உள்ளூர் செய்திகள்

திண்ணை!

'இருபதாம் நூற்றாண்டின் இந்திய நாயகர்கள்' நூலிலிருந்து: இங்கிலாந்து சென்று, சட்டம் படித்து, மும்பை திரும்பி, வழக்கறிஞரான முகமது அலி ஜின்னா, ௧௯௧௫லேயே ஒருநாளைக்கு, 1,100 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தார். யாராவது அவரிடம் வழக்கறிஞர் கட்டணத்தில் சலுகை கேட்டால், அவரை ஏளனமாகப் பார்த்து, 'நான் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார்; நீங்கள் அந்தக் காரில் பயணம் செய்ய வேண்டும் என்றால், அதற்குரிய விலையைக் கொடுக்கத் தான் வேண்டும்...' என்பார்.அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள், அவரிடம் சட்ட ஆலோசனை கேட்டபோது, 'என் உதவியாளரிடம் பணம் கட்டி விட்டு வாருங்கள்...' என்று அவர்களைத் திருப்பி அனுப்பினார். அவரது உதவி வழக்கறிஞர்களுக்கு (ஜூனியர்ஸ்) கூட, அவர் உதவி செய்ததில்லை என்று எழுதியுள்ளார், சட்ட நிபுணரும், வெளியுறவு அமைச்சருமான எம்.சி.சுக்லா. சம்பாதித்த பணத்தை எல்லாம் டீ எஸ்டேட், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து விடுவார்.மும்பையில் கோடீஸ்வரர்கள் வாழ்ந்த, மலபார் மலைப் பகுதியில் மாளிகையில் வாழ்ந்து வந்த ஜின்னா. பார்சி இனத்தைச் சேர்ந்த ரூத் என்ற, 19 வயதுப் பெண்ணை தன், 42வது வயதில் மணமுடித்தார். இந்த தம்பதியின் மகள் தினா, தந்தை ஜின்னாவின் விருப்பத்திற்கு மாறாக, பார்சி இன கிறிஸ்தவரை மணந்தார். சீக்கிரமே இறந்து போனார் ரூத். ஏமாற்றம் அடைந்த கணவராகவும், வெறுத்துப் போன தந்தையாகவுமே அவரது இல்லற வாழ்க்கை இருந்தது.அவரை முஸ்லிம் பழமைவாதி என்று கூற முடியாது. அரசியலுக்காக, முஸ்லிம்களின் ஆதரவைப் பெற முஸ்லிம்களுக்காகப் பேசினார். 1938ல் முஸ்லிம் லீக் மாநாட்டுக்காக, ஜின்னா, பாட்னாவுக்கு, சென்றிருந்தபோது, அவருடன் வந்தவர்கள், சுருக்கெழுத்தாளரான, பாலக்காட்டைச் சேர்ந்த ஆச்சாரமான பிராமணர், சமையல்காரரான, கோவாவைச் சேர்ந்த கொங்கணிக்காரர். கார் ஓட்டுபவராக, சீக்கிய சர்தார். பாதுகாவலர், கூர்க்கா இனத்தவர். அவரது குடும்ப டாக்டர், பார்சி. முஸ்லிம் லீக் கட்சி பத்திரிகையான, 'விடியல்' ஆசிரியரான கேரள கிறிஸ்தவரான போத்தான் ஜோசப்!தெற்கே, திராவிட நாடு கேட்டதைப் போல, எங்கே கிடைக்கப் போகிறது என்று எண்ணி, அரை மனதோடு, 'பாகிஸ்தான் தனிநாடு வேண்டும்...' என்றார்; வெள்ளைக்காரர்கள் கொடுத்து விட்டனர்.சுதந்திர இந்தியாவின் பிரதமர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டு, பாகிஸ்தான் பிரிவினையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டபோது அதை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளினார் என்பது, பலர் அறியாத உண்மை.இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும் என்று, கடுமையாகப் போராடினார் காந்திஜி. அவரைப் பின்பற்றி தலைவர்களும், தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் சிறை சென்று, துன்புற்று, சுதந்திரத்தை வாங்கித் தந்தனர். ஆனால், நகத்தில் அழுக்குப் படாமல், அணிந்திருக்கும் ஆடம்பர ஆடையின் மடிப்புக் கூட கலையாமல் அறிக்கை விடுத்து, முரண்டு பிடித்து, ஆங்கிலேயரின் கைப்பாவையாகி, பாகிஸ்தான் என்ற தனி நாட்டையே உருவாக்கி விட்டார், முகமது அலி ஜின்னா.தனி நாடு கேட்டு பேராசையுடன் அதைப் பெற்ற அவர், அதன் தலைமைப் பதவியை ஓராண்டுக்கு மேல் அனுபவிக்க முடியவில்லை. அவருக்கு தொண்டையில் புற்று நோய் இருந்ததைக் கூட, அவரது மருத்துவர்களிடமிருந்து மறைத்தார். அவரது சகோதரி பாத்திமா மட்டுமே அதை அறிவார். மாறி வரும் குரலையும், அழிந்து வரும் உடலையும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த ஜின்னா, செப்., 10 - 1948ல் காலமானார்.மறைந்த எழுத்தாளர் வெ.சாமிநாத சர்மா, 'அவள் பிரிவு' என்ற நூலில், தன் மனைவியை நினைவு கூர்ந்து எழுதியது: மணப்பந்தலில் குனிந்த தலையுடன் உட்கார்ந்திருந்தாள், மங்களம். அவள் கழுத்தில், தாலி கட்ட வேண்டிய வேளை வந்தது. அதற்காக, நான் உடல் குனிந்தேன். அப்போது பக்கத்திலிருந்த புரோகிதர், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளுமாறு எங்களிடம் கூறினார். அப்படியே தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தாள் மங்களம்; நானும் அவளைப் பார்த்தேன். ஒரே சமயத்தில், கண்களில் சந்திப்பு, முகங்களில் புன்சிரிப்பு. இந்தப் புன்சிரிப்பு ஏன் ஏற்பட்டது?இளமையின் குறும்போ, காதலின் வித்தோ, இரண்டு ஆன்மாக்களை இணைத்து வைத்த பாலமோ யார் அறிவார்! பிற்காலத்தில், நாங்கள் ஏதாவது வேடிக்கையாகப் பேசும் சமயங்களில், 'நீ ஏன் அன்று சிரித்தாய்?' என்று மங்களத்தைக் கேட்பேன். உடனே, அவள், 'நீங்கள் ஏன் சிரித்தீர்கள்?' என்று, என்னைத் திருப்பிக் கேட்டு, பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவாள். இந்தப் புன்சிரிப்பு மட்டும், அவளை விட்டு அகன்றதே இல்லை.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !