உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —நான் பொறியியல் மூன்றாமாண்டு சேர இருக்கிறேன். வாழ்வா, சாவா என்ற நிலையில், இந்த கடிதத்தை எழுதுகிறேன். தயவு செய்து, என்னை சீக்கிரமாகத் தெளிவு அடையச் செய்யுங்கள்.நான் கல்லூரியில் இருக்கும், பெண்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகிறேன். விடுதியில் என் அறை தோழி, அவரின் நண்பரை, எனக்கு போன் மூலம் அறிமுகப்படுத்தினாள். கல்லூரி வேலை நேரம் போக, மீதியுள்ள நேரத்தில், அவரை புகழ் பாடிக் கொண்டே இருந்தாள் அவள். நான் ஒருமுறை தான், அவரிடம் போனில் பேசியிருந்ததால், அவரைப் பற்றிய மதிப்பு, என் மனதில் கூடிக்கொண்டே இருந்தது.அவள் எப்போதெல்லாம் அவருக்கு, போன் செய்ய போவாளோ, அப்போதெல்லாம் நானும், இரண்டு வார்த்தை பேச ஆரம்பித்தேன். அந்த நாள், எனக்கு ராசியாக இருந்த மாதிரி ஒரு உணர்வு. அதனால், 'எனக்கு தேர்வு நேரத்தில், நீங்கள் வாழ்த்த வேண்டும்...' என்றும், 'அப்போ தான் தேர்வில் நிறைய மதிப்பெண் வாங்குவேன்...' என்றும், அவரிடம் தனியாக, போன் செய்து கூறினேன். இது, என் தோழிக்கு தெரியாது.அவர், விடுதிக்கு போன் செய்து, எனக்கு வாழ்த்தும் போதெல்லாம், பொறாமைப்பட்டாள் என் தோழி. இதனால், எங்களுக்குள் அடிக்கடி மனஸ்தாபம் ஏற்பட்டது. நான், அதை பொருட்படுத்தவில்லை. நான் நடந்து முடிந்த தேர்வில், வகுப்பிலேயே முதலாவதாக தேர்வானேன். அதற்கு காரணம், அவர் தான் என்று நினைத்தேன்.அதனால், விடுமுறைக்கு வீட்டிற்கு செல்லும் போதெல்லாம், நாங்கள் போனில் பேச ஆரம்பித்தோம்; முகம் பார்க்காமலேயே. இந்நிலையில், என்னால், அவர்களுக்குள் சண்டை வர ஆரம்பித்தது. அவர், அவளிடம் பேச மறுப்பதாகவும், என்னிடம் பேச வேண்டுமெனவும் அவளிடம் கூறியுள்ளார். இதை, அவள் தவறாக புரிந்து கொண்டாள். நாங்கள் காதலிக்கிறோம் என்று நினைத்து விட்டாள்.நான் அவரிடம் வழக்கம் போல பேசினேன். எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. இப்போது, என் தோழி அவரிடம் பேசாமல், அவரை பற்றி தவறாக கூற ஆரம்பித்தாள். நான் நம்பவில்லை. அவள், அவர் மேல் அபரிமிதமான பாசம் வைத்திருந்தாள். ஆனால், என்னிடம் அது காதல் இல்லை என்றாள்.அவர் என்னிடமே பேசி வந்தார். இதனால், என்னைப் பற்றி தவறாக பேச ஆரம்பித்தாள். நான், மறைமுகமாக சொல்லியும், அவள் புரிந்து கொள்ளவில்லை. நேரடியாகவும் திட்டி விட்டேன். விடுதி வார்டனிடம் புகார் செய்தால், அவளுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகும் என்று நினைத்து, நான் இரண்டாம் வருடம், வேறு அறைக்கு சென்று விட்டேன்.இந்நிலையில், அவருக்கும், எனக்கும் இடையே ஒரு ஈர்ப்பு வந்தது. பரஸ்பரமாக நேசித்து வந்தோம். நேசிக்க ஆரம்பித்த காலத்தில், நான் அவரை புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்தேன். அதற்கு பின், அவர் சென்னையில் இருந்து, அடிக்கடி என்னை பார்க்க வருவார். நாங்கள் இருவரும் சந்திக்கும் வேளைகளில், அவர் என்னிடம் கண்ணியமாக நடந்து கொள்வார்.நான் காதலித்தவர், ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்தவர்; கிறிஸ்தவரும் கூட. அவரின் வீட்டில், எங்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டனர்.ஆனால், என் உறவினர் ஒருவர் என்னை காதலித்தார். அவர் அரசாங்க வேலையில் இருக்கிறார். நான் அவருக்கு அனுப்பிய பார்வேர்டு மெசேஜ் களை வைத்து, நான் அவரைக் காதலிக்கிறேன் என்று நினைத்து விட்டார். நான் மறுத்து விட்டதால், விடாப் பிடியாக, என்னிடம் காரணம் கேட்டார். நான் என் காதலைப் பற்றி கூறி விட்டேன்.அவரும், 'நானே உங்களை சேர்த்து வைக்கிறேன்...' என, ஆசை வார்த்தை கூறினார். நானும், அதை நம்பினேன்.என் பெற்றோர், எனக்கு நிறைய அறிவுரை கூறினர். அவர்கள் சொல்லும் போது, நான் அவசரப்பட்டு விட்டேனோ என்று தோன்றுகிறது. ஆனால், அவரின் அழுகையை போனில் கேட்டபோது, குற்ற உணர்ச்சியாய் இருக்கிறது. மதில் மேல் பூனையாக இருக்கிறேன். என், பெற்றோரின் சம்மதம் முக்கியம் என, அவரிடம் தெளிவாகச் சொல்லி விட்டேன். ஒரு வேளை கடைசி வரை, எங்கள் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், என் வாழ்க்கை மட்டுமல்ல, அவரின் வாழ்க்கையும் பாழாகும். எனக்கு, இப்போது என் படிப்பு தான் முக்கியம்.அதனால், அவரை மறப்பது சரியா? அப்படி மறந்தால், அது நான் அவருக்கு செய்யும் துரோகம் ஆகாதா? நான் தொடர்ந்து, அவரைக் காதலிக்கிறேன் என்றால், அது, என் பெற்றோருக்கு ஏமாற்றமாகாதா? யார் பக்கம் போவது?அவரும், என் பெற்றோரும், என் மேல், 100 சதவீதம் அன்பு வைத்திருக்கின்றனர் என்பது உண்மை. நான் என்ன செய்வது? என் வாழ்க்கையே, நீங்கள் கூறும் பதிலில் தான் இருக்கிறது. விரைவில் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.— இப்படிக்கு, அன்பு மகள்.அன்புள்ள மகளுக்கு —உன் உணர்வுப்பூர்வமான கடிதத்தை முழுமையாக வாசித்தேன். விடுதி தோழி, தன்னுடைய காதலனைப் பற்றி உன்னிடம் உயர்வாக பேசி வந்திருக்கிறாள். அதை கேட்டு, தோழியின் காதலன் மீது உனக்கு இனம்புரியா அபிமானம் பூத்திருக்கிறது. தோழி, தன் காதலனுடன் பேசும்போது, பக்க வாத்தியமாக, இரண்டொரு வார்த்தை, நீயும் அவனிடம் பேச ஆரம்பித்திருக்கிறாய். அதன் பின், முகம் பார்க்காமலேயே, அந்த குரலுடன் தனித்து உறவாடி, காதலாகி கசிந்திருக்கிறாய். அந்த குரலை சந்திப்பதற்கு முன், அரசு பணியில் இருக்கும் உறவினர் மீது, 'சாப்ட் கார்னர்' கொண்டு காதல் அர்த்தம் தொனிக்கும் பார்வர்டு எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி இருக்கிறாய். உன் காதலன் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன் என்பதால், உன் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட மறுக்கின்றனர் உன் பெற்றோர்.பிடிவாதமாக இருந்து காதலனையே மணப்பதா அல்லது பெற்றோர் சொல் கேட்டு, காதலை உதறி தள்ளுவதா என, இருதலைக்கொள்ளி எறும்பாய் தத்தளிக்கிறாய் இல்லையா செல்லம்?இனி, நடக்க வேண்டியதை பேசுவோம் மகளே!நீ ஒரு குழப்பமான மனநிலை உள்ள பெண். எந்த பிரச்னைக்கும் தெளிவான முடிவை யோசிக்கத் தெரியாது உனக்கு. உன் காதலனின் மைனஸ் பாயின்ட்களை, உன் பெற்றோர் அடுக்கும்போது, உன் காதல் தவறோ என, வெள்ளந்தியாய் யோசிக்கிறாய்.உன் தோழியின் காதலனை, 'அவனது குரல், அதிர்ஷ்டம் அறிவிக்கும் குரல்' என்கிற பாவனையில் கவரப்பட்டிருக்கிறாய். வெறும் தொலைபேசி நண்பனாக இருந்தவனை, பேசி பேசி தீவிர காதலனாக்கி இருக்கிறாய். உங்கள் காதலை, காதலன் வீட்டுக்கு தெரிவித்து, அவர்களின் அனுமதி பெற்றிருக்கிறாய். காதலனின் அம்மாவை விட்டு, உன் பெற்றோரிடம் பேச வைத்திருக்கிறாய். மொத்தத்தில், நீ தான் உலகம் என்ற நிலைக்கு உன் காதலனை கொண்டு போய் நிறுத்தி விட்டாய். காதலில் ஆக்டிவ் பார்ட்னராக செயல்பட்டுவிட்டு, இப்போது, நீ மதில் மேல் பூனையாக நிற்றல் சரியா?கலப்புத் திருமணம் ஏற்படுத்தும் பின்னடைவுகளை, இடியாப்ப சிக்கல்களை சமாளிக்கும், விடுவிக்கும் சாதுர்யத்தை கை கொள்ள தான் வேண்டும்.உன் படிப்பை முடித்து, வேலைக்கு போகும் வரை, உன் காதலனை காத்திருக்கச் சொல். இந்த இடைப்பட்ட காலத்தில், உன் பெற்றோருடன் பேசி, உங்கள் காதலுக்கு ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்து. திருமணம் நடப்பதற்கு முன், எக்காரணத்தை முன்னிட்டும், நீயும், உன் காதலனும் உடலுறவு வைத்துக் கொள்ளாதீர்கள். மூன்று ஆண்டுகள் காத்திருக்க முடியாமல், உன் காதலன் வேறு துணை தேடிக் கொண்டால், கலங்கி கண்ணீர் விடாதே. மூன்று ஆண்டு இடைவெளியில், உனக்கு புதிதாக ஒரு ஆணிடம் காதல் கூட ஏற்படலாம். எவ்விளைவுக்கும் நீயும், உன் காதலனும் ஆயத்தமாய் இருக்க வேண்டும்.மூன்று ஆண்டு காலத்தில், எவ்வித அசம்பா விதமும் நடக்காமல், உங்கள் காதல் முன்னெப்போதையும் விட, வலுவடைந்து நின்றது என்றால், அது உங்களிருவரின் வெற்றி. அப்போதும், உங்கள் காதலுக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்க வில்லையெனில், சங்கடப்படாதே மகளே. பதிவு திருமணத்திற்கு தயாராகு. மூன்றாண்டு இடைவெளியில், உன் காதலனை, சி.ஏ., படிக்கச் சொல். அதனால், திருமணத்தின் போது, இருவருமே நல்ல சம்பளம் தரும் பணியில் இருப்பீர்கள். முதல் குழந்தை பிறந்த பின், உன் பெற்றோர், பதிவு திருமணம் செய்து கொண்ட உங்களிடம் ராசி ஆகி விடுவர். மேல்ஜாதி, கீழ்ஜாதி பாகுபாடுகள் மறைய, உங்கள் காதல் திருமணம் ஒரு காரணமாய் திகழட்டுமே கண்ணம்மா!— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !