உள்ளூர் செய்திகள்

திண்ணை!

விருத்தாம்பிகை அண்ணாதுரை எழுதிய, 'படித்ததில் சுவைத்தது!' நுாலிலிருந்து:சுதந்திரத்தையே உயிர் மூச்சாக கொண்ட, சுப்ரமணிய சிவா, சேலம் சிறையில் இருந்தபோது, உடலில் தொழுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. அதனால், ஆங்கிலேய அரசு, அவரை விடுதலை செய்தது. ஆனாலும், அவர் ஊர் ஊராக சென்று, சொற்பொழிவின் மூலம் சுதந்திர எழுச்சியை புகட்டினார்.உடல் நலத்தை கவனிக்கும்படி, அறிவுரை கூறினார், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர், நஞ்சுண்டராவ்.'நானோ நோயாளி. நீங்களோ டாக்டர். அதுவும் சாதாரண டாக்டர் அல்லவே. ஆலகால விஷத்தையே உண்ட நஞ்சுண்டவனே, எனக்கு டாக்டராக வந்துள்ளாரே... நான் ஏன் கவலைப்பட வேண்டும்...'இந்த நோய் என்னை விட்டும் போகாது; நானும் சுதந்திர பிரசங்கங்களை செய்யாமல் இருக்க மாட்டேன்...' என்று, சிகிச்சையுடன் பிரசாரமும் செய்து வந்தார், சுப்ரமணிய சிவா.ஆங்கிலேயனின் சிறுமைகளையும், அல்லல்களையும் கண்டு பொங்கி எழுந்தவர், திலகர். 1856ல், மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த அவர், இண்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெற்றார். 1873ல், சட்டப்படிப்பிற்காக சட்டக்கல்லுாரிக்கு சென்றார்.சட்டக்கல்லுாரி முதல்வரோ, 'நீ கணிதம் படித்தால் உன் வாழ்க்கை சிறப்பாக அமையும்...' என்றார்.'என் இந்திய நாடு அடிமைப்பட்டுள்ளது. இந்திய மக்களை அடிமைப்படுத்துகின்றனர், ஆங்கிலேயர். அவர்களை நான் விடுவிக்க, சட்டம் படிக்க போகிறேன். ஏழை மக்களுக்காக போராடி, சிறையிலிருந்து அவர்களை விடுவிப்பது என் கடமை...' என்றார், திலகர்.சுதந்திரத்திற்கு முன், பாரதியாரின் பாடல்கள், அரசுக்கு எதிராக, மக்களை துாண்டி விடும் விதத்தில் உள்ளன என, கருதினர், ஆங்கிலேயர்கள்.* கடந்த, 1922ல், பள்ளிக்கூடங்களில், பாரதியாரின் பாடல்கள் சொல்லிக் கொடுப்பதை தடை செய்தது, ஆங்கிலேய அரசு* கடந்த, 1928ல் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த, பர்மா மாகாண அரசும், பாரதியாரின், 'சுதேசி கீதங்கள்' நுாலுக்கு தடை விதித்தது. 'பாரதி பாடல்களில் ராஜ நிந்தனை கருத்துகள் உள்ளன. அதனால், தடை செய்தோம்...' என, காரணம் கூறியது.இதே ஆண்டு, சென்னை மாகாண அரசும், செப்டம்பர் 11ம் தேதி, பாரதி பாட நுால்களுக்கு தடை என, ஆணை பிறப்பித்தது.சென்னையில் மட்டும், 2000 பாரதி பாட நுால்கள், போலீசாரால் கைப்பற்றப்பட்டன.அக்டோபர் 9ம் தேதி, சென்னை சட்டசபையில், இந்த தடைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார், தீரர் சத்தியமூர்த்தி. இதன் மீது வாக்கெடுப்பு நடந்தது. 76 பேர் தடைக்கு எதிராகவும், எட்டு ஆங்கிலேய உறுப்பினர்கள் உட்பட, 12 பேர் தடையை ஆதரித்தும், பிரதமர் டாக்டர் பி.சுப்பராயன் உட்பட, 15 பேர் நடுநிலையும் வகித்தனர்.தீர்மானம் வெற்றி பெற்றது.இதனிடையே, சென்னை நீதிமன்றத்திலும், பாரதி பாட நுால் பறிமுதலை எதிர்த்து வழக்கு நடந்தது. இறுதி தீர்ப்பில், 'பாரதி பாடல்கள் தேச விரோதமானவை அல்ல...' என, தீர்ப்பு வழங்கப்பட்டது.அதை ஆங்கிலேய அரசு கண்டுகொள்ளவில்லை. 'முதலையும் மூர்க்கனும் கொண்டதை விடா' என்பது போல், நடந்து கொண்டது.கடந்த, 1947, ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவு, புதுடில்லியில் அரசியல் நிர்ணய சட்டசபையில், அதிகார மாற்றம் பற்றிய விவாதத்தின்போது, ஒரு தீர்மானம் கொண்டு வந்து உரை நிகழ்த்தினார், ஜவகர்லால் நேரு.அதன் பெயர், 'விதியோடு நாம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டோம்...' அதிலிருந்து சில வரிகள்:நீண்ட காலத்திற்கு முன்னர், விதியோடு நாம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டோம். முழு வீச்சிலோ அல்லது முழுமையாகவோ இல்லாவிட்டாலும் கூட, கணிசமான அளவு அதை நிறைவேற்றும் தருணம் வந்து விட்டது. உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில், இந்தியா உயிர்ப்புடன் விழித்தெழுந்து விடுதலை வாழ்வு பெறுகிறது.பழமையிலிருந்து புதுமைக்கு அடியெடுத்து வைக்கும்போது, ஒரு சகாப்தம் முடிவடையும்போது, அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டின் ஆன்மா விழித்தெழும்போது, இத்தகைய அரிய தருணம் வரும். வரலாற்றில் மிக அபூர்வமாக ஏற்படும் தருணம் இது. இந்த புனிதமான போராட்டத்தில், நம் நாட்டிற்காக, மக்களுக்காக, மனித குலத்திற்காக நம்மை அர்ப்பணம் செய்து கொள்ள உறுதி பூணுவோம்.வரலாற்றில் இந்த விடியலில், இந்தியா தன் முடிவற்ற தேடலை துவங்கியுள்ளது. அதன் கடந்த நுாற்றாண்டுகள் வெற்றிகளும், தோல்விகளும் நிரம்பியவை. ஏற்றத்திலும், தாழ்விலும் தன் தேடலை நிறுத்தவில்லை. ஊற்றுக்கண்ணாக விளங்கிய குறிக்கோள்களை மறக்கவில்லை. இன்றோடு நம் துன்பங்களுக்கு முடிவு கட்டுவோம். இந்தியா மீண்டும் தன்னை இனம் கண்டு எழும்.- இப்படி ஒரு உணர்வுப்பூர்வமான உரையை வெளிப்படுத்தினார், நேரு.பாகிஸ்தானின் பிதாவான, ஜின்னா, மத நம்பிக்கை அற்றவர், மதச்சார்புடைய பாகிஸ்தானை பெற்று விட்டார்* மதப்பற்று மிகுந்த காந்திஜி, மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோர், மத சார்பற்ற ஆட்சி இந்தியாவில் அமைய அஸ்திவாரம் அமைத்தனர்* ஆரம்ப காலத்தில், பாகிஸ்தான் கிடைக்குமென்பதில், ஜின்னாவிற்கு நம்பிக்கை இல்லை. ஆனால், அவரே பாகிஸ்தானின் தந்தை என்றும், பாகிஸ்தானின் சிற்பி என்றும் புகழப்பட்டார்.'பாகிஸ்தான்' என்ற பெயரை, ரஹ்மத் அலி சவுத்ரி எனும் இந்திய முஸ்லிம், கேம்பிரிட்ஜில் படிக்கும்போது உருவாக்கினார். பாகிஸ்தான் என்ற சொல்லின் பொருள், புனித பூமி என்பதாகும்.இதன் பெயரிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் இந்த நாட்டின் மாநிலங்களின் முதல் எழுத்து.P - பஞ்சாப்; A - ஆப்கானா; K - காஷ்மீர்; S - சிந்து; TAN - பலுசிஸ்தான்.ரஹ்மத் அலி எழுதிய நான்கரை பக்க குறிப்பில் காணப்படும் விளக்கம் இது. ஜின்னாவிடம் இதை கூறியபோது, அது வெறும் பகல் கனவு என, ஒதுக்கி விட்டார்.அந்த பகல் கனவு, நிஜமாக மாறியவுடன், ரஹ்மத் அலி பெயரே ஒழிக்கப்பட்டு விட்டது.'பாகிஸ்தானின் பிதா' என, ஜின்னா அழைக்கப்பட்டது, எல்லாவற்றிற்கும் வாய்ப்பூட்டு போட்டு விட்டது.- நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !