உள்ளூர் செய்திகள்

திண்ணை!

28.2.1908 சுதேசமித்திரன் இதழிலிருந்து: தமிழில் முதல் நாளிதழான, சுதேசமித்திரனை துவக்கி, அதற்கு ஆசிரியராக இருந்தவர், ஜி.சுப்பிரமணிய ஐயர். தேச பக்தியைத் தூண்டும் விதமாக, அந்தப் பத்திரிகையில் எழுதி வந்தார். அதனால், அவர் சென்ற இடமெல்லாம், தமிழ் மக்கள் சிறப்பாக உபசாரம் செய்தனர்.சுதேசமித்திரன் பிப்., 2௮, 1908 இதழில் வெளிவந்துள்ள செய்தி: சுதேசமித்திரன் பத்திரிகை அதிபரும், தேசாபிமானியுமான ஜி.சுப்பிரமணிய ஐயர் பிப்., 26, 1908 காலை, 8:30 மணிக்கு, ரயிலில் கோவையை வந்தடைந்தார்.இவரை வரவேற்பதற்காக, ரயில்வே ஸ்டேஷன் மேடையில் அநேக கனவான்களும், வியாபாரிகளும், மாணவர்களும் திரளாகக் கூடியிருந்தனர். ரயிலில் இருந்து சுப்பிரமணிய ஐயர் இறங்கியவுடன் அவருக்கு மாலை போடப்பட்டது.டி.சி.சாம்பமூர்த்தி ஐயர் எலுமிச்சம் பழமும், துளசியும் கொடுத்தவுடன், கே.வி.ஸ்ரீநிவாச ஐயர் அங்கு வந்திருந்தோரை, ஐயருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின், ஏற்கனவே அங்கு தயார் நிலையிலிருந்த இரட்டைக் குதிரை வண்டியில் அவரை அமர வைத்து, பாண்டு வாத்தியத்துடனும், வந்தே மாதர கோஷத்துடனும், குதிரை வண்டிகள் பவனிவர பெரிய கடைவீதி வழியாக, அவரை அழைத்து வந்த போது மும்பை ஆக்கர் கடையிலும், புஷ்பக் கடையிலும், ஐயருக்கு மாலைகள் போடப்பட்டன.பின், ரங்கே கவுண்டன் வீதியிலிருந்து வடமுகமாய்த் திரும்பி, அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்கு, அழைத்து சென்றோம், அவர் விடுதிக்குள் நுழையும் முன், ஈடு காய்கள் கொடுக்கப்பட்டன, அவரும் வந்தவர்களுக்கு வணக்கம் சொல்லி, 'இன்று மாலை, இந்திய கைத்தொழில்களை பற்றிய உபன்யாசம் உள்ளது அனைவரும் வர வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டார். 'தெனாலிராமன் கதைகள் ஓர் ஆய்வு' நூலிலிருந்து: கிருஷ்ண தேவராயரின் அரசவையில், தலைசிறந்த எட்டு புலவர்கள் இருந்தனர். இவர்களுக்கு, 'அஷ்ட திக் கஜங்கள்' என்று பெயர். அவர்கள் அல்லசானி பெத்தண்ணா, நந்தி திம்மண்ணா, தூர்ஜதி, மாதயகாரி, மல்லண்ணா, அய்யலராஜூ, ராமபத்ரா, தெனாலி ராமகிருஷ்ணா, ராமராஜ பூஷணா, பிங்கலி சூரண்ணா ஆகியோர். இவர்களுள் ஒருவரான தெனாலி ராமகிருஷ்ணா தான் தமிழகத்தில் பிரபலமடைந்துள்ள, தெனாலி ராமன். தமிழகத்தில் இவரைப்பற்றி வழங்கும் பல கதைகள், சிறுவரை மகிழ்விப்பதற்காக எழுதப்பட்ட கற்பனைக் கதைகளே!ஒரு கல்லூரி விழாவில், கண்ணதாசன் பேசியபோது சொன்னது: சினிமாவில் நல்ல பாடல்களை எழுத வேண்டும் என்று தான் எனக்கும் ஆசை; ஆனால் தயாரிப்பாளர்கள், 'செக்ஸ்சை அப்படியே பிழிந்து கொடு...' என்று தான் பேச்சை ஆரம்பிக்கின்றனர்.ஒருமுறை விஸ்கி பாட்டிலையும், 'ஜட்டி' மட்டும் அணிந்திருந்த ஒரு பெண்ணை என் முன் நிறுத்தி, 'எழுது பாட்டை...' என்றனர். எனக்கோ எரிச்சலான எரிச்சல்; அந்தப் பெண்ணை பார்க்கவே சகிக்கவில்லை. இந்த லட்சணத்தில் பாட்டு எப்படி எழுதுவது?'ஆண்டவன் படைத்தஉடம்பு தானேஆடை என்னஅவசியமா?'என்று எழுதி விட்டேன்.'இப்படி எழுதி விட்டீர்களே... சென்சார் அனுமதிக்குமா?' என்று கேட்டார் தயாரிப்பாளர். 'உங்க படத்தை அனுமதிக்கிற சென்சார், என்னுடைய பாட்டை நிச்சயம் அனுமதிக்கும்...' என்று சொன்னேன். நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !