உள்ளூர் செய்திகள்

திண்ணை!

பதினெட்டு சித்தர்களுள் ஒருவர் தேரையர். இவர், இயற்பெயர் ராமதேவர். இவர், சிறுவனாக இருந்த போது, இவரை, அவ்வையார் அழைத்து போய், அகத்திய முனிவரிடம் சீடனாக சேர்த்தார்.காசிவர்மன் என்ற மன்னனுக்கு, நீங்காத தலைவலி நோய்; அகத்தியரை நாடினான். அவர், மன்னனை பரிசோதித்தார். காரணம் புரிந்தது, 'மன்னா... நீ உறங்கும் போது, மிக, மிகச் சிறிய தேரைக்குஞ்சு ஒன்று உன் மூக்கினுள் புகுந்து விட்டது. நீ மூச்சுக் காற்றை உள்ளே இழுத்த போது, அந்தத் தேரை, மூளையில் போய் தங்கி விட்டது. இதற்கு வாழ்வும், வளர்ச்சியும் உன் மூளையில்தான் உள்ளது. அதனால்தான், உனக்கு தீராத தலைவலி...' என்றார்.மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.அகத்தியர், அவனுக்கு சிகிச்சை தொடங்கினார். மன்னன் மயக்க நிலையில் ஆழ்த்தப்பட்டான். சில நொடி களில் கபாலம் திறக்கப் பட்டது. மூளை மீது தேரை உட்கார்ந்திருந்தது. அதை எவ்வாறு எடுப்பது? குறடு வைத்து எடுத்தால், மூளை சேதமாகி விடும். என்ன செய்வது என்று அகத்தியர் விழித்தார்.குருநாதரின் திகைப்பைக் கண்ட ராமதேவர், வாயகன்ற பாத்திரம் ஒன்றில் தண்ணீர் கொண்டு வந்தார். அதை தேரை காணுமாறு செய்தார். தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்தில் தேரை பளிச்சென்று தாவி, பாத்திரத் தில் குதித்தது.பின்னர், மன்னனின் மண்டை ஓட்டை, சந்தான காணி என்ற மூலிகையால் மூடினார் அகத்தியர்.இந்நிகழ்ச்சிக்கு பிறகு, ராமதேவர், 'தேரையர்' என்று அழைக்கப்பட்டார்.— ஈரோடு ஆற்றலரசு எழுதிய, 'சித்தர்கள் வரலாறு' நூலிலிருந்து...***வ.வே.சு., ஐயர் கெய்ரோவிலிருந்து பம்பாய், பம்பாயிலிருந்து கொழும்பு, கொழும்பிலிருந்து கடலூருக்கு வந்தார். கப்பலிலேயே நேரே புதுச்சேரிக்குப் போகவில்லை. போலீஸ் தன்னைக் கண்காணிக்கும் என்று எண்ணி, கடலூரில் கப்பலை விட்டு இறங்கி, நடந்தே புதுச்சேரிக்கு வந்தார். புதுச்சேரியில் இருந்த பாரதியார், அரவிந்தர் ஆகியோருடன் சேர்ந்து கொண்டார்.கடந்த, 1911ல் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்டபின், அதில் ஐயர் உள்ளிட்டோருக்கு சம்பந்தம் இருக்கலாம் என்று கருதி, போலீஸ் தொந்தரவு அதிகரித்தது.ஒருநாள் ஐயர் ஒரு தெரு வழியாகப் போய் கொண்டிருந்தார். சில போக்கிரிகள் இவரைப் பின் தொடர்ந்தனர். அவர்கள் போலீசால் ஏவப்பட்டவர் கள். ஐயரை பலவந்தமாகக் கடத்திக் கொண்டு போய், பிரிட்டிஷ் எல்லையில் விட்டுவிட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். ஐயருக்கு இது தெரிந்தது. ஒரு சந்துக்குள் வேகமாகச் சென்றார். அங்கு ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. அதற்குள் நுழைந்து, அங்கிருந்த விக்ரகத்தின் பின்னால் ஒளிந்து கொண்டார். இரவெல்லாம் அங்கேயே இருந்து விட்டு, மறுநாள் காலை வீடு வந்து சேர்ந்தார்.மற்றொரு நாள் இரவு சுமார், 8:30 மணி இருக்கும். ஐயர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தெரு பக்கத்துக் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. குழந்தை சுபத்ரா தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. போலீசாரால் ஏவப்பட்ட சிலர், வீட்டைச் சூழ்ந்து, 'ஐயரே... வெளியில் வா... உன்னை வெட்டிப் போடுகிறோம்; குத்திப் போடுகிறோம்...' என்று அட்டகாசம் செய்ய ஆரம் பித்தனர். ஐயர், ஏதேனும் ஆபத்து நேரிடக் கூடும் என்று உணர்ந்தார். குழந்தையை தூக்கிக் கொண்டு, தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு கொல்லைப்புற மதில் சுவர் ஏறி, பக்கத்து வீட்டு மாடி வழியாக நான்கு வீடு தள்ளி இருந்த தன் நண்பரின் வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டுத் திரும்பினார். தன் வீட்டின் கூடத்து முன் பகுதிக்கு வந்து நின்றார்.'என்னடா சொல்கிறீர்கள்... இப்போதே ஓடிப் போகிறீர் களா, இல்லையா?' என்று சொல்லிக் கொண்டே, தன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கி சுட்டார். அவ்வளவுதான், நொடியில் அந்தக் கும்பல் ஓடிப் போயிற்று!—'நான் கண்ட நால்வர்' நூலில், வெ.சாமிநாத சர்மா.***பழைய, 'பெட்' பாட்டில்கள், காலி பேஸ் பவுடர் டப்பாக்கள், கிழிந்த பிளாஸ்டிக் செருப்புகள், உடைந்த ரப்பர் பொம்மைகள், பூட்டு தொலைந்த சாவிகள், சாவி தொலைந்த பூட்டுகள், நாயின் அறுந்த செயின், விரிசல் விட்ட ஸ்கேல், ஈசி சேர் கட்டைகள், எலக்ட்ரிக் ஒயர், ஏரியல் கம்பி, பேனா மூடிகள், பழைய பிளாஸ்டிக் பூங்கொத்துகள், பால் கவர்கள், காலியான இங்க் பாட்டில், கசங்கிய குழந்தைத் தொப்பிகள், பந்துகள் ஆகிய பொருட்களை ஈவு இரக்கமின்றி, உடனுக்குடன் குப்பையில் எறிந்து விட்டால், வீடு ஒரு பாதி சுத்தமாகும்.— ஆலோசனை: குப்பை பொறுக்கும் கோவிந்தன்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !