உள்ளூர் செய்திகள்

திண்ணை!

எம்.வி.வெங்கட்ராம் எழுதிய, 'சுப்பிரமணிய பாரதியார்' நூலிலிருந்து: பாரதியாருக்கு, கிருஷ்ணசாமி செட்டியார் என்று ஒரு நண்பர். இவர், புதுச்சேரி முத்தியாலுபேட்டையில் வசித்து வந்தார். குட்டையான, இரட்டை நாடி தேகமும் உறுதியான உடலும் கொண்ட செட்டியார் எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுவார். இவர் உடலுறுதியை கண்டு, இவருக்கு வெல்லச்சு (அச்சு வெல்லம்) செட்டியார் என, செல்லப் பெயர் வைத்தார், பாரதியார்.நல்ல ரசிகரான செட்டியார், பாரதியார் வீட்டுக்கு அடிக்கடி வருவார்; அவருக்கு தன் பாடல்களை படித்துக் காண்பிப்பார் பாரதியார். அவரும் எவ்வளவு நேரம் என்றாலும் அமைதியாக இருந்து, ரசித்து விட்டு செல்வார்.ஒருநாள், பாரதியாரை பார்க்க வந்தார், செட்டியார். அவருக்கு பாரதியார் ஒரு கதை சொல்லத் துவங்கினார்...'இரண்டு பேர் காட்டு வழியாக போய் கொண்டிருந்தனர். ஒருவர், விவசாயி; மற்றொருவர், செட்டியார். அவ்வழியில் திருடர் பயம் அதிகம். இருட்டும் முன், காட்டை கடந்து விட வேண்டும் என்று நினைத்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக, அவர் காட்டை அடைந்த போது, இருட்டி விட்டது...' என்று கூறியவர், கதையை நிறுத்தி, 'ஏன் செட்டியாரே... கதை சரியாக செல்ல வேண்டுமானால், இந்த சமயம் திருடர்கள் வரலாமா அல்லது சிறிது தூரம் போனதும் வரலாமா?' என்று கேட்டார் பாரதியார்.'எந்த சமயத்தில் வந்தாலென்ன... நான், பாரதியாரோடு பயணம் செய்கிற செட்டி; எனக்கு என்ன பயம்...' என்றார், செட்டியார்.'அப்படி சொல்லப்பா என் தங்கமே...' என்று நகைத்து, கதையை தொடர்ந்தார் பாரதியார்...'திருடர்கள், விவசாயியை அடித்து, அவரிடம் இருந்ததை எல்லாம் எடுத்துக் கொண்டனர். செட்டியார் பார்த்தார்... அப்படியே பேச்சு, மூச்சு இல்லாதவர் போல் படுத்து விட்டார். திருடர்கள் செட்டியாரை தட்டி பார்த்து, 'கட்டை கிடக்கிறது...' என்றனர்.உடனே, 'உங்க வீட்டு கட்டை பத்து ரூபாய் பணத்தை மடியில் கட்டியபடி படுத்துக் கிடக்குமோ...' என்றார், செட்டியார் கோபமாக!' என்று கதை கூறிய பாரதியார், 'என்ன செட்டியாரே... கதை சரி தானே...' என்றார்.'கதை எப்படி இருந்தாலும், இப்போது என்னால் முடிந்தது இது தான்...' என்று சொல்லி, மடியிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து பாரதியாரிடம் கொடுத்தார், வெல்லச்சு செட்டியார். இப்படி, பாரதியாருக்கு அவ்வப்போது, பண உதவி செய்து வந்தார், வெல்லச்சு செட்டியார். சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக வெளியீடான, 'தண்டமிழ் சான்றோர்' நூலிலிருந்து: பிரபல நாவலாசிரியை வை.மு.கோதைநாயகி, பள்ளி சென்று படிக்கவில்லை. காரணம், ஐந்தரை வயதிலேயே, சென்னை, திருவல்லிக்கேணியில் வசித்த, வை.மு.சீனிவாச அய்யங்காரின் மகன், ஒன்பது வயது வை.மு.பார்த்தசாரதிக்கு, திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.வைத்த மாநிதி என்பது, அவரது கணவரது குலதெய்வமான, திருக்கோளூர் பெருமாளின் பெயர். 'முடும்பை' என்பது, அவர்களின் பூர்வீக ஊர். வைத்த மாநிதி மற்றும் முடும்பை ஆகியவற்றின் முதல் எழுத்துக்கள் தான், வை.மு.பார்த்தசாரதியின் குடும்ப அடையாளமாகியது; அதனால், கோதைநாயகியும், வை.மு.கோதைநாயகி ஆனார்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !