திண்ணை!
சின்ன அண்ணாமலை எழுதிய, 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்ற நுாலிலிருந்து: தமிழிசை இயக்கம் சுறுசுறுப்பாக நடந்து வந்த நேரம். தேவகோட்டையில், ஒரு கல்யாண வீட்டில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் கச்சேரி. வெகுநேரம் அவர் தெலுங்கு கீர்த்தனைகளையே பாடிக் கொண்டிருந்தார். தமிழிசை இயக்கக் காரியதரிசியின் செயலரான நான், 'தயவுசெய்து தமிழில் பாடவும்' என்று சீட்டு எழுதி, அவரிடம் கொடுத்தேன். பாடுவதாக சைகை செய்தார். வெற்றி பெருமிதத்துடன், அவர் பாடப்போகும் தமிழ் பாட்டை எதிர்பார்த்திருந்தேன். பாட ஆரம்பித்தார் அரியக்குடி, அதுவும் என்னை பார்த்தே பாட ஆரம்பித்தார்:யாரடா குரங்கு நீ -இங்கே வந்தயாரடா குரங்கு நீ- அருணாசல கவிராயர் கீர்த்தனை தான்.நான் அரியக்குடியை முறைத்து பார்த்தேன். 'இது தமிழ் பாட்டு தானே...' என்று சொல்லி, அதை பாடி முடித்தார். அந்த பாட்டு முடிந்ததும், என்னை அருகில் வரச்சொல்லி, 'கோபப்படாதீர்கள்... சும்மா தமாஷ் செய்தேன். இனி, பூராவும் தமிழ் பாட்டு தான்...' என்று சொல்லி, சுமார் இரண்டு மணி நேரம் தமிழிசையை முழக்கி, சபையை மெய்மறக்க செய்தார்.கச்சேரி முடிந்ததும், அவருக்கு, நன்றி சொன்னேன். அரியக்குடி என்னை பார்த்து, 'இசைக்கு மொழி அவசியமா?' என்று கேட்டார். 'அவசியம் தான்...' என்றேன்.'எதனால்?' என்றார்.'நம் முன்னோர், இசையில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனரே...' என்றேன். 'எப்படி?' என்றார். 'இசைதான் முக்கியம் என்றால், நம் முன்னோர் வாய்ப்பாட்டுக்காரர்களை நடுவில் உட்கார வைப்பரா? ஒரு சாதாரண வித்வான் பாடினாலும், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு மணி போன்ற பெரியவர்கள், பக்கவாத்தியமாகத்தானே உட்கார்ந்து இருந்தனர். இசைதான் முக்கியம்; மொழி முக்கியம் இல்லை என்றால், ராஜமாணிக்கம் பிள்ளையை தானே நடுவில் வைக்க வேண்டும். இதிலிருந்தே மொழி முக்கியமென்று தெரியவில்லையா?' என்றேன். அன்றிலிருந்து, அரியக்குடி, நிறைய தமிழ் பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.'ஈ.வெ.ரா., - கருணாநிதி கார் பயணங்களில்' நுாலிலிருந்து, திருச்சி செல்வேந்திரன்: ஈ.வெ.ரா.,வை பேட்டி காண, வெளிநாட்டு பெண்மணி ஒருவர் வந்திருந்தார். ஈ.வெ.ரா., நாகர்கோவிலுக்கு காரில் புறப்பட்டு விட்டார்; வண்டியிலேயே நேர்காணல் நடந்தது.வைக்கம் போராட்டம் நடந்த விவரத்தை, அந்த பெண்மணிக்கு நன்கு விளக்கி சொல்வதற்காக, ஒரு பெரிய காகிதத்தை விரித்து வைத்து, தன் கையாலேயே பேனாவால், கோவில், அதன் சுற்றுப்புறம், சாலைகள், விழாவுக்காக பந்தல் போடப்பட்ட இடம் மற்றும் போராட்டக்காரர்கள் நின்ற இடம் என, எல்லாவற்றையும் ஒரு வரைபடம் போல வரைந்து காட்டினார்.கலந்து கொண்ட முக்கியமானவர்களின் பெயர், தொழில், ஜாதி ஆகியவற்றையும் சொன்னார்.அவர், படம் வரைந்த முறையை பார்த்து, ஆச்சரியப்பட்ட அந்த ஐரோப்பிய பெண்மணி, 'இது நடந்தது எத்தனை ஆண்டுகளுக்கு முன்...' என்று கேட்டார். 'சுமார், 55 ஆண்டுகளாகி இருக்கலாம்...' என்றார், ஈ.வெ.ரா.,'ஓ, மை காட்...' என்று வியந்த அந்த பெண்மணி, ஈ.வெ.ரா., கையைப் பிடித்து குலுக்கி, மகிழ்ச்சியை தெரிவித்ததோடு, பிடித்த கையை நீண்ட நேரம் விடவில்லை.பின்புறம் இருந்த, மனைவி மணியம்மை, ஈ.வெ.ரா.,வை பார்த்து, 'சரி... சரி... அந்த பொண்ணு கையை விடு...' என்றார்.ஈ.வெ.ரா.,வும் விடாப்பிடியாக, 'என்னம்மா செய்யறது... அது, உட மாட்டேங்குது... உனக்கு ஏன் பொறாமை...' என்றார், கேலியாக.மணியம்மை, 'ஆமா... அது விட்டாலும், உனக்கு விட மனசில்லையே...' என்று கேலி தொடர, வண்டியே கொஞ்ச நேரம் மகிழ்ச்சியில் குலுங்கியது.நடுத்தெரு நாராயணன்