உள்ளூர் செய்திகள்

திண்ணை!

அருணா பதிப்பக வெளியீடான, 'பிரபலங்கள் பத்து, சுவையான சம்பவங்கள் நூறு' என்ற நூலிலிருந்து: ஒருமுறை, தஞ்சை மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமையான கோவில் ஒன்றை பார்வையிட சென்றார், காமராஜர். சிதிலம் அடைந்திருந்தாலும், அக்கோவிலின் கட்டுமானம், அவரை வியக்க வைத்தது. உடன் வந்த அதிகாரிகளிடம், 'இக்கோவிலை கட்டியது யாரு?' எனக் கேட்டார்.அவர்களுக்கு அதுபற்றி தெரியாத தால், விழித்தனர்.உடனே, சிரித்தபடி, மேலே இருந்த, 'டியூப் லைட்'டை சுட்டிக் காட்டி, 'இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற, இந்த கோவிலை கட்டியவர் யாருன்னு தெரியல... ஆனா, ஒரு மாதம் கூட, ஒழுங்கா எரியாத இந்த, 'டியூப் லைட்'ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்களேன்...' என்று கூற, உடன் வந்தவர்கள், வாய்விட்டு சிரித்தனர்.அருணன் எழுதிய, 'வ.உ.சி., கடைசி காலத்தில் தடம் மாறினாரா...' என்ற நூலிலிருந்து: கடந்த,1908ல், 'திருநெல்வேலி விடுதலைப் போராட்டக் கிளர்ச்சி' பெரும் கலவரமாக வெடித்தது. அதன் விளைவாக, வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணியசிவாவும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டனர்.வழக்கு நடைபெற்றது. சென்னையில் இருந்த பாரதியார், திருநெல்வேலிக்கு வந்தார். நேரில் நிலைமையை ஆராய்ந்து, தன், 'இந்தியா' ஏட்டில் எழுதுவதே அவரது நோக்கம்.சிறையில், வ.உ.சி.,யை சந்தித்தது குறித்து, மே,2, 1908ல், 'இந்தியா' பத்திரிகையில் பாரதியார் எழுதியது: ஏப்ரல், 26, திங்கட்கிழமை காலை, பாளையங்கோட்டை ஜெயிலுக்கு போனேன். அங்குள்ள அதிகாரிகளின் அனுமதி பெற்று, உள்ளே சென்று, சிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்பிரமணிய சிவன் இருவரையும் கண்டு பேசினேன். முன்பு, தூத்துக்குடியில் அவர் பிரசங்கங்களை ஆற்றிய போது, ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டு, புகழ்ந்த காலத்தில் அவருடைய முகம் எவ்வளவு தேஜசுடன் விளங்கியதோ, அதே மாதிரி இப்போதும் இருக்கக் கண்டேன்.- என்று எழுதியிருந்தார்.பாரதியார் தன்னை சந்தித்தது பற்றி, வ.உ.சி., எழுதியது: ஆங்கிலேய அரசு, எங்களை சிறையில் தள்ளிய போது, பாரதியார் மற்றும் ஸ்ரீனிவாசாச்சாரி போன்ற சென்னை நண்பர்கள், திருநெல்வேலிக்கு வந்தனர். பின், பாளையங் கோட்டை சென்ட்ரல் ஜெயிலில், விசாரணைக் கைதிகளாக இருந்த என்னையும், நண்பர் சுப்பிரமணிய சிவா மற்றும் பத்மநாப ஐயங்காரையும் கண்டு, உரையாடினர்.நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய்; கனல் மூட்டினாய்!வாட்டி, என்னை மடக்கி சிறைக்குள்ளே மாட்டுவேன்; வலி காட்டுவேன்... எனத் துவங்கும் பாடலையும், சொந்த நாட்டிற் பிறர்க்கடிமை செய்தேதுஞ்சிடோம்; இனி, அஞ்சிடோம்!எந்த நாட்டினும், இந்த அநீதிகள் ஏற்குமோ, தெய்வம் பார்க்குமோ! எனும் துவங்கும் பாக்களை பாடியதுடன், ஆங்கிலேய அரசால் பிரசுரிக்க கூடாது என்று விலக்கப்பட்ட வேறு சில பாடல்களையும், பாடி மகிழ்ந்தார், பாரதியார்.— ஒரு போராளியை பற்றி பாட, கூடவே, ஒரு மகா கவிஞன் தோழனாக இருந்தால், அது பெரிய பாக்கியம்; அப்பேறு, வ.உ.சி.,க்கு கிடைத்தது. 'அண்ணாவின் உரைகள்' நூலிலிருந்து...: இந்தியை ஆட்சிமொழியாக்குவது பற்றி பார்லிமென்ட்டில் காரசாரமாக விவாதம் நடந்தது.'இந்தியாவிலேயே அதிக மக்கள் பேசும் மொழி இந்தி தான்; எனவே, இந்தியை ஆட்சி மொழி ஆக்குவது தான் சரியாக இருக்கும்...' என்று கூறினார், பார்லிமென்ட் உறுப்பினர் ஒருவர்.உடனே, அண்ணாதுரை எழுந்து, 'இந்தியாவின் தேசிய பறவையாக மயிலை ஏன் அறிவித்தீர்கள்... அது அழகான பறவை என்பதால் தானே... எண்ணிக்கையில் அதிகமான பறவை என்று பார்த்தால், இந்தியாவில் காக்கைகள் தான் அதிகமாக உள்ளன. அதற்காக, காகத்தை தேசிய பறவையாக அறிவிக்க முடியுமா...' என்று பேசி, பலத்த கரவொலியை பெற்றார்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !