமல் நடையைக் கட்டினார்.அந்த இளைஞர்தான், இந்திய சுதந்திரப் போரில், காந்திஜியுடன் இணைந்து தொண்டாற்றிய, எல்லை காந்தி எனப்படும் கான் அப்துல் கபார்கான்!'சாரல்' (1969ல் காரைக்குடியில் வெளியான புதிய தமிழ்ப் பத்திரிகை) இதழில், மு.நடேசன் எழுதியுள்ள கட்டுரையில்:காரைக்குடியில் தமிழறிஞர் பலர் சேர்ந்து, 'இந்து மதாபிமான சங்கம்' என்றொரு அமைப்பை, 1918ல் நடத்தினர். பல புலவர்களும், பண்டிதர்களும் சங்கத்துக்கு வந்து சொற்பொழிவு செய்வர்; ஒரு முறை சுப்பிரமணிய பாரதியாரையும் அழைத்து வந்தனர்.பாரதி சிவந்த நிறம்; குள்ளமானவர். முறுக்கு மீசையுடன் கையில் தடியுடன் இருந்தார். இவருடன் உயரமாக, கறுப்பு நிறமுள்ள மொட்டைத் தலை மனிதர் ஒருவரும் வந்தார். அவரைப் பாரதியார் 'மொட்டையா...' என்று தான் அழைப்பார். பாரதியார் காரைக் குடியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தார். அவர் அங்கே இருந்த வரையில் நானும் கூடவே இருந்தேன். ஒரு நாள் என்னை ஓமப்பொடி வாங்கி வரச்சொன்னார்; ஓட்டமாக ஓடி, ஓமப்பொடி பொட்டலம் வாங்கி வந்து கொடுத்தேன்.பாரதியார் அதைப்பிரித்து கொஞ்சம் எடுத்து, மொட்டையனின் தலையில் போட்டு, ஒரு அடி அடித்து, பின், மீதி ஓமப்பொடியை அவரிடமே அள்ளிக் கொடுத்தார்.பாரதியைப் படம் பிடிக்க வேண்டுமென்று, போட்டோ எடுக்கும் நபரைக் கூட்டி வந்து, அவரை நாற்காலியில் அமர வைத்து படம் எடுக்கச் சொன்னோம். பாரதியார் கையில் தடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தார். படம் பிடிப்பவர், 'தடியை இப்படி வைத்துக் கொண்டால் நன்றாய் இருக்காது...' என்று எவ்வளவோ சொல்லியும், ஒரே பிடிவாதமாய், 'நான் சொல்லுகிறபடி செய்; இல்லாவிட்டால் போ...' என்று சொல்லி விட்டார். அப்புறம் சமாதானம் செய்து, அவரது விருப்பப்படியே கையில் தடியுடன் படம் எடுத்தோம்; அந்தப் படம் தான் இன்று நாடெங்கும் உலவி வருகிறது.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !