திண்ணை!
முத்து பதிப்பகம், கவிஞர் நா.முத்துக்கூத்தன் எழுதிய, 'துணை நடிகர் துரைக்கண்ணு' நுாலிலிருந்து:'எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எஸ்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன், டி.கே.புகழேந்தி, சி.எஸ்.ஜெயராமன் மற்றும் சி.ஆர்.சுப்புராமன் ஆகியோரிடம் உள்ள ஒற்றுமை என்ன...' என கேட்டால், உடனே, இசையமைப்பாளர்கள் என, கூறி விடுவீர்கள். சி.எஸ்.ஜெயராமன் பின்னணியும் பாடியுள்ளார்.இதை தவிர, இவர்களிடையே மற்றொரு ஒற்றுமையும் உண்டு. இவர்கள் அனைவரும், நாடகங்களில், பெண் வேடம் ஏற்று நடித்தவர்கள்.ஆண் வேடங்களுக்கு தேர்வு பெறாததால், பெண் வேடத்தில் நடிப்பதுடன், இசைக் கருவிகளை இசைக்க கற்று, பிற்காலத்தில், இசையமைப்பாளர்களாக உயர்ந்தனர்.நாடகங்களில், ஆண் நடிகர்கள், பெண் வேடம் ஏற்று நடிப்பதற்கு மாறாக, பெண்ணையே நடிக்க வைத்து, சாதித்த பெருமை, டி.கே.எஸ்., சகோதரர்களின், 'பாய்ஸ்' நிறுவனத்துக்கு உண்டு. இந்த வகையில் பேசப்பட்ட, நடித்த முதல் பெண் நடிகை, எம்.எஸ்.திரவுபதி.தமிழகத்தில், நாடகங்கள் கொடி கட்டி பறந்த காலத்தில், சவ் சவ் நாடகம் என, ஒன்றை நடத்துவர். இதற்கு கட்டணம் அதிகம். ஆனாலும், ரசிகர்கள் கூடுவர்.'சவ் சவ்' என்றால் என்ன... ஒரே நாளில், ஒரே மேடையில், நான்கைந்து பிரபலமான நடிகர் - நடிகையரை வைத்து, தனித்தனியாக, வள்ளித்திருமணம், பவளக்கொடி, கோவலன், சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகங்களின் முக்கியமான காட்சிகளை எடுத்து, ஒன்றன் பின் ஒன்றாக மேடையில் அரங்கேற்றுவர்.அவரவர்களுக்கு ஏற்ப ஆர்மோனியம், தபலா கலைஞர்களை ஏற்பாடு செய்து கொள்வர். கலைஞர்களும் போட்டி போட்டு நடிப்பர். இதனால், ரசிப்புக்கும், கைத்தட்டலுக்கும் பஞ்சம் இருக்காது.இந்த கலைஞர்களில், டி.பி.ராஜலட்சுமி முக்கியமானவர்.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, எஸ்.வி.சகஸ்ரநாமம் எழுதிய, 'திரும்பிப் பார்க்கிறேன்' நுாலிலிருந்து: பத்திரிகையாளர், லட்சுமிகாந்தன், கொலை வழக்கு சம்பந்தமாக, என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடத்தினர். அவரை, நீலகிரி மெயிலில் சென்னை அழைத்துப் போக ஏதுவாய், 'லாக் - அப்'பில் வைத்தனர், போலீசார்.அப்போது, காவலாளியிடமும், என்னிடமும், நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார், என்.எஸ்.கே.,மாலை, 6:30 மணியானால், 'லாக் - அப்'பில் உள்ளவரை, உள் அறையில் வைத்து, வெளிக்கதவை பூட்டி விடவேண்டும். மாலை, 6:30 ஆனதும், கதவை பூட்டுவதற்காக, சாவியுடன் வந்த காவலர் ஒருவர், என்.எஸ்.கே., பேசுவதை, ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்.என்.எஸ்.கே.,வுக்கு, விஷயம் தெரிந்ததும், 'உன் வேலையை செய்யப்பா... என்னால் உன் வேலைக்கு கெட்ட பெயர் வேண்டாம்; கதவை பூட்டு...' என்று, அவரே, தான் இருந்த அறை கதவை சாத்தி, உள்ளே அமர்ந்து கொண்டார்.'எனக்கு, இது புதிதில்லை. சகுந்தலா படத்தில், ஜெயிலில் அடைத்திருக்கின்றனர். தவிர, ஆலப்புழையில், கம்பெனியில் இருந்தபோது, எங்கள் நாடக முதலாளி ஒருவரால், ஜெயிலுக்கு போயிருக்கேன்... அன்றும், ஜெயிலறை வரை, சகஸ்ரநாமம் என்னுடன் வந்தான். இப்போது, 16 ஆண்டுகளுக்கு பின், இப்படி ஒரு சூழ்நிலை. இன்றும், சகஸ்ரநாமம் என்னுடன் இருக்கிறான்...' என, அந்த காவலாளியிடம், என்.எஸ்.கே., கூறியபோது, கண்ணீர் விட்டேன்.உடனே, 'நீங்கள், அங்கிருந்து பார்க்கும்போது, நான் ஜெயிலில் இருப்பது போல் உங்களுக்கு தோன்றுகிறது. நான் இங்கிருந்து பார்க்கும்போது, நீங்களெல்லாம் ஜெயிலில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது...' என்றார், என்.எஸ்.கே., எதையும் சகஜமாக எடுத்துக் கொள்வது, என்.எஸ்.கே.,யின் குணம்!நடுத்தெரு நாராயணன்