உள்ளூர் செய்திகள்

திண்ணை!

மகாராஜன் எழுதிய, 'ஏறு தழுவுதல்' என்ற நுாலிலிருந்து: வேளாண் சார்ந்த உழவு குடிகள், ஒவ்வோர் ஆண்டும், மாடு தழுவல் சடங்கை கண்டிப்பாக நிகழ்த்த வேண்டும். இது நடக்காவிட்டால், தீங்கு நேரும், மழையின்றி போகும், பஞ்சம் வரும் என்பது, உழவு குடிகளின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.மாடு தழுவல் எனும் நிகழ்வானது, சடங்காய் மட்டும் இல்லாமல், தமிழினத்தின் இன்னுமொரு பண்பாட்டு விழாவாகவும் பரிணமித்து வந்திருப்பதை காண முடிகிறது. அவ்வகையில், மாடு தழுவல் குறித்த தொல்லியல், இலக்கணம், இலக்கியம் மற்றும் கலை சார்ந்த ஆதாரங்களும் நிரம்ப உள்ளன.சிந்துவெளி என்றழைக்கப்படுகிற மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் பண்பாட்டு தொல்லியல் அடையாளத்தை உறுதிபடுத்தியுள்ளன. 'சிந்துவெளியில் மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது, ஏறு தழுவுதலை குறிக்கும் சின்னம்...' என்கிறார், தொல்லியல் அறிஞர், மறைந்த ஐராவதம் மகாதேவன்.உழவில் பங்கேற்கும் ஏர் மாடுகளை தவிர, அதில் பங்கேற்காத காளை மாடுகளும் உண்டு. இவை, பொலி காளைகள் எனப்பட்டன.ஏறு தழுவல் என்பது, இன்னொரு வகையில், ஒரு பாவனை விளையாட்டு தான். மாடும், மனிதரும் இரு வேறு உயிர்ப்பான உறவுகள். மாடுகளை குறித்து மனிதரும், மனிதரை குறித்து மாடுகளும் இணக்கத்தோடும், பரிவோடும் புரிந்தே வைத்துள்ளனர். அதனால் தான் இரு தரப்பும், தம் வீரத்தை, விளையாட்டாக காட்டிக் கொள்கின்றன. வெல்வதும், தோற்பதுமான பாவனைகள், தழுவல்களோடு முடிந்து போகின்றன.செ.ஜெயக்கொடி எழுதிய, 'சின்ன சின்ன செய்திகள் -சிறகடிக்கும் செய்திகள்' நுாலிலிருந்து: முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆருக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் வந்த, 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...' எனும் பாடலைக் கேட்பார்.இந்த பாடல் பற்றி, ஒரு சமயம், எம்.எஸ்.வி.,யிடம், 'இவ்வளவு துடிப்புமிக்க மந்திர சக்தி உடைய மெட்டை, எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள்...' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.,'அது, அபூர்வமோ அல்லது என் அரிய கண்டுபிடிப்போ அல்ல... அனைவருக்கும் தெரிந்த மெட்டு தான், 'ரகுபதி ராகவ ராஜாராம்...' என்ற பஜனையின் இழைகளை எடுத்து, ஒரு கட்டை சுருதியில், ஒரு புது நெசவு செய்தேன்... அது தான், 'அச்சம் என்பது மடமையடா' பாடல்...' என்றார், எம்.எஸ்.வி.,ஜெயகாந்தன் எழுதிய, 'நினைத்துப் பார்க்கிறேன்' எனும் நுாலிலிருந்து: ஒரு சினிமா வசனகர்த்தாவிடம், 18 வயதில், உதவியாளனாய் இருந்தேன். நான்கு நாட்கள் தான் வேலை செய்தேன். ஒரு காட்சிக்கு, அவர் என்னை வசனம் எழுத சொன்னார்; எழுதினேன். 'மிகவும் நன்றாக இருக்கிறது; விரைவில் முன்னுக்கு வந்து, தனியாகவே ஒரு படத்துக்கு வசனம் எழுத தயாராகி விடுவீர்கள்...' என்று, என்னை பாராட்டினார், அவர்.பின், படாதிபதிக்கு என்னை, அறிமுகம் செய்து வைத்தார், வசனகர்த்தா. அங்கே, காபி கொடுத்தனர். வசனகர்த்தாவுக்கு மட்டும் சிகரெட்டும் கொடுத்தார், படாதிபதி. நான் சிகரெட் பிடிக்கிற விஷயம், வசனகர்த்தாவுக்கு தெரியும். என் பாக்கெட்டில், சிகரெட் இருந்தது. எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன்.திரும்பி வரும்போது, 'உங்களுக்கு எல்லா திறமையும் இருக்கு. ஆனால், பழகத்தான் தெரியவில்லை. நீங்கள், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தீர்கள். முன்னுக்கு வருகிற வரை, கொஞ்சம் அடக்கமாக இருக்க வேண்டும்...' என்றார், வசனகர்த்தா.இந்த போதனையை, என்னால் தாங்க முடியவில்லை. 'பேன்ட் அணிகிறவன், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் தான், 'டீசன்ட்' ஆக இருக்கும். இல்லாவிட்டால், அசிங்கமாக இருக்கும்.'என், கால் மேல் காலை போட்டு உட்காராமல், எதிரே உள்ளவன் தலை மேலேயா போட்டு உட்கார முடியும்... இந்த மரியாதைகள் எல்லாம் எனக்கு வராது. அடக்கம் எல்லாருக்கும் எப்போதும் வேண்டும். உட்காருவதும், நிற்பதும், என் வசதியை பொறுத்தது...' என்று, வந்து விட்டேன்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !