திண்ணை!
அமெரிக்க குடியரசு தலைவராக இருந்த, ஆபிரகாம் லிங்கன், ஒருமுறை ரயிலில் பயணம் செய்தார். அப்போது, அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கவில்லை.அவருக்கு புகை பிடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. பக்கத்தில் நோட்டம் விட்டார். ஒரு ஆங்கிலேய மாது, அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.தான் புகை பிடிப்பதை அந்த மாது விரும்புவாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. நாகரிகம் கருதி, அந்த மாதுவிடம், 'மேடம், நான் புகை பிடிக்கலாம் என்றிருக்கிறேன். தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை உண்டா...' என்று கேட்டார். 'ஜென்டில்மேன் நீங்கள். வீட்டில், உங்கள் மனைவி பக்கத்தில் இருக்கும்போது, எத்தனை நேரம் புகை பிடிப்பீர்களோ, அந்த மாதிரியே இப்போதும் புகை பிடியுங்கள்...' என்றார், அந்த மாது. சற்று தயக்கத்துடன், 'மேடம், நான் என் மனைவியின் முன் புகை பிடிப்பதில்லை...' என்றார், லிங்கன்.'அப்படியானால், தயவுசெய்து நான் ரயிலை விட்டு இறங்கும் வரை, என்னை உங்கள் மனைவியாகவே நினைத்துக் கொள்ளுங்கள். அதனால், எனக்கு சங்கடம் இல்லை...' என்றாள், சிரித்தபடி.சற்றும் கோபித்துக் கொள்ளாமல், கையில் எடுத்த சிகரெட்டை பையில் போட்டுக் கொண்டார், லிங்கன்.***பிரபலமான பழம்பெரும் நடிகர் டி.ஆர்.மகாலிங்கம். தன் மகனை பள்ளியில் சேர்க்கும் தினத்தை ஒரு விழாவாக கொண்டாடினார்.ஊரை அடைத்து பந்தல் போட்டு, ஆயிரம் பேருக்கு விருந்து பரிமாறி, தியாகராஜ பாகவதரின் பாட்டு கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.மகாலிங்கத்திடம் இருந்த அன்பின் காரணமாக, இலவசமாகவே கச்சேரி செய்தார், பாகவதர். ஆனால், அன்று பாட்டு கச்சேரி செய்ததற்கு, தன் அன்பின் அடையாளமாக, ஒரு கவரில், 1,000 ரூபாய் வைத்து, பாகவதரிடம் கொடுத்தார், மகாலிங்கம்.அந்த கவரிலிருந்த பணத்துடன் மேலும் ஒரு ரூபாய் வைத்து, மகாலிங்கத்தின் மகன் கையில் கொடுத்துச் சென்றார், பாகவதர்.***வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் திரைப்படங்கள், உலகப் புகழ் பெற்றவை. அவரது படங்களில் வரும் விலங்குகளின் பேச்சு, இயற்கையாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்.'நெருப்புக்கோழி அப்படி, டான்ஸ் ஆடாது; பென்குவின் இப்படி சிரிக்காது...' என்று ஆட்சேபிப்பார்.ஒரு படத்தில், ஆந்தை பேசுவதாக காட்ட வேண்டியிருந்தது. நுாற்றுக்கணக்கானோரின் குரலை பதிவு செய்து பார்த்து, 'சரியில்லை...' என்று ஒதுக்கி விட்டார்.கடைசியில் ஒருவர் பெயரை சிபாரிசு செய்து, 'அவர் ரேடியோவில், உருளைக்கிழங்கு பேசுவது மாதிரி பேசியிருக்கிறார்...' என்றனர்.'அவர்தான் நமக்கு தேவை; உருளைக்கிழங்கு எப்படி பேசும் என்று தெரிந்தவருக்கு தான், ஆந்தை எப்படி பேசும் என்றும் தெரிந்திருக்கும்...' என்று கூறி, அவரையே பணியமர்த்தினார், டிஸ்னி.- நடுத்தெரு நாராயணன்