திண்ணை!
முல்லை முத்தையா தொகுத்த, 'புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்' நூலிலிருந்து: சைவ சமயத்தில், மிகுந்த பற்றும், வைணவத்தில் மிகுந்த வெறுப்பும் உடைய ஒரு புலவரிடம், தமிழ் கற்றுக் கொள்ள ஒரு மாணவன் வந்தான். அப்புலவர் வைணவப் பெயரைக் கேட்டாலே, 'சிவ சிவா...' என்பார்.மாணவனிடம், 'உன் பெயர் என்ன?' என்று கேட்டார் புலவர்.'சிவராமலிங்கம்...' என்றான் மாணவன்.புலவர் மகிழ்ச்சியுடன், 'அகப்பட்டுக் கொண்டான்... அகப்பட்டுக் கொண்டான்...' என்று உரக்க கத்தினார்.மாணவனுக்கு ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்தபடி நின்றான். புலவர் மகிழ்ச்சியோடு, 'சிவனுக்கும், லிங்கத்துக்கும் மத்தியில், ராமன் அகப்பட்டு கொண்டான்...' என்று கூறி, அமைதியடைந்தார்.தே.தீனதயாளன் எழுதிய, 'பெரியவர் காமராஜர்' நூலிலிருந்து: கடந்த, மே, 1973ல் திண்டுக்கல்லில் பார்லிமென்ட் இடைத்தேர்தல் நடந்த போது, தலைவர் காமராஜர் மதுரையில் தங்கி, மாலையிலிருந்து, நள்ளிரவு வரை, தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வந்தார்.ஓட்டுப்பதிவு நாளன்று, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் சென்று, ஓட்டுப்பதிவு நிலவரத்தை விசாரித்து வந்தார், அப்போதைய தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மூப்பனார். வழியில், மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர், பழ.நெடுமாறனை சந்தித்து ஓட்டுப்பதிவு நிலவரம் பற்றி பேசி கொண்டிருந்தபோது, காங்., ஜெயிக்காது என்று கணித்து விட்டனர்.நெடுமாறனிடம், மூப்பனார், 'ஓட்டு எண்ணும் சமயம் தலைவர் இங்கு இருக்க வேணாம்; நாளைக்கே அவரை சென்னைக்கு அனுப்பிடலாம்...' என்றார்.அன்று இரவு, காமராஜர் தங்கியிருந்த இடத்திற்கு வந்த கட்சிக்காரர்கள், 'ஜெயித்து விட்டோம்...' என்றனர். 'எனக்கென்னவோ, எம்.ஜி.ஆர்., கட்சி தான் ஜெயிக்கும்ன்னு தோணுது; பார்க்கலாம்...' என்றார் காமராஜர். கட்சிக்காரர்கள் எல்லாம் போன பின், அங்கு வந்த மூப்பனார் மற்றும் நெடுமாறன், 'ஐயா, நமக்கு ஜெயிக்கிற வாய்ப்பு இல்ல...' என்று கூறி, 'ஓட்டு எண்ணும்போது, நீங்க இருக்க வேணாம்; நாங்க பாத்துக்கிறோம். நீங்க புறப்படுங்க...' என்றனர்.'தோத்துப் போவோம்கிறதுக்காக, நான் ஏன் ஊருக்கு போகணும்... நம்ம கட்சி தோத்து போகுதேங்கற கவலையோட வர்ற நம்ம ஆளுங்களுக்கு ஆறுதலும், தைரியமும் கூற வேணாமா? அதுவும், 20 நாளா, வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு இரவு, பகலா வேலை செய்தவனை பார்த்து பேசாம போனா எப்படின்னேன்... தோக்கற சமயம் தான் நாம அவங்களோட இருக்கணும்...' என்றார் காமராஜர்.அவ்வாறே, தேர்தல் தோல்வியினால் சோர்ந்து போய், தன்னை சந்திக்க வந்த தொண்டர்களுக்கு, ஆறுதல் கூறி, தேற்றினார் காமராஜர்.கடிதம் எழுதும் போது, உட்கார்ந்து எழுதுவதை விட, நின்றபடி எழுதிப் பாருங்கள்; அனாவசிய வார்த்தைகள் இல்லாமல், கடிதம் சுருக்கமாக முடிந்து விடும்!- அனுபவஸ்தர்.நடுத்தெரு நாராயணன்