உள்ளூர் செய்திகள்

சம்மர் கிளாஸ்!

''ஜானகி...ஏ.... ஜானகி... கூப்பிடறது கேட்கலயா...'' கோபத்துடன் சத்தம் போட்டு கத்தினார், 75 வயதான சுந்தரேசன். வீட்டில், அவரும், அவருடைய மனைவி ஜானகி மட்டும்தான் இருந்தனர். ஜானகிக்கு அவரை விட ஒன்றிரண்டு வயது தான் குறைவு என்றாலும், அவள் தான் அவருக்கு, பி.ஏ., சமையல்காரி, நர்ஸ் என எல்லாமும்!அடுப்படியில் இருந்த ஜானகிக்கு, அவர் கூப்பாடு அரைகுறையாகத் தான் காதில் விழுந்தது. கையை அவசரமாக புடவையில் துடைத்தபடி, அவர் முன் வந்தாள்.''என்ன... நான் கூப்பிட்டது காதில் விழலயா?'' என்று மறுபடியும் கோபப்பட்டார் சுந்தரேசன்.எப்படி விழும்... ஒரு பக்கம், 'டிவி' அலறிக் கொண்டிருந்தது. மறுபக்கம் அடுத்த, 'ப்ளாக்'கிலிருந்து பள்ளிக்கூட பிள்ளைகளின் இரைச்சல். குழந்தைகள் ஒரே குரலில் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். சத்தம்தான்; சங்கீதம் அல்ல!''அங்கே என்ன தான் நடக்குது... ஏதாவது, ஸ்கூல் ஆரம்பிச்சு இருக்காங்களா, அதுக்கெல்லாம் அனுமதி இல்லயே... போய் என்னான்னு விசாரிச்சிட்டு வா... இப்படி சத்தம் போட்டா வயசானவங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும்,'' என்றார் கோபத்துடன்!''என்னத்த விசாரிக்கிறது... அதான் வாசலிலே போர்டு தொங்குதே... ரெண்டு வாரத்துக்கு, 'சம்மர் கிளாஸ்'ன்னு! சாயி சமிதியோ, இஸ்கானோ குழந்தைகளுக்கு பஜனை பாட்டும், கதைகளும் சொல்லி, நம் கலாசாரத்தை கற்றுக் கொடுக்கறாங்களாம். அதனால, பெத்தவங்க காலையிலேயே குழந்தைகளைக் கொண்டு வந்து விட்டுட்டுப் போயிடுறாங்க,'' என்றவள், ''சரி... சத்தத்தை குறைக்கச் சொல்லி கேட்டுட்டு வர்றேன்,'' என்று கிளம்பினாள்.அச்சமயம், அங்கிருக்கும் குழந்தைகள் எல்லாம் பெரும் குரலில், 'ஹரே ராமா... ஹரே ராமா... ராம ராம, ஹரே ஹரே...' என்று கோரசாக பாட ஆரம்பித்தனர். ஒன்றையொன்று மிஞ்சும் பலமான அவர்களுடைய குரல் வளத்தால், கட்டடமே அதிரும் போல் இருந்தது.ஜானகி பாட்டிக்கும் இதனால், கொஞ்சம் அசவுகரியம் தான். இந்தச் சத்தத்தில், அவளால் 'டிவி'யில் சீரியலே பார்க்க முடியவில்லை.பக்கத்து, 'ப்ளாட்' கதவை திறந்தாள்; வராண்டாவில் குழந்தைகளின் செருப்புகள் வரிசையாக அழகாக விடப்பட்டிருந்தன. உள்ளே, ஐந்து வயதிலிருந்து, 12 வயது வரை உள்ள, 20 - 25 சிறுவர், சிறுமியர் இருந்தனர்.வட்டமாக நின்று கையைத் தட்டி தாளம் போட்டபடியே, 'ஹரே கிருஷ்ணா... ஹரே கிருஷ்ணா...' என்று பாடிக் கொண்டிருந்தனர். நடுத்தர வயது பெண்கள் இருவர் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தபடி இருந்தனர். அப்பெண்கள் மற்றும் குழந்தைகள் நெற்றியில், நாமகட்டியால் நாமம் வரையப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டுப் பெண், ஜானகியை பார்த்ததும், ''வாங்க... வாங்க...'' என்று அன்புடன் வரவேற்று, ''பிள்ளைகளா... இங்க பாருங்க... நம்மள பாக்க பாட்டி வந்திருக்காங்க; எல்லாரும் பாட்டிக்கு வணக்கம் சொல்லுங்க... பெரியவங்கள எப்படி வணங்கணும்ன்னு தெரியுமில்லயா...'' என்றாள்.சொல்லி வைத்தாற்போல, எல்லாக் குழந்தைகளும் ஜானகி பாட்டியின் காலில் விழுந்து வணங்கினர். ஆசிரியப் பெண்களும் அவள் காலைத் தொட்டு வணங்கினர். இதனால், நெகிழ்ந்து போன ஜானகி, வந்த வேலையை மறந்து, சோபாவில் அமர்ந்து, அங்கு நடப்பவற்றை கவனிக்க ஆரம்பித்தாள்.ஹரே ராமா பாட்டு முடிந்து, தசாவதாரம் ஸ்லோகம் ஆரம்பித்தது. மகா விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஏற்ப, குழந்தைகள் மீனாகவும், கூர்மமாகவும், நரசிம்மராகவும், ராமர் மற்றும் கிருஷ்ணராகவும், 'போஸ்' கொடுத்து நடித்துக் காட்டினர். 'பரவாயில்லையே... நல்லா தான் பக்தி கதைகளை சொல்லித் தர்றாங்க...' என்று நினைத்துக் கொண்டாள் ஜானகி.''இப்போ பாட்டி நமக்கு ஒரு கதை சொல்வாங்க,'' என்று, குழந்தைகளை உசுப்பி விட்டாள் ஒரு ஆசரியை. குழந்தைகளும், அவளை வற்புறுத்தவே, ஜானகியால் மறுக்க முடியவில்லை.தனக்குத் தெரிந்த வேடிக்கை கதை ஒன்றையும், மகாலஷ்மி பற்றிய கதை ஒன்றையும் கூறினாள். பின், அங்கிருந்த எல்லாருக்கும் பிரசாதமாக வாழைப்பழமும், கிண்ணத்தில் பாயசமும் கொடுத்தனர். ஜானகிக்கு ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை. கணவர் கூறியபடி அவர்களிடம் புகார் செய்யவோ, வகுப்பை நிறுத்தச் சொல்லவோ மனமே வரவில்லை. ''வீட்டில் வேலையிருக்கிறது,'' என்று சொல்லி கிளம்பினாள்.''நாளைக்கும் கண்டிப்பாக வரணும்,'' என்று குழந்தைகளும், ஆசிரியைகளும் ஒரே குரலில் கூறி, வழியனுப்பினர்.வீட்டிற்கு வந்த ஜானகிக்கு, அக்குழந்தைகள் நினைவாகவே இருந்தது. நான்கு வயது சிறு குழந்தை ஒன்று, இவள் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்திருந்தது ஞாபகம் வந்தது. அவளுக்கு இந்த அனுபவம், 20 ஆண்டுகளுக்கு முந்தியது. அவர்களுடைய ஒரே மகன் அமெரிக்காவில் தங்கி விட்டான். அங்கேயே குஜராத்தி பெண்ணை மணந்து கொண்டான். மருமகளின் முதல் பிரசவத்திற்கு உதவியாகப் போயிருக்கிறாள். பேரனும் படிப்பு முடித்து, இப்போது வேலைக்கு செல்வதாக சொன்னார்கள்.பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை போன் வரும். 'நல்லா இருக்கீங்களா... பணம் வேணுமா... ஏதாவது பிரச்னைன்னா, போன் செய்யுங்க...' அவ்வளவுதான்! மருமகள் அதிகம் பேச மாட்டாள்; மொழிப் பிரச்னை தான்; வேறு ஒன்றும் இல்லை.நாலு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா வருவர். ஜெய்ப்பூர், காஷ்மீர் எல்லாம் சுற்றி விட்டு, குஜராத்தில் இருக்கும் அவளுடைய அம்மா, அண்ணன் வீட்டிற்கு போய் விட்டு, கடைசியில் சென்னை வந்து நாலு நாட்கள் இருப்பதற்குள் விடுமுறை தீர்ந்து விடும். பேரனோ, பேத்தியோ கூட வந்தாலும், அதிகம் ஒட்ட மாட்டார்கள். அவரவர்களுடைய வாழ்வு தனி என்று புரிந்து, விவேகத்துடன் காலத்தை ஓட்டி வந்தனர். சுந்தரேசனோ, ஜானகியோ பிள்ளையைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள்.கடவுள் புண்ணியத்தில் பென்ஷன் கணிசமாக வருவதால், காலத்தைத் தள்ள அதிகம் கஷ்டப்படவில்லை. தனிமை தான் கொஞ்சம் உறுத்தல்.ஆனால், ஏனோ இன்று மனம் நிறைவாக இருந்தது. சிறிது சந்தோஷமும், உற்சாகமும் நடையில் தெரிந்தது. பகல், 1:00 மணிக்கு பெற்றோர் வந்து குழந்தைகளை அழைத்து சென்றனர். பிற்பகலிலும், மாலையிலும் பில்டிங்கில் வழக்கமான அமைதி.அடுத்த நாள் காலை, 9:00 மணியிலிருந்தே குழந்தைகள் வர ஆரம்பித்தனர். சிறிது சிறிதாக கூச்சலும் அதிகமாயின.''ஏண்டி... நேத்து நீ போய் ஒண்ணுமே சொல்லலயா... திரும்பவும் ஆரம்பிச்சுட்டாங்களே...'' என்று கோபப்பட்டார் சுந்தரேசன்.''சரி சரி... வேலைய முடிச்சிட்டுப் போறேன்,'' என்று வேண்டா வெறுப்பாக சொன்னாலும், உண்மையில் அங்கு போக ஆசைப்பட்டாள் ஜானகி.சிறிது நேரத்திற்கு பின், அங்கே போனபோது, மீண்டும் குழந்தைகளும், ஆசிரியைகளும் கொடுத்த உற்சாக வரவேற்பு, அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. ''ஹை... பாட்டி வந்தாச்சு; இன்னிக்கும் கதை சொல்லுங்க,'' என்று சூழ்ந்து கொண்டனர்.அப்போது, அங்கே ஒரு இளைஞனும் வந்தான். சிவந்தமேனி, நெடு நெடு வென்ற உயரம், பஞ்சகச்சம், வெள்ளை ஜிப்பா அணிந்து, நெற்றியில் கோபியும், கீற்று நாமமும்... ஆனால், பார்க்க வெளிநாட்டை சேர்ந்தவன் போல் இருந்தான்.''இவர் இஸ்கானைச் சேர்ந்தவர்; ஜெர்மானியர். அங்கு ராமகிருஷ்ண மடத்திலிருந்தார். இப்போ சென்னையில் இஸ்கான் கோவிலில் இருக்கிறார். நம் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தால் ஈர்க்கப்பட்ட உண்மையான துறவி இவர். இன்று, இவர் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பார்,'' என்று அறிமுகப்படுத்தினாள் அந்த இல்லத்துப் பெண்.ஜானகிக்கு ஒருபுறம் ஆச்சரியமாகவும், அதேசமயம் குழப்பமாகவும் இருந்தது. 'நம் குழந்தைகள் நம் புராணங்களைத் தெரிந்து கொள்வதற்கும், 'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என்று பஜனை செய்வதற்கும், ஒரு வெளிநாட்டுக்காரர் வந்து சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறதே... இவர்களுடைய பெற்றோரால் இது கூடச் செய்ய முடியவில்லையா...' என்று, அவளுக்கு கோபம் வந்தது. அதனால், 'இவன் என்ன சொல்லப் போகிறான்...' என்று அவநம்பிக்கையோடு கவனிக்க ஆரம்பித்தாள் ஜானகி.வந்தவன் முதலில், ''மாதாஜி நமஸ்தே...'' என்று ஜானகியின் காலில் விழுந்து வணங்கினான். தன்னை உண்மையான இந்து என்றும், பெயர் கூட, கிருஷ்ணதாஸ் என்று மாற்றிக் கொண்டதாகக் கூறினான்.பின், தன் பையிலிருந்து சில புத்தகங்களை எடுத்து குழந்தைகளுக்கு தந்தான். பள்ளியில் கொடுக்கும், 'ஒர்க்-புக்' போல இருந்தது.நம் புனித மலைகளைப் பற்றி ஒரு பாடம்; இமயமலையின் புனித ஸ்தலமான கைலாஷ் மானசரோவர், திருப்பதியின் ஏழுமலைகள், திருவண்ணாமலை போன்ற புனித மலைகளைப் பற்றி, சி.டி., போட்டு விளக்கினான்.அடுத்தபடியாக புனித நதிகளான கங்கை, யமுனை, நர்மதா, கோதாவரி, காவிரி என்று பல நதிகளைப் பற்றி கூறியவன், ஹரித்வார் மற்றும் காசியிலுள்ள கங்கைக்கும் தினமும் மாலை பூஜை மற்றும் ஆரத்தி செய்வதையும் சி.டி., போட்டு காண்பித்தவன், அதை, ஆங்கிலம் மற்றும் தமிழிலும் விளக்கினான்.காடுகளும், மலைகளும், நதிகளுமே கடவுள் ஸ்வரூபம். அவற்றை மாசுபடுத்தக் கூடாது; அவைகளை அழிக்காமல் சுத்தமாகப் பராமரிக்க வேண்டிய அவசியம் பற்றி விளக்கினான்.புவியியல், வரலாறு, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு இவற்றுடன் ஆன்மிகத்தையும், சமூகவியலையும் இணைத்து அவன் கூறியது, ஜானகிக்கு பிரமிப்பாக இருந்தது. அவனைப் பற்றிய தன் அபிப்ராயத்தை மாற்றிக் கொண்டாள்.ஒரு மணி நேரத்தில் அவன் புறப்பட்டு சென்றான். குழந்தைகள் மீண்டும் இவளைச் சூழ்ந்து கொண்டன. ஒரு சிறுமி, இவள் மடியில் ஏறி, சுவாதீனமாக உட்கார்ந்து கொண்டாள்.'நம்மிடம் இவர்கள் இவ்வளவு அன்பாக இருக்கின்றனரே... இவர்களுடைய வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகளிடம் எப்படி ஆசையாக இருப்பர்...' என்று தோன்றியது. பேச்சை ஆரம்பிக்க அதுவே முதலாக இருந்தது.''குழந்தைகளே... கதையெல்லாம் அப்புறம் சொல்கிறேன்... முதல்ல உங்கள்ல யார் யார் வீட்டில பாட்டி, தாத்தா இருக்காங்க?'' என்று கேட்டாள்.இருபது குழந்தைகளில் ஏழு, எட்டு தான் கையைத் தூக்கியது.''பிள்ளைகளா... நீங்க எல்லாரும் பாட்டி, தாத்தாவிடம் ஆசையாக, மரியாதையாக இருக்கணும். எல்லா பெரியவர்களிடமும் இதே போல் நீங்கள் பிரியமாக இருந்தா, அவங்களும் உங்களுக்கு கதை சொல்லி, விளையாடி, நல்ல நண்பர்களா இருப்பாங்க,'' என்றவுடன், ஒரு பெரிய பெண், ''தாத்தா எப்படி பிரண்ட் ஆக முடியும்,'' என்று வாயை மூடி சிரித்தது.அவளைப் பார்த்து, ''நீ முயற்சி செய்து பாரேன்.... தாத்தாவும், பாட்டியும் கூட பிரண்ட் ஆகிடுவாங்க. இப்போ நான் உங்களுக்கு தோழியாகலயா அதேபோல,'' என்று விளக்கினாள் ஜானகி.'பிரண்ட்' என்று சொன்னவுடனேயே குழந்தைகள் இன்னும் நெருக்கமாயின. ஏழும், எழுபதும் கூடி விளையாடி மகிழ முடியும் என்று தோன்றியது. ஒரு பையன் அருகில் வந்து, தாத்தாவுடன் நடைபயிற்சி போவதாகச் சொன்னான். மற்றொரு பெண், தன் பாட்டி, பாடம் சொல்லிக் கொடுப்பதாக சொன்னாள். இவ்வாறு அவரவர் பாட்டி, தாத்தாவைப் பற்றி கூறினர். அநேகமாக எல்லார் வீட்டிலும் பெற்றோர் ஆபீசுக்குப் போய் விடுவது தெரிந்தது.சிறிது நேரத்தில் அனைவருக்கும் சுண்டல் கொடுக்கப்பட்டது.''நாளைக்கு உங்களுக்கு, 'க்ராப்ட்' வேலை செய்ய கத்துக் கொடுக்கிறேன்,'' என்று கூறி, ஆசிரியைகள் விடை பெற்றனர். நேற்றை விட, இன்று அதிகம் நேரம் தங்கி விட்டதை உணர்ந்து வீட்டிற்கு கிளம்பினாள் ஜானகி.அப்போது ஒரு சிறுபெண் அருகில் வந்து, புடவையைப் பிடித்து இழுத்தது. திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம்.''என்னம்மா சொல்லு... உன் பெயர் என்ன?'' என்று கேட்டாள்.''வர்ஷினி,'' என்று கூறிய சிறுமி, தயக்கத்துடன் ஜானகி முகத்தைப் பார்த்தாள்.''என்ன விஷயம் சொல்லு,'' என்று உற்சாகப்படுத்தினாள்.''ஒண்ணுமில்ல... எங்க வீட்டில பாட்டி இல்ல; தாத்தா மட்டும் தான் இருக்கிறார்,'' என்றாள்.ஒரு வேளை, பாட்டி இறந்திருப்பாள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே ஆறுதலாக, ''அதனால் என்ன... தாத்தா தான் இருக்கிறாரே... அவரோட பிரண்டாக இரு,'' என்றாள்.''சரி...'' என்ற குழந்தை, மேலும் தயங்கித் தயங்கி, ''நான் உங்களையே பாட்டியாக வச்சுக்கறேனே... நீங்க என் பாட்டியாக இருப்பீங்க தானே...'' கெஞ்சலுடன் குழந்தை சொல்ல, ஜானகியின் உள்ளம் நெகிழ்ந்தது. குழந்தையை இழுத்து அணைத்து, ''கண்டிப்பாக நான் உன் பாட்டிதான்; 'பிரண்டு' தான். இதோ இந்த வீட்டில் தான் நானிருக்கேன். நீ எப்ப நினைச்சாலும் பாட்டி வீட்டிற்கு ஓடி வந்துடு என்ன...'' என்று தட்டிக் கொடுத்தாள்.தன் போர்ஷனுக்கு நடந்து போகும் போது, அக்குழந்தை சொன்னது விடாமல் காதில் ஒலித்தது. 'இதென்ன குழந்தை வாக்கா, தெய்வ வாக்கா! அடி அசடே... இங்கே இவ்வளவு அன்பு பேரன்களும், பேத்திகளும் இருக்கும் போது, எதற்காக எங்கோ கண் காணாத தேசத்தில் இருக்கும் பேரக் குழந்தைகளை நினைத்து ஏங்க வேண்டும்...' என்று யாரோ கன்னத்தில் அடித்து சொல்வது போலிருந்தது.மனம் தெளிவாக, நிறைவுடன் வீட்டிற்குள் நுழைந்தாள். ஒரு வேளை ஏழுக்கும், எழுபதிற்கும் ஒரே மாதிரியான பிரச்னை தானோ!அடுத்தநாள் காலை, மீண்டும் பக்கத்து வீடு கலகலப்பாயிற்று. ''என்னடி... நீ என்ன தான் செய்தே... திரும்பவும் கூச்சலும் கூப்பாடுமா ஆயிடுச்சே,'' என்று கோபப்பட்டார் சுந்தரேசன்.''இன்னும், 10 நாட்கள் தானே... அப்புறம் ஸ்கூல் திறந்தாச்சுன்னா, இங்கே எந்த சத்தமும் இருக்காது. அது வரை கொஞ்சம் பொறுத்துக்கங்க,'' என்றாள் ஜானகி.''என்ன... இன்னும், 10 நாட்களா,'' அதிர்ந்தார் சுந்தரேசன்.''ஆமாம்... இதுல உங்களுக்கு கஷ்டமாயிருந்தா, ரெண்டு காதிலேயும் பஞ்சு வச்சுகிட்டு, உள் ரூமில் போய் படுத்துக்கங்க.''''வேறே வழியில்லயா... ஆமாம்... நீ இப்ப எங்கே கிளம்பிட்டே?''''சம்மர் கிளாசுக்கு தான் போறேன்,'' என்று சொல்லி, கூடையில் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு, பக்கத்து பிளாட்டை நோக்கி சென்றாள் ஜானகி பாட்டி!மீனாக்ஷி ராமநாதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !