உள்ளூர் செய்திகள்

மயிலேறும் சாஸ்தா!

முருகனின் வாகனம், மயில்; சாஸ்தாவாகிய ஐயப்பனின் வாகனம், புலி. ஆனால், தன் தம்பி முருகன் மீது கொண்ட பாசத்தால், மயிலை வாகனமாக்கிக் கொண்ட சாஸ்தா, துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள வரதராஜபுரத்தில் அருள்பாலிக்கிறார்.திருநெல்வேலி - திருச்செந்துார் சாலையிலுள்ள ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது, நளங்குடி கிராமம். இங்கு ஏழு அண்ணன்மார்களும், அவர்களது ஒரே தங்கை கன்னியம்மாளும் வசித்து வந்தனர். கன்னியம்மாளின் அழகில் மயங்கிய ஆங்கிலேய அதிகாரி ஒருவர், அவளை திருமணம் செய்ய விரும்பினார். இதை விரும்பவில்லை சகோதரர்கள். அதிகாரி கட்டாயப்படுத்தியதுடன், சகோதரர்களை கொடுமைப் படுத்தியாவது, அவர்களது தங்கையை அடைய முடிவெடுத்தார். இதையறிந்த சகோதரர்கள், கன்னியம்மாளை, மயிலேறும் பெருமான் சாஸ்தா கோவில் சன்னிதி அருகில் குழி தோண்டி, உயிருடன் புதைத்து விட்டனர். அந்த இடத்தில் தங்கையின் ஞாபகார்த்தமாக, 'பாதாள கன்னியம்மன்' என்ற பெயரில் சிலை பிரதிஷ்டை செய்து, கோவில் கட்டி வழிபட ஆரம்பித்தனர். இந்த அம்பாளுக்கு, தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.சிவனின் குழந்தைகளான முருகனும், சாஸ்தாவும் பால பருவத்தில் அவரவர் வாகனங்களை மாற்றி, அதில் ஏறி விளையாடும் அடிப்படையில் இங்கு சாஸ்தா முன், மயில் வாகனம் உள்ளது. திருமணம் தடைபடுவோர் சுவாமிக்கும், பாதாள கன்னியம்மனுக்கும் பூஜை நடத்தி, பக்தர்களுக்கு பழம் வழங்குவர். பால் குடம், முடி காணிக்கை, குழந்தைகளுக்கு காது குத்துதல் போன்ற நேர்ச்சைகளும் உண்டு.கன்னியம்மனுக்கு பங்குனி உத்திரத்தன்று, தாமிரபரணி ஆற்றின் கிளை கால்வாயில் இருந்து கும்பம் எடுத்து வந்து, பூஜையும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். மதுரை, திருநெல்வேலி பகுதி பக்தர்கள் பவுர்ணமிதோறும் இங்கு வந்து பூஜை நடத்துவர்.மூலஸ்தானத்தில், முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார், மயிலேறும் பெருமான் சாஸ்தா. அருகில் பூர்ணா, புஷ்கலா தேவியர் உள்ளனர். சுவாமிக்கு எதிராக மயில், யானை, குதிரை, நாய் வாகனங்கள் உள்ளன. விநாயகர், சுடலை மாடசாமி, நாகராஜர், வீரபத்திரர், சிவனின் ஒரு அம்சமான பிண மாலை சூடும் பெருமான் மற்றும் நல்ல மாடசாமி ஆகிய காவல் தெய்வங்கள் இங்கு அருள்பாலிக்கின்றனர்.திருநெல்வேலி - திருச்செந்துார் சாலையில், 24 கி.மீ., துாரத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் சென்று, ஏரல் சாலையில், 6 கி.மீ., கடந்தால் வரதராஜபுரத்தை அடையலாம். - தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !