உள்ளூர் செய்திகள்

திண்ணை!

ஜெயகாந்தன் எழுதிய, 'நினைத்துப் பார்க்கிறேன்' நூலிலிருந்து: 'ஆனந்த விகடன்' இதழ் ஆசிரியர், எஸ்.எஸ்.வாசனை, இருமுறை சந்தித்திருக்கிறேன். அப்போது, அவர் என்னிடம், 'இந்த உலகம் உங்களை புரிந்து கொள்ளாவிடில், நான் ஆச்சரியப்பட மாட்டேன்; இந்த உலகத்தை, நீங்கள் புரிந்து கொள்ளாமல் போய் விட்டால் ஆச்சரியம் மட்டுமல்ல, வருத்தமும் அடைவேன்...' என்று, ஆங்கிலத்தில் அவர் சொன்ன வார்த்தைகளை, இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.நான் எடுத்த, யாருக்காக அழுதான் என்ற சினிமாவை, காமராஜருக்கு போட்டு காட்ட வேண்டும் என்பதற்காக, அவரை அழைக்கப் போயிருந்தேன். என்னை, காமராஜருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார், நண்பர் பாலதண்டாயுதம். மறுநாளே அப்படத்தை வந்து பார்த்து, பாராட்டியவர், 'இம்மாதிரி படத்தை எடுக்க, குறைந்த தொகை தானே செலவு ஆகியிருக்கும்... இந்த மாதிரி படங்களை அரசாங்கமே வாங்கி, ஜனங்களுக்கு இனாமா போட்டு காட்டணும்; அப்பத்தான் ரசனை மாறும். ரசனை கெட்டுப் போனது தான், எல்லா கெடுதல்களுக்கும் காரணம்...' என்றார்.இந்த சாதாரண வாசகங்களை ஆழ்ந்து யோசித்தால், பல விஷயங்கள் புரியும்.அன்று, காமராஜரோடு, ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் படம் பார்த்தார். அவர் படத்தை பார்த்த பின், 'படம் ரொம்ப நல்லா இருக்கு; வலுவான கதை. கமர்ஷியலாக எடுத்திருந்தால் நன்றாக ஓடியிருக்கும்...' என்று கூறி, 'இந்தப் படத்தை, நீங்க ஜனாதிபதி பரிசுக்கு அனுப்பி, வெளிநாடுகளில் திரையிடுவதற்கு என்று மட்டும் வைத்து, தமிழகத்திற்கான உரிமையை எனக்கு கொடுங்க; ஸ்டார்களை போட்டு, கமர்ஷியலாக எடுக்கலாம்...' என்று, யோசனை தெரிவித்தார்.இந்த யோசனையை நான் ஏற்காமல், அவருக்கு நன்றி தெரிவித்ததோடு விட்டு விட்டேன். இப்போது, 'அப்படி செய்திருக்கலாமோ...' என்று, நினைக்கிறேன். 'சிரிக்க சிந்திக்க சின்னச் சின்னக் கதைகள்' நூலிலிருந்து: ரஷ்ய மொழி தெரியாத வக்கீல் ஒருவர், ரஷ்யாவுக்கு சென்றிருந்தார். அங்குள்ள நீதிமன்றங்களில், எப்படி விசாரணை மற்றும் விவாதங்கள் நடக்கின்றன என்பதை காண, அவருக்கு ஆவல். அதேநேரம், தனக்கு ரஷ்யமொழி தெரியாது என்று காட்டிக் கொள்ளவும், அவருடைய தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அதனால், தனக்கு அம்மொழி தெரியும் என்பதை காட்டிக் கொள்ள வேண்டுமென்று நினைத்தார்.ஒருமுறை, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. குழந்தையுடன், ஒரு பெண் கூண்டில் நின்றிருந்தாள்; வக்கீல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அங்கு நடக்கும் பேச்சு வார்த்தைகள் எல்லாம் தமக்கும் தெரியும் என, காட்டிக் கொள்ள நினைத்த வக்கீலுக்கு, ஒரு யுக்தி புலப்பட்டது.தனக்கு முன் அமர்ந்திருந்த பாதிரியார் முகத்தில், என்னென்ன பாவனைகள் வருகிறதோ, அதேபோல, தாமும் செய்தால் தன்னை பார்ப்பவர்கள், தனக்கும் ரஷ்ய மொழி தெரியும் என்று நினைப்பர் என்று எண்ணி, அப்படியே செய்து வந்தார். நடுவில் ஒருமுறை, பாதிரியார், எழுந்து நின்று, கையை உயர்த்தினார்; அதேபோல, இவரும் எழுந்து கையை உயர்த்தினார். அங்கிருந்த எல்லாரும், இருவரையும் பார்த்து திடுக்கிட்டனர். புரியாமல் திரும்பிப் பார்த்த பாதிரியார் கோபம் கொண்டு, 'பளார்' என்று, இவரது கன்னத்தில் அடித்து விட்டார். விஷயம் பின் தான் தெரிந்தது. 'அக்குழந்தையின் தகப்பனார் யார்' என்று, நீதிபதி கேட்டதற்கு தான், பாதிரியார் எழுந்து நின்றார் என்று!மு.வரதராசன் எழுதிய, 'திரு.வி.க.,' நூலிலிருந்து: 'நினைவாற்றல் வேண்டுமானால், இளைஞர்கள், வல்லாரைக் கீரையும், தூதுவளை கீரையும் உண்ணுதல் நல்லது...' என்று, அறிவுரை கூறுவார், திரு.வி.க., ஆயிரம் பக்கங்கள் கொண்ட தம் வாழ்க்கை குறிப்பை, தன், 61ம் வயதில், நினைவிலிருந்தே எல்லா செய்திகளையும் தொகுத்து கோர்வையாக எழுதினார், திரு.வி.க., நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !