உள்ளூர் செய்திகள்

திண்ணை!

அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள்இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கு அப்துல் கலாம் போட்டியிட்ட போது, மத்திய மந்திரி பிரமோத் மகாஜன், டில்லியிலிருந்து, தொலைபேசியில் அழைத்தார்.'தேர்தலுக்கு நல்ல நேரத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்ற எண்ணம், உங்கள் மனதில் இருக்கிறதா...' என்று கலாமிடம் கேட்டார், மகாஜன்.'பூமி, தன்னைத் தானே சுற்றுவதால், இரவு - பகல் வருகிறது. தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுவதால், ஒரு ஆண்டு பிறக்கிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும், வானவியல் தொடர்பானது; ஜோதிடவியல் அல்ல. இதில் எந்த நேரமும் எனக்கு நல்ல நேரமே...' என்றார், அப்துல் கலாம்.இந்திய ஜனாதிபதி ஆகப்போகும் அப்துல் கலாம், முடி அலங்காரத்தை மாற்றிக் கொண்டால் எப்படி இருப்பார் என, அவரைப் பற்றிய கம்ப்யூட்டர் படங்கள், பத்திரிகைகளில் வெளிவந்தன.கலாம், அஜ்மீர் சென்றபோது, நிருபர்கள் அந்தப் படங்களை காட்டி, 'இதில் எந்த வகையான முடி அலங்காரத்தை தேர்ந்தெடுப்பீர்கள்...' என கேட்டனர்.அந்த படங்களை பார்த்த கலாம், சிரித்தபடி, 'முடி அலங்காரத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. ஜனாதிபதி பதவி என்றாலே, 'ரப்பர் ஸ்டாம்ப்' என நினைக்கின்றனர். அதை மாற்ற முயற்சி செய்வேன்...' என்றார்.ஜனாதிபதி வேட்பாளராக அவரை அறிவித்ததும், 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்...' என்ற கீதையின் வரிகளையே கூறினார்.இந்திய சரித்திரத்தில், எழுத்தாளரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, எவரும் இல்லை.கடந்த, பிப்., 2, 2007ல், எழுத்தாளர் குஷ்வந்த்சிங் வீட்டிற்கு சென்றார், கலாம். அன்று, குஷ்வந்த் சிங்கின் பிறந்தநாள்.கலாமின் வருகை குறித்து, குஷ்வந்த் சிங்கிற்கு தகவல் போனபோது, 'யாரது போன்லே விளையாடறது...' என, போனை வைத்து விட்டார், சிங்.அடுத்த நாள், குஷ்வந்த் சிங்கின் வீட்டிற்கு வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை காவலர்கள் கவனித்த போது தான், உண்மை புரிந்தது. அவரை நேரில் சந்தித்த கலாம், 'நான் உங்களுடைய, 'சீக்கியர்களின் வரலாறு' நுாலை படித்திருக்கிறேன்...' எனக் கூற, மகிழ்ந்தார், சிங்.'அங்கிள், எங்கள் காலனியில் ஒரே ஒரு பூங்கா தான் உள்ளது. அதில் ஒரே ஒரு, 'சீசா'தான் உள்ளது. விரைவில் அதிகமான, 'சீசா'க்களை அப்பூங்காவில் நிறுவுமாறு கேட்டுக் கொள்கிறேன்...' என, கலாமிடம் விண்ணப்பம் அளித்தாள், ஒரு சிறுமி.உடனே கலாம், உ.பி., மாநிலம், ஆக்ரா கலெக்டரை தொடர்பு கொண்டு, சிறுமியின் குறையைச் சொல்லி, தீர்த்து வைத்தார். சில நாட்களில், 'தேங்க்யூ அங்கிள்...' என, சிறுமியிடமிருந்து பதில் கடிதம் கலாமிற்கு வந்தது.- நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !