உள்ளூர் செய்திகள்

திண்ணை

எங்கள் பாய்ஸ் கம்பெனி யில், நடிகர் பைரவ சுந்தரம் பிள்ளை, நகைச்சுவையாகப் பேசும் திறமை பெற்றவர். வேலன் வேடத்திற்கு, ஆறு முகங்கள் வைத்துக் கொள் வது இவரது பழக்கம். அதற்காக, அட்டையால் செய்யப்பட்ட, ஐந்து முகங் களையும், பத்து கைகளை யும், மயிலாசனத்திலேயே கட்டி விடும்படிச் சொல்லி, மயிலாசனத்தில் உட்கார்ந்து பாடினார்.பழனி மலைக்கு, காவடி எடுத்துப் போகிற அன்பர்களுக்கு, காட்சி கொடுப்பது போல, ஒரு நிகழ்ச்சியை வைத்து, மக்களுக்கு உபதேசம் செய்தார். அந்தக் காட்சி எப்போது முடியும், எந்த வார்த்தையுடன் முடியும் என்று, யாருக்குமே தெரியாது. கற்பனையாக, தாமே சொந்த வசனம் பேசுவார்.அன்றைய காட்சியில், பைரவ சுந்தரம் பிள்ளை ஒருவாறு தம் உபதேசப் பேச்சை முடித்துக் கொண்டார். 'படுதா' விழுவதாகக் காணோம். அதனால், மறுபடியும் சிறிது நேரம் உபதேசம் பேசினார்.பிறகும், படுதா விழவில்லை; யோசித்தார்... உடனே, கற்பனையை உதிர்த்து விட்டார். 'பக்த கோடிகளே... நான் சொல்வது உங்கள் காதில் படுதா?' என்று உரத்த குரலில் கூறினார்; அப்போதும் படுதா விழவில்லை.மறுபடியும் பேசினார். 'இப்படி எல்லாம் இருக்கக் கூடாது... என்ன, நான் சொல்வது உங்கள் மனதில் படுதா... படுதா?'ஊஹும்... படுதா விழவே இல்லை.இவ்வாறு அவர் பலமுறை, படுதா, படுதா என்று சொல்லிப் பார்த்தார்; பயனில்லை. எல்லாரும் அவருடைய பேச்சுத் திறமையைக் கண்டு மகிழ்ந்தனரே தவிர, படுதா மட்டும் கீழே விழவே இல்லை.அவ்வளவு தான்... பைரவ சுந்தரம் பிள்ளைக்குக் கோபம் வந்து விட்டது. மயிலாசனத்திலிருந்து எழுந்து, 'விர்' என்று உள்ளே சென்று விட்டார்; மக்கள் விழுந்து, விழுந்து சிரித்தனர். அவருடைய பேச்சுக்காக அல்ல; வேலனுடைய பத்துக் கைகளும், ஐந்து தலைகளும் மயிலாசனத்திலேயே இருந்தன.அந்தக் கம்பெனியில் ஸ்டேஜ் மானேஜர், 'பெல்' அடித்தால்தான், படுதா தூக்க வேண்டும் அல்லது விழ வேண்டும். அப்படி ஒரு ஏற்பாடு இருந்ததால் தான், படுதா விட வேண்டியவர், பேசாது இருந்து விட்டார்.— எம்.ஜி.ஆர்., ஒரு கட்டுரையில்...கருணாநிதி கதை, வசனம் எழுதிய, 'புதையல்' படத்தில், ஒரு பாடலுக்கு இசையமைக்க விஸ்வநாதன் - ராமமூர்த்தி அழைக்கப்பட்டனர். பாடலைப் பார்த்த எம்.எஸ்.வி., பாடல் வசன நடையில் இருப்பதால், இதற்கு இசையமைக்க இயலாது என்று கூறி, மறுத்து விட்டார். அது, கருணாநிதி எழுதிய பாடல்தான் என்பது அப்போது அவருக்குத் தெரியாது.பல ஆண்டுகள் கழித்து, கருணாநிதி முதன் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற போது, 'குடும்பக் கட்டுப்பாடு' பிரசார படப் பாடல்களுக்கு இசையமைக்க, எம்.எஸ்.வி., பொறுப் பேற்றார். கண்ணதாசன், வாலி, வேறு சில கவிஞர் களும் எழுதினர்.அப்போது, ஒரு பாடலை கவரில் இருந்து வெளியே எடுத்த போது, 'மறுபுறம் திருப்பிப் பார்க்கவும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்பிப் பார்த்த எம்.எஸ்.வி.,க்கு அதிர்ச்சி. அதில் காணப்பட்ட குறிப்பு, 'இது, வசனமாகவே இருக்கலாம்; இருந்தாலும், இதற்கு நீங்கள் கட்டாயம் இசையமைக்க வேண்டும். இது என் அன்புக் கட்டளை...' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சட்டென்று, சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம், எம்.எஸ்.வி.,யின் நினைவுக்கு வந்தது.பின்னர், இது சம்பந்தமான, 'ரிக்கார்டு' வெளியீட்டின் போது நடந்த விழாவில், கருணாநிதி பேசும் போது, 'தம்பி எம்.எஸ்.விஸ்வநாதன், வசனத்துக்கு இசையமைக்கும் அளவுக்குத் தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்...' எனக் குறிப்பிட்டார். எம்.எஸ்.வி., கண்களில் நீர் தளும்ப, இரு கை கூப்பி, கருணாநிதியை வணங்கினார்.***நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !