திண்ணை!
ராஜாஜிக்கும், ஈ.வெ.ரா.,வுக்கும் ஒற்றுமை பல உண்டு. இருவரும், ஒரு வருடம் முன் பின்னாக பிறந்து, 94 வயது வரை வாழ்ந்து, டிசம்பர் மாதத்தில் மறைந்தனர்.ராஜாஜி பிறந்தது, 8.12.1878; மறைந்தது, 25.12.1972. கிறிஸ்துமஸ் தினம். ஈ.வெ.ரா., தோற்றம், 17.9.1879; மறைவு, 24.12.1973. கிறிஸ்துமசுக்கு முதல் நாள். இருவரும் முதலில் சந்தித்த ஆண்டு, 1919.அந்த சந்திப்பை, ஈ.வெ.ரா., நினைவு கூர்கிறார்...அந்தக் காலத்திலே ஈரோட்லே, பி.சி.நரசிம்மை யர்ன்னு எனக்கு ரொம்ப வேண்டிய வக்கீல் ஒருத்தர் இருந்தார். ஈரோட்லே நான் நகரசபை சேர்மனா இருந்தப்ப, குடியானவங்க வழக்கெல்லாம் என்கிட்டே நிறைய வரும்; அதையெல்லாம் நரசிம்மய் யருக்கு அனுப்புவேன். நான் சேர்மனாவர்றது, சில பேருக்கு புடிக்கலே. பொறாமையினாலே எம் பேரிலே கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதி போட்டாங்க. சேர்மன் பதவின்னா இப்ப மாதிரி எலக்ஷன்லே ஜெயிச்சதும் நேராப் போய் சேர்லே உட்கார்ந்துட முடியாது. கலெக்டர் சிபாரிசு செய்யணும்ன்னு வச்சிருந்தாங்க. அந்த சமயத்துலே, சர் பி. ராஜகோபாலாச்சாரிங்கறவர், சப்-கலெக்டரா இருந்தார். அவருக்கு, என்னைப் பத்தி நல்லா தெரியுமானதாலே பெட்டிஷனை பொய்யென்று தள்ளிட்டு, என்னைச் சேர்மனாக்கிட்டாரு.அந்த பெட்டிஷனை எழுதிப் போட்ட ஆசாமி, சீனிவாச முதலியாருன்னு ஒரு வக்கீல். 'நான்-பிராமின் ' வக்கீலாயிருக்காரே... முன்னுக்குக் கொண்டாருவோம்ன்னு நான் தான் அவரை முன்னுக்குக் கொண்டு வந்தேன்; ஆனால், அவரே என் பேரில் பெட்டிஷன் கொண்டு வந்தாரு. அப்ப ராஜகோபாலாச்சாரி சேலத்துலே வக்கீல். கெட்டிக்கார வக்கீல்ன்னு சொல்வாங்க. அதனாலே என்கிட்ட வர்ற கேசை எல்லாம், அவருக்கு அனுப்பி வைப்பேன். அந்தப் பழக்கத்துலே அவர் வர, போக இருந்தார். எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவரும் அப்ப சேலத்துலே நகரசபை சேர்மன்.பிறகு, ஈ.வெ.ரா.,வும், ராஜாஜியும் அரசியலுக்கு வந்தனர். 1919ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். வேலூரில், 1921 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் முதன் முதலாக, கதர் பிரசாரத்தைத் துவக்கியவர், ஈ.வெ.ரா., கள்ளுக்கடையை எதிர்த்து, தமிழகத்தில் முதலில் மறியல் செய்தவரும் அவர் தான்! ராஜாஜிக்கும் கதர் இயக்கத்திலும், மதுவிலக்கிலும் முக்கிய பங்கு உண்டு. சென்னை சர்க்காரின் பிரதம காரியதரிசியாக இருந்த பிரேகன்பரி என்ற ஆங்கிலேயருக்கு கதர் துணிகளை அன்பளிப்பாகக் கொடுத்தார், ராஜாஜி. வியப்படைந்த வெள்ளையர் பிரேகன்பரி, அதை உடனடியாக ஒரு தையல்காரரிடம் கொடுத்து, சூட் தைத்து உடுத்திக் கொண்டார்.பிறகு, நீதிக் கட்சியில் இணைந்தார் ஈ.வெ.ரா., பல இயக்கங்களை நடத்தினார். 1937ல், ராஜாஜி மதராஸ் (சென்னை) மாநில முதலமைச்சர் ஆனார். இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டதால், ஈ.வெ.ரா.,வின் நீதிக் கட்சி இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியது.ராஜாஜியை பல உயர் பதவிகள் தேடி வந்தன; இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் இருந்தார்.ராஜாஜியையும், ஈ.வெ.ரா.,வையும் இரு கண்களாக மதித்தவர் திரு.வி.க., ஆச்சாரியார் அறிவு நுண்ணியது, ராஜதத்திரம் அவர் அறிவுக்கும், சிந்தனைக்கும், வாதத்துக்கும் அகழியாக நிற்கும். அதனால், அவரைத் தமிழ்நாட்டு அறிவு என்றேன். ராஜகோபாலாச்சாரியரும், யானும் கதராண்டியானோம்; ஈருடல் ஓர் உயிரானோம்; சத்தியாக்கிரகப் போர்க்களத்தில் நின்றோம்; போர் புரிந்தோம்.ஈ.வெ.ரா.,வுக்கும், எனக்கும் உள்ள நட்பு இன்று, நேற்று ஏற்பட்டதல்ல; 35 வருடங்களுக்கு மேற்பட்டது. 'வைக்கம் வீரர்' என்பதை இந்த அடியேன் கை பேனா தான் சூட்டியது. திருவிதாங்கூரிலே தீண்டாமையை ஒழிக்க மாபெரும் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றார், ஈ.வெ.ரா., ஆனால், அந்த பெருமை, அந்தப் புகழ் யாருக்கோ போயிற்று! ஈ.வெ.ரா.,வின் அந்த வீரத் தியாகம் என் வாழ்க்கைக் குறிப்பிலுள்ளது. எனக்கு பெண்டு, பிள்ளைகள் இல்லை. நான் செத்துப் போனால், எனக்காக அழுகிற ஒரு நண்பர் இருந்தால், அவர், ஈ,வெ.ரா., ஆகத்தான் இருக்க முடியும்.— இப்படி எழுதியுள்ளார், திரு.வி. கல்யாண சுந்தர முதலியார்.அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஈ.வெ.ரா.,வும், ராஜாஜியும் கடைசி வரை உழைத்தனர்; உற்ற நண்பர்களாக இருந்தனர்.அருமை நண்பர் ராஜாஜி மறைந்து சரியாக ஒராண்டு கழித்து, ஈ.வெ.ரா., தம் நீண்ட பயணத்தை முடித்துக் கொண்டு விட்டது இயற்கையின் அதிசயங்களில் ஒன்று. இந்த நூற்றாண்டில் தமிழகத்தின் அரசியலில், சமுதாய வரலாற்றோடு பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டிருந்த இவ்விரு தலைவர்களும், வெவ்வேறு வகையில் பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக அமைந்திருந்தனர்.— ஈ.வெ.ரா., மறைவின் போது, விகடன் தீட்டிய தலையங்க வரி இது.நடுத்தெரு நாராயணன்