உள்ளூர் செய்திகள்

திண்ணை!

சின்ன அண்ணாமலை எழுதிய, 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' நுாலிலிருந்து: 'வங்காள கவர்னராக, ராஜாஜி, 1947-ல் பதவி ஏற்றபோது, அந்த வரவேற்பு விழாவில் என்னையும் பேச வைத்தனர். நான் தயங்கிய போது, ராஜாஜி, 'சும்மா தமிழிலேயே பேசுங்க... தி.கே.சி., ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்...' என்றார். பேச ஆரம்பித்தேன்... 'ராமபிரானுடைய ஆண்மையும், கிருஷ்ணருடைய ராஜதந்திரமும், புத்தருடைய துாய்மையும், சிபி சக்கரவர்த்தியின் தியாகமும், ராமானுஜரின் மத பக்தி மற்றும் வள்ளுவரின் வாய்மையும் சேர்ந்து உருவெடுத்து வந்திருப்பவர், ராஜாஜி. 'ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் மூலம் இந்து மதத்திற்கு புத்துயிர் உண்டாயிற்று. விபின் சந்திரபால், சென்னைக்கு வந்து ஆறு சொற்பொழிவுகள் ஆற்றியதன் மூலம், தமிழகத்தில் தேச பக்தியை ஊட்டினார். சித்தரஞ்சன் தாஸ், நாடு முழுவதும் கிளர்ச்சியை உண்டாக்கினார். ராஜாராம் மோகன் ராய், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் நேதாஜி முதலானவர்களால் தமிழகத்துக்கு எவ்வளவோ நன்மை ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் எல்லாம் வங்காளத்தில் பிறந்தவர்கள். அப்பேர்பட்ட வங்காளத்திற்கு நாம் என்ன கைம்மாறு செய்யலாம், செய்ய முடியும் என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். 'ஆனால், அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக, எங்கள் ராஜாஜியை, உங்களுக்கு கவர்னராக கொடுக்கிறோம். ராஜாஜியை கவர்னராக அடைய, இந்த வங்காளம் நுாறு ஆண்டு காலம் தவம் செய்திருக்க வேண்டும்...' என்று நான் கூறியபோது, சபையினரிடையே, 'ராஜாஜிக்கு ஜே...' என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.'சுவையான கதைகள்' நுாலிலிருந்து: கிராமத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவரை காண வந்திருந்தார், ஒருவர். சுவரில் ஒரு பெரிய துப்பாக்கி மாட்டப்பட்டிருப்பதை கண்டார். 'ஏன், இவ்வளவு பெரிய துப்பாக்கி வைத்திருக்கிறீர்கள்?' 'கிராமத்தில், பல பேருக்கு நான் வட்டிக்குப் பணம் கொடுக்கிறேன். அவர்களுக்கு என்னிடம் பயம் இருந்தால் தான், ஒழுங்காக வட்டிப் பணத்தைக் கொண்டு வந்து கொடுப்பர். அதற்காகத் தான் இந்தத் துப்பாக்கி...' என்றார். 'உங்கள் கிராமத்து ஜனங்கள் எல்லாம் நல்லவர்கள் தானே?' 'ஆமாம்!' 'அப்புறம் எதற்கு துப்பாக்கி?' 'அவர்கள், தொடர்ந்து நல்லவர்களாக இருக்க வேண்டுமல்லவா?' என்று செல்வந்தரிடமிருந்து பதில் வந்தது.சி.கணேசன் எழுதிய, 'அண்ணாவின் அரசியல்' நுாலிலிருந்து: கடந்த, 1967ல் நடந்த பொதுத் தேர்தலில், தி.மு.க., அடைந்த வெற்றிக்கு காரணமே அண்ணாதுரை தான். 51 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுகளை பெற்ற காங்கிரஸ், ஆட்சியைப் பிடித்ததற்கு காரணம், காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிப் போனதால் தான் என்பதை புரிந்து கொண்ட அண்ணாதுரை, அந்த கணக்கையே ஆயுதமாக்கி, காங்கிரசைத் தாக்கி, வீழ்த்தினார். சுதந்திரா, முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், மார்க்சிஸ்ட்டுகள், பிரஜா சோஷலிஸ்ட், தமிழரசு கழகம் ஆகிய கட்சிகள், தி.மு.க.,வின் தலைமையில், காங்கிரஸ் எதிர்ப்பு கூட்டணியாக உருவாக்கினார், அண்ணாதுரை. இந்தக் கூட்டணி அமைவதற்கு, அண்ணாதுரைக்கு பெரும் துணையாக இருந்தார், சுதந்திரா கட்சியின் தலைவரான ராஜாஜி. கூட்டணி தான் பெரும்பான்மை பலம் பெறுமே தவிர, தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று நினைத்தார், ராஜாஜி. கூட்டணி ஆட்சி அமைந்தால், சுதந்திரா கட்சி, தமிழகத்தில் வேரூன்ற வாய்ப்பு ஏற்பட்டு, தமிழக அரசியலில் தனக்கு புனர்வாழ்வு கிடைக்கும் என்றும் நம்பினார், ராஜாஜி. ஆனால், தமிழக வாக்காளர்கள், தி.மு.க.,வுக்கு தனிப்பெரும்பான்மை அளித்து, ராஜாஜியின் வியூகத்தைப் பொடியாக்கினர். தி.மு.க., பெரும்பான்மை பெறும் என்பதில் அண்ணாதுரைக்கும் சந்தேகம் இருந்திருக்க வேண்டும். இல்லையெனில், தென் சென்னை லோக்சபா தேர்தலில், அவர் போட்டியிட்டிருக்க மாட்டார்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !