உள்ளூர் செய்திகள்

திண்ணை

'நேதாஜி எங்கே?' எனும் நுாலில், பழ.நெடுமாறன்: நேதாஜியின் வாழ்வில் தமிழர்களின் பங்கு மகத்தானது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்திஜியால் நிறுத்தப்பட்ட சீதாராமய்யாவை எதிர்த்து போட்டியிட்டார், நேதாஜி.அப்போது, தமிழ்நாடு முழுமையாக அவருக்கு ஆதரவளித்து, வெற்றிக்கு வழிவகுத்தது.எஸ்.சீனிவாசய்யங்கார், எஸ்.சத்யமூர்த்தி, கு.காமராஜர், உ.முத்துராமலிங்க தேவர், ப.ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் நேதாஜிக்கு உறுதுணையாக இருந்தனர்.ஜெர்மனியில், இந்திய சுதந்திரப் படையை நேதாஜி அமைத்தபோது, அதன் வானொலி நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராக இருந்தவர் ஆளவந்தார் எனும் தமிழரே.தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தமிழர்கள் ஒரு முகமாக, நேதாஜியின் விடுதலைப் போராட்டத்திற்காக ஆதரவளித்தனர். அவரது படையில் அணியாக சேர்ந்தனர். அவர், நிதி கேட்டபோது, அள்ளி அள்ளி தந்தனர்.கடந்த, அக்., 23, 1946ல், சிங்கப்பூரில், நேதாஜி, சுதந்திர அரசை பிரகடனம் செய்தபோது, கூடியிருந்த கூட்டத்தில் பெரும்பாலோர் தமிழர்களாக இருந்தனர். எனவே தான், நேதாஜி தன் பேச்சை தமிழில் மொழி பெயர்த்தபோது, பெரும் ஆரவாரம் எழுந்தது. வேறு எந்த இந்திய மொழியிலும் அவரது பேச்சு, மொழி பெயர்க்கப்படவில்லை.நேதாஜியின் தன்னம்பிக்கைக்கு உரியவர்களாக பல தமிழர்கள் விளங்கி, இவரது ராணுவத்திலும், அரசாங்கத்திலும் உயர் பதவிகளை வகித்தனர்.கேப்டன் லட்சுமி ராகவன், மகாகவி பாரதியாரின் மைத்துனர் மகனான எஸ்.ஏ.ஐயர், மேஜர் ஜெனரல் ஏ.டி.லோகநாதன், மேஜர் ஜெனரல் அழகப்பன், கேப்டன் ஜானகி தேவர், நேதாஜியின் தனி உதவியாளர் மேஜர் பாஸ்கரன், அவரது சமையல்காரர் காளி, ஒற்றுமைப்படை பயிற்சி பள்ளித் தலைவராக பணியாற்றிய என்.ஜி.சுவாமி ஆகியோர் அவர்களில் சிலர்.தமிழர்கள் தனக்கு உறுதுணையாக நிற்பதை கண்ட நேதாஜி, 'அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க வேண்டும் என விரும்புகிறேன்...' என்றார்.ஏவி.எம்.,மின், ஸ்ரீவள்ளி படத்தில், முதலில் எம்.கே.தியாகராஜ பாகதவரும், வசுந்தராதேவியும் நடிப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால், பாகவதர் ஜெயிலுக்கு போய் விட்டதால், இத்திட்டம் முறிந்தது.என்னவானாலும் சரி, இளம் ஜோடியான டி.ஆர்.மகாலிங்கம், குமாரி ருக்மணியை நடிக்கச் செய்து, ஸ்ரீவள்ளி படத்தை தயாரித்து விடுவதென முற்பட்டார், ஏவி.மெய்யப்பன். மகாலிங்கத்தின் பாட்டில் உள்ள குறை, நிறைவையும் எப்படி சமன்படுத்தி சிறப்புற செய்யலாம் என்பதையும் நன்கு அறிந்திருந்தார், மெய்யப்பன்.'பத்து படங்களில் தொடர்ந்து புகழ் இழந்தவரையும், நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஒரு நடிகையையும் சேர்த்து பிரதம பாகத்தில் நடிக்கச் சொல்கிறீர்களே... படம் நான்கு நாள் கூட ஓடாது...' என்று, அவரை எச்சரித்தனர், சிலர்.ஆனால், யார் பேச்சையும் காதில் போட்டுக் கொள்ளாமல், அசாத்திய துணிச்சலுடன் தம் எண்ணப்படியே, ஸ்ரீவள்ளி படத்தை, தயாரித்து வெளியிட்டார், மெய்யப்பன்.படுதோல்வியுறும் என்று கருதப்பட்ட அப்படம், 'பாக்ஸ் ஆபீஸ் ஹிட்'டாகி விட்டது. மகாலிங்கத்திற்கு மீண்டும் ஏகப்பட்ட மவுசு, அவர் ஆயுட்காலம் பூராவும் நீடித்தது.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !