உள்ளூர் செய்திகள்

திண்ணை!

'ரீடர்ஸ் டைஜஸ்ட்' ஆங்கில இதழிலிருந்து: உடற்பயிற்சி பற்றிய தவறான கருத்துகள் பல நம்மிடையே நிலவி வருகின்றன. அவற்றில் சில:உடற்பயிற்சி பசியை தூண்டும்: தவறு; உடற்பயிற்சி செய்வதாலோ, ஓட்டம், டென்னிஸ் மற்றும் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுவதாலோ பசி அதிகரிக்காது; சொல்லப் போனால், பசியை குறைக்கும். உடற்பயிற்சி செய்வதால், நம் உடலுக்கு அதிக புரோட்டீன் தேவை: தவறு; கடினமான பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களுக்கும், சாதாரணமானவர்களுக்கும் ஒரே அளவு தான் புரோட்டீன் தேவை.உடற்பயிற்சி ஊளைச் சதையை குறைக்கும்: அமெரிக்க மருத்துவ கழக மருத்துவர்களின் கூற்றுப்படி, ஊளைச் சதையை குறைக்க உடற்பயிற்சி, மாத்திரை மற்றும் கருவிகள் போன்றவற்றை நம்பி பயனில்லை. டயட்டில் இருப்பதன் மூலம், ஓரளவு ஊளைச் சதையை குறைக்கலாம்.உடற்பயிற்சி கொழுப்பை தசையாக மாற்றுகிறது: கொழுப்பை, எரிபொருளாக பயன்படுத்துகிறது, நம் உடல். உடற்பயிற்சி மூலம், கொழுப்பை ஓரளவு இழக்க முடியுமே தவிர, அக்கொழுப்பை தசையாக மாற்ற இயலாது. உடற்பயிற்சியின் மூலம், நம் உடலில் உள்ள தசைகள், இறுக்கம் அடைகின்றன.உடற்பயிற்சி செய்யும் போது, தண்ணீர் குடிக்கக் கூடாது: தவறு; அப்போது தான் உடலுக்கு அதிக நீர் தேவை. உடலில் உள்ள திசுக்களுக்கு தண்ணீர் கிடைக்காவிடில், அவை களைப்படைந்து, வலுவிழந்து விடும்.உடலில், குறிப்பிட்ட சில பகுதிகளில் எடையை குறைக்க, உடற்பயிற்சி அவசியம்: உடலில் உள்ள சதை குறையும் போது, ஓரிடத்தில் மட்டும் குறைவதில்லை; அனைத்து பாகங்களிலும் சமமாகவே குறையும். உடலில் குறிப்பிட்ட பாகங்களுக்கான பயிற்சிகள், அப்பகுதிகளை வலிமையாக்கும்.தோழமை பதிப்பக வெளியீடான, 'நெஞ்சில் நிலைத்தவர்கள்' நூலில், 'கலைமகள்' பத்திரிகை பொறுப்பாசிரியர், கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் எழுதியது:கம்பன் கழகப் பட்டிமன்றத்திற்கு, நடுவராக, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீதிபதி, மு.மு.இஸ்மாயில் உடல் நலக் குறைவால், அப்பொறுப்பை ஏற்க முடியவில்லை. இந்நிலையில், கி.வா.ஜ., ஏற்று, தன் துவக்க உரையில் பேசியது: இலங்கை மீது போர் துவக்குவதற்கு முன், ராவணனிடம், தூது அனுப்ப வேண்டும் என்று கூறுகிறார், ராமபிரான். அதற்கு, லட்சுமணன் மறுத்தாலும், அதுதான், நீதிநெறிமுறை என்பதால், எல்லாரும் ஏற்கின்றனர். பின், 'தூதுவனாக, யாரை அனுப்புவது...' என்ற கேள்வி எழுகிறது.'அனுமனை அனுப்பலாம்...' என சிலர் கூற, அனுமனை தவிர, ராவணனிடம் சென்று மீளக் கூடிய வீரர் வேறு யாருமில்லை என்று, எதிரிகள் நினைத்து விடக்கூடும் என்று எண்ணி, அனுமனை தூது அனுப்ப விரும்பவில்லை, ராமன். அப்படியானால், வேறு யாரை அனுப்புவது... இந்த இடத்தில் தான், 'எதிரிகள் போரில் இறங்கினாலும், மீள வல்லவன்...' என்ற முடிவில், அங்கதனை தூது அனுப்ப நினைக்கிறார், ராமன்.இதைக் கேட்டதும், அளவில்லா ஆனந்தம் அடைகிறான், அங்கதன். அனுமனுக்கு அடுத்தபடியாக, தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதில், அவனுக்கு பெருமையும், பெருமிதமும்!இதை,மாருதி அல்லன் ஆகின் நீஎனும் மாற்றம் பெற்றேன்யாரினி என்னோடு ஒப்பார்என்பதோர் இன்பமுற்றான்! - என்று பாடுவான், கம்பன். அதுபோல், இன்றைய பட்டிமன்றத்திற்கு, இஸ்மாயில், நடுவராக இருக்க முடியாத நிலையில், அவருக்கு அடுத்தபடி, எனக்கு நடுவர் பதவி கிடைத்துள்ளது, என்றார், கி.வா.ஜ.,இதன் மூலம், கி.வா.ஜா.,வின் தன்னடக்கம், எளிமை, உவமை நயம், நினைவாற்றல் மற்றும் கம்ப ராமாயணப் பயிற்சி என, எல்லாவற்றையும், தெரிந்து கொள்ளலாம்!நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !